நாளை நடைபெறும் 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு, திங்கள் அன்று நடைபெறும் 3-வது பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார பங்களிப்பு (ஆர்.சி.இ.பி.) உச்சி மாநாடு உள்ளிட்ட 35-வது ஆசியான் உச்சி மாநாடும், அது தொடர்பான உச்சி மாநாடுகளும் நடைபெற உள்ள நிலையில் பிராந்திய மற்றும் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பாங்காக் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த பேட்டியின் முழு விவரம் கீழே
உங்கள் தலைமையின் கீழ் இந்தியா உலக வல்லரசாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அளப்பரிய வளமையும், பன்முகத்தன்மையும் கொண்ட தொன்மையான நாகரீகம் இந்தியாவுடையது என்பது நன்கு அறியப்பட்டதாகும். கடந்த சில நூற்றாண்டுகள் வரை உலகின் வளர்ச்சிக்கு இந்தியா பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. அறிவியல், இலக்கியம், தத்துவம், கலை, கட்டுமானம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கு அது பங்களித்துள்ளது. இதையெல்லாம் செய்கிற போது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று அது எண்ணியதில்லை. ஆனால் கடல் கடந்தும், பெருங்கடல்களைக் கடந்தும் நீடித்த உறவுகளைப் பராமரித்தது. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார துறையிலாகட்டும் அல்லது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலாகட்டும், விண்வெளி ஆய்விலாகட்டும் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலாகட்டும் உலகத்திற்கு எங்களின் பங்களிப்பை அதிகரித்து வருகிறோம்.
இன்று உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பெருமளவு பங்களிப்பு செய்யும் நாடு ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்திய மக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போதுமான அளவு காண்பித்திருக்கிறார்கள். சரியான சூழல்களை அவர்கள் பெறும்போது அவர்களின் உண்மையான திறனை அறிந்து கொள்ள முடியும்.
இந்திய மக்களின் வாழ்க்கையை எளிதாக்க உலகிலேயே மிகப் பெரிய இயக்கத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். சிறந்த அடிப்படைக் கட்டுமானம், சிறந்த சேவைகள், சிறந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் வழியாக அவர்களின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தி வருகிறோம்.
அனைத்துக் கிராமங்களையும் மின்மயமாக்கியிருப்பதால், வங்கி முறைக்குள் 350 மில்லியன் குடிமக்களைக் கொண்டு வந்திருப்பதால், சமூக நலத்திட்டங்களில் கசிந்து வீணாகும் பண அளவைக் குறைத்திருப்பதால், ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் 150 மில்லியன் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதால், டிஜிட்டல் சேவைகள் மூலம் நிர்வாகம் மேம்படுத்தப்பட்டிருப்பதால், டிஜிட்டல் பொருட்களுக்கான சந்தை வெகு வேகமாக வளர்ந்து வர கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், வேகமாக வளர்ந்து வரும் பாதையில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியிருப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. எளிதாக வணிகம் செய்யும் நாடுகளுக்கான உலக வங்கியின் குறியீட்டில் 80 இடங்களுக்கு மேல் நாங்கள் முன்னேறியிருக்கிறோம். இதனை ஜனநாயக கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, எங்களின் சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்துக் கொண்டே செயல்படுத்தியிருக்கிறோம்.
இந்தியாவில் முன்னேற விரும்பும் நடுத்தர வகுப்பினர் பெரும் எண்ணிக்கையில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற்றிருக்கிறார்கள். வாழ்க்கை ஏணியில் மேலும் ஏறுவதற்கு அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்” என்பதே எங்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. இதன் பொருள் அனைவர் மீதும் நம்பிக்கை வைத்து அனைவரின் ஒத்துழைப்போடு அனைவருக்கும் வளர்ச்சி என்பதாகும். அனைவரும் என்பது எங்களின் சொந்தக் குடிமக்களை மட்டும் அர்த்தப்படுத்துவது அல்ல, ஒட்டு மொத்த மனிதகுலத்தையும்.
எங்களுக்குப் பக்கத்தில் நட்பு ரீதியாக உள்ள அனைவருடனும் கூட்டான வளர்ச்சியை உருவாக்க நாங்கள் தீவிரமாக, பணியாற்றி வருகிறோம். உலக அளவிலான, எல்லைகளுக்கு அப்பால் உள்ள சவால்களை முறியடிக்க சர்வதேச கூட்டுறவையும் நாங்கள் கட்டமைக்க, கோருகிறோம். இவற்றில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தடுப்புக்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் முன்முயற்சி ஆகியவையும் அடங்கும்.
