Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

நாயகர்களின் பூமியான புந்தேல்கண்டுக்கு நீண்ட காலத்திற்கு பின் நான் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். இந்த முறை பாலாஜி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பகவான் அனுமனின் கருணையால் மதிப்புமிகு மதம் சார்ந்த மையமான இது சுகாதார கவனிப்புக்கான மையமாக இப்போது மாறி வருகிறது. சற்று நேரத்திற்கு முன்புதான் திரு பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நான் பூமி பூஜை செய்து வைத்தேன். 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனம் முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதியுடன் நிறைவு பெறும். இந்த உயரிய முயற்சிக்காக திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் புந்தேல்கண்ட் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.

நண்பர்களே,

நமது கோயில்களும், மடங்களும், புனித தலங்களும் எப்போதும் வழிபாடு மற்றும் தியான மையங்களாக செயல்பட்டு உள்ளன. அதே சமயம் அவை அறிவியல் ஆய்வு, சமூக சிந்தனை, கூட்டு மனப்பான்மை ஆகியவற்றின் மையங்களாகவும் இருந்துள்ளன. ஆயுர்வேத அறிவியலையும் யோகா பழக்கத்தையும் நமது முனிவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். இவை இரண்டும் தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது நம்பிக்கை மிகவும் எளிதானது – தன்னலமற்ற சேவையை விட உயர்ந்த மதம் எதுவும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களின் துயரங்களை துடைப்பது உண்மையான மதத்தின் சாரமாகும். எனவே உயிரினங்கள் அனைத்திற்கும் சேவை செய்வது நமது நீண்ட கால பாரம்பரியமாகும். அனைத்து மனிதர்களிலும் தெய்வீகம் உறைந்துள்ளது என்பது நமது மரபு – மனிதருக்குள் நாராயண், அனைத்து உயிர்களிலும் சிவன்.

தற்போது எல்லா இடங்களிலும் மகா கும்பமேளா பற்றியே பேச்சாக உள்ளது. இந்த மாபெரும் நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் கூடி புனித நீராடி துறவிகளிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த மகா கும்பமேளாவை நாம் கடைப்பிடிக்கும் போது ஒரு உண்மையை நாம் உணர்கிறோம். இது ஒற்றுமையின் மகா கும்பமேளா என்பதுதான் அந்த உண்மை.

நண்பர்களே,

புனித புந்தேல்கண்ட் பூமியில் உள்ள சித்ரகூடம் பகவான் ராமருடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இங்கு நோயாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சேவை செய்யும் மிகப் பெரிய மையம் நீண்டகாலமாக உள்ளது. தற்போது பாகேஸ்வர் தாம் சமய மற்றும் ஆன்மீக தலமாக மட்டுமின்றி சிகிச்சை மையமாகவும் உள்ளது. இங்கு நல்ல ஆரோக்கியத்திற்கான அருளாசி வழங்கப்படுகிறது.

நமது கடமைகளை செய்யவும், மகிழ்ச்சியடையவும், வெற்றி பெறவும் நமது உடலும் ஆரோக்கியமும் மிக முக்கியமான கருவிகள் என நமது வேதங்கள் தெரிவிக்கின்றன. எனவே நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டபோது, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதை எங்கள் அரசின் வழிகாட்டும் கொள்கையாக உருவாக்கினோம். இந்த தீர்மானத்தின் முக்கிய அடிதளமாக அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் நல்வாழ்வு என்பது உள்ளது.

இதனை நிறைவேற்ற நோய் தடுப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல நிலைகளில் நாங்கள் பணியாற்றுகிறோம். கழிப்பறைகள் கட்டப்பட்டதால் மேலும் ஒரு பயன் கிடைத்ததை நீங்கள் அறிவீர்கள். மோசமான துப்புரவு நிலையால் ஏற்பட்ட நோய்கள் குறைந்துள்ளன. முறையான கழிப்பறைகளை கொண்ட வீடுகள் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமித்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. கழிப்பறைகள் இல்லாதிருந்தால் இந்த தொகை மருத்துவத்திற்கு செலவிடப்பட்டிருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

புந்தேல்கண்ட் உண்மையான செழிப்பை பெறுவதற்கு நமது தாய்மார்களும், சகோதரிகளும் சமஅளவு அதிகாரம் பெற வேண்டியது அவசியமாகும். இதனை அடைவதற்கு லட்சாதிபதி சகோதரிகள், ட்ரோன் சகோதரிகள் போன்ற முன்முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். 3 கோடி சகோதரிகள