சமகால எதார்த்தங்களுக்கு இடையே பலதரப்பு உறவை வலுப்படுத்தவும், சீரமைக்கவும் இந்தியா வலுவான முன்னெடுப்பைச் செய்கிறது. உலக அளவில் நிச்சயமற்றதன்மை நிலவும் காலத்தில், விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும், ஜனநாயகத்தன்மை கொண்ட, வலுமிக்க இந்தியா நிலைத்தன்மைக்கும், வளத்திற்கும், அமைதிக்கும் தொடர்ந்து ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.
21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆசியாவிலும், உலகத்திலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் பங்களிப்பு செய்ய இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் கிழக்காசிய செயல்பாட்டு கொள்கையில் ஆசியான் அமைப்பின் முக்கியத்துவம் என்னவாக இருக்கிறது?
எங்களின் கிழக்காசிய செயல்பாட்டுக் கொள்கையின் மையமாக ஆசியான் இருக்கிறது. இது மட்டுமே கூட்டுறவு செயல்பாட்டுக் கருவியாக உள்ளது. இதன் மூலம் இதுவரை 16 ஆண்டுகளாக இடையீடு ஏதுமில்லாமல் உச்சி மாநாடு நிலையிலான பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.
ஏனெனில் ஆசியான் பிராந்தியம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான முக்கிய நுழைவாயில் மட்டுமல்ல, கலாச்சார ரீதியிலும் நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். மேலும் ஆசியான் என்பது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகுந்த செயல் ஊக்கம் உள்ள பகுதியாக உலகில் இன்று திகழ்வதும் இதற்குக் காரணமாகும். வளர்ந்து வரும் இந்தோ – பசிபிக் வளர்ச்சியின் மையமாக வலுவான, ஒன்றுபட்ட, வளமிக்க ஆசியான், பங்களிப்பை செய்ய இந்தியா விரும்புகிறது. இது இந்தியாவின் வளத்தோடு பாதுகாப்பு நலன்களையும் கருத்தில் கொண்டதாகும்.
ஆசியான் உடனான பணிகள் இந்தியாவின் கிழக்காசிய செயல்பாட்டுக் கொள்கைக்கும், உத்திகளுக்கும் முக்கிய அம்சமாக உள்ளது. எங்களின் நெருக்கமான பண்பாட்டுத் தொடர்புகள் வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. அதன் மீது நாங்கள் வலுவான, நவீன, பன்முகத்தன்மைகொண்ட உத்திகளுக்கான பங்களிப்பைக் கட்டமைக்கிறோம். ஆசியானை வலுப்படுத்துவது, போக்குவரத்து தொடர்பை விரிவுபடுத்துவது, இந்தியா-ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவது ஆகியவை எங்களின் கிழக்காசிய செயல்பாட்டுக் கொள்கையில் முன்னுரிமை கொண்டவற்றில் சிலவாகும்.
ஆசியான் அமைப்புக்குத் தாய்லாந்து தலைமைப் பொறுப்பில் உள்ள நிலையில் அதனுடன் இந்தியாவின் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்நாட்டிற்கு நாங்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது?
இந்தோ-பசிபிக் அமைப்புக்கான தொலைநோக்குப் பார்வையை இந்தியா கோடிட்டு காட்டியுள்ளது. இது இந்தப் பகுதியில் உள்ள நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடற்பரப்பில் உள்ள நாடுகளின் முதன்மை மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய தன்மையை அங்கீகரிக்கிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி – லா பேச்சுவார்த்தையில் இது தொடர்பான எங்களின் கருத்துக்கள் என்னால் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்தோ-பசிபிக் அமைப்புக்கான பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பு திறந்த நிலையில், வெளிப்படைத்தன்மையோடு, அனைவரையும் உள்ளடக்கியதாக, விதிகள் அடிப்படையிலானதாக, சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடல்சார் சட்டம் குறித்த ஐ.நா. தீர்மானம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடையதாக, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தடையில்லா வர்த்தகம் ஆகியவற்றுடனான நிலைத்த கடல் பாதுகாப்புச்சூழல் எந்தவொரு பிராந்தியத்திலும் பாதுகாப்புக் கட்டமைப்புக்கு இன்றியமையாததாகும்.
2015-ல் சாகர் என்ற கோட்பாட்டை நான் உருவாக்கினேன். இந்தப் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கானதாக அது இருக்கிறது. இந்தியில் சாகர் என்றால் கடல் என்று பொருள். பரஸ்பர நம்பிக்கையை விரிவுபடுத்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தத் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த நாங்கள் கோருகிறோம். பிராந்திய பாதுகாப்பு மற்றும் அதற்காக கோடிட்டுக் காட்டப்படும் கோட்பாடுகளில் பொதுத்தன்மையை உருவாக்கவும், தற்போதுள்ள கட்டமைப்புகள் மற்றும் செயல்பாட்டு முறைகளின் மேல் பொதுவான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கு சாத்தியமாகக் கூடிய நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தியா பாடுபடும்.
இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் பார்வையுடன் இந்தோ-பசிபிக் ஒருங்கிணைப்பை இந்தியா எவ்வாறு செய்ய இயலும்?
இந்தோ-பசிபிக் குறித்து ஆசியான் தனது சொந்தப் பார்வையை வைத்திருப்பதற்கு நாங்கள் உதவுகிறோம். இது எங்களின் இந்தோ-பசிபிக் பார்வையோடு குறிப்பிடத்தக்க வகையில் ஒத்துப் போகிறது. குறிப்பாக கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறையிலிருந்து. இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்துவதில் ஆசியான் அமைப்பின் ஒற்றுமையும், மத்தியத்துவமும் முக்கிய அம்சமாக இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம். இது இந்தப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான ஆசியானின் மத்தியத்துவத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல, ஆசியானைத் தலைமையாகக் கொண்ட பிராந்திய நடைமுறைகளும், தலைவர்களால் மட்டுமே தலைமை தாங்கப்படும் அமைப்பான கிழக்காசிய உச்சி மாநாடும் அதிகபட்சம் அனைவரையும் உள்ளடக்கியதாகும். இந்தப் பிராந்தியத்திற்கான முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்குத் தற்போது இது வாய்ப்பாக உள்ளது.
கடற்பகுதி பாதுகாப்பு, போக்குவரத்துத் தொடர்பு, பொருளாதார வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி ஆகியவை அமைதியான, வளமிக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைக்க எங்களுடைய மற்றும் ஆசியான் அணுகுமுறைகளில் முன்னுரிமைப் பகுதிகளாகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற ஆசியானில் உள்ள எங்களின் கூட்டாளிகளுடன் பணியாற்றுவதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பல பிராந்திய சக்திகள் போட்டியிடுகின்ற மெக்காங் துணைப் பகுதி வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
கடல்வழி, வணிகம், கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றில் இந்தப் பகுதியில் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் தொடர்புகள் நீண்ட வரலாறு கொண்டவை. இன்றைய உலகில் நாங்கள் இந்தத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதோடு புதிய பிராந்திய பங்களிப்பாளர்களாகவும் உருவாகியிருக்கிறோம். மெக்காங்-கங்கா ஒத்துழைப்பு முன்முயற்சி 19 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தாய்லாந்து தலைமையிலான அயேயாவாடி-சாவ்-ப்ரயா-மெக்காங் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா அண்மையில் இணைந்தது. ஒருங்கிணைப்பை உருவாக்கவும், ஒத்துழைப்பு முயற்சிகளில் போலியைத் தவிர்க்கவும் மெக்காங் நாடுகளுக்கு வெளியேயுள்ள பங்குதாரர்கள் அனைவரையும் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
அதே சமயம் தனித்துவமான அடையாளங்களையும் நாங்கள் அறிந்தே உள்ளோம். இந்த பிராந்தியக் கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக இந்தியத் தன்மையில் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகள், மெக்காங்-கங்கா ஒத்துழைப்பு, பிம்ஸ்டெக் கட்டமைப்பில் உள்ள மெக்காங் நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். இந்தக் கட்டமைப்புகள், பணிகள், நடைமுறைகள், ஒத்துழைப்பின் தீவிரம் ஆகிய மையப் பொருட்களுக்கு இடையே முரண்பாடு வராமல் பார்த்துக் கொள்கிறோம்.
இணக்கமான தன்மையுடன் நீடிப்பதற்கும், வளர்ச்சிக்கான ஊக்கத்தைப் பெறுவதற்கும் பிராந்திய வளத்திற்கும் மெக்காங் துணைப் பிராந்தியத்தில் உள்ள பலவகைப்பட்ட குழுக்களுக்கும் அதற்கு அப்பாற்பட்ட பங்குதாரர்களுக்கும் கூட போதிய நம்பிக்கை உள்ளது.
விரிவான கிழக்காசிய நாடுகள் செயல்பாட்டு கொள்கைக்குள் பிம்ஸ்டெக் எவ்வாறு பொருந்தும்?
பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சிக்கான (பிம்ஸ்டெக்) அமைப்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த அமைப்பு தெற்காசியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையே தனித்துவமான இணைப்பை அளித்துள்ளது. இதில் ஐந்து உறுப்பினர்கள் (பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை) தெற்காசியாவில் இருந்தும் இரண்டு உறுப்பினர்கள் (மியான்மர், தாய்லாந்து) தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் இடம்பெற்றுள்ளனர்.
காட்மாண்டுவில் நடைபெற்ற 4 ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு பிராந்திய ஒத்துழைப்புக்கும், பிம்ஸ்டெக் நகல் சாசனத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் மற்றும் பிம்ஸ்டெக் மேம்பாட்டு நிதியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் போன்ற பிம்ஸ்டெக்கின் அமைப்பு சார்ந்த நடைமுறைகளை வலுப்படுத்தவும் முக்கியத்துவம் அளித்தது. இந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை முறைப்படுத்துவதில் இந்தியா தீவிரப் பங்களிப்பை செய்தது. பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு, பேரிடர் நிர்வாகம், பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, சுகாதாரம், டிஜிட்டல் வழியான தொடர்பு, கலாச்சாரம் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய செயல்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற பன்முகப்பட்ட துறைகளின் திறனை முன்னகர்த்தவும், இந்தியா மேற்கொண்டுள்ள பல முன்முயற்சிகளை நாங்கள் அறிவித்திருக்கிறோம். கிழக்காசிய நாடுகளின் செயல்பாட்டுக் கொள்கையில் பிம்ஸ்டெக் முக்கியமான ஒரு பகுதி என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது.
இந்த ஆண்டு மே மாத இறுதியில் எமது புதிய அரசு 2 ஆவது முறையாக பதவியேற்ற போது, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள் என்பதை வாசகர்கள் அறிவார்கள். எங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான கவுரவம் இந்த நாடுகள் மற்றும் தலைவர்களின் பங்களிப்பை நினைவுகூர்வதாகவும் உள்ளது.
பிம்ஸ்டெக் அமைப்புக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில், தாய்லாந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆர்சிஈபி வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய இந்தியா தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. ஆர்சிஈபி பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு முடியும் நிலையில் அதன் இலக்கை எட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
வணிகம் செய்வதற்கு மிகவும் சிறந்த இடங்களைக் கொண்ட உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று விளங்குகிறது. கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் எளிதாக வணிகம் செய்யும் நாடுகளுக்கான உலக வங்கியின் குறியீட்டில் இந்தியா 142-லிருந்து 63-க்கு முன்னேறியிருப்பதில் இது பிரதிபலிக்கிறது. பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்கும், ஏழைகளை உயர்த்துவதற்கும், உலக வர்த்தக சக்தியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தற்போது நடைபெற்று வரும் ஆர்சிஈபி பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைந்த, சமச்சீரான முடிவுகள் ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியோடு உள்ளது. இவற்றின் வெற்றிகரமான முடிவு பற்றி இதில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், சரக்குகள், சேவைகள், முதலீடுகளிலும் ஒவ்வொரு துறைகளிலும் சமச்சீரான நிலை இருக்கவேண்டும் என்று இந்தியா கோருகிறது.
நல்லவைகளில் எமது பங்குதாரர்களின் உயரிய விருப்பங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நல்ல முடிவுகள் ஏற்பட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இதற்காக, நீடித்திருக்க இயலாத வர்த்தகப் பற்றாக்குறைகள் குறித்த எங்களின் கவலைக்குத் தீர்வு காண்பது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். மிக விரிந்த இந்திய சந்தையைத் திறப்பது எங்களின் வர்த்தகத்திற்கும், பயன்படக்கூடிய சில துறைகளை திறந்து விடுவதோடு பொருந்த வேண்டும் என்பதை அங்கீகரிப்பது அவசியமாகும்.
நியாயமான யோசனைகளைத் தெளிவான முறையில் நாங்கள் முன்வைத்திருப்பதோடு, பேச்சுவார்த்தைகளிலும் நேர்மையாக ஈடுபட்டு வருகிறோம். எங்களின் பங்குதாரர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ள நிலையில், அவர்களில் பலரிடம் இருந்து சேவைகள் குறித்த விருப்பங்கள் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
ஒட்டுமொத்தமாக அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான ஆதாயம் தரும் பரஸ்பர நலன்பயக்கும் ஆர்சிஈபி, இந்தியா மற்றும் பேச்சுவார்த்தையில் உள்ள அனைத்துப் பங்கேற்பாளர்களின் நலன்களுக்கும் உரியது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
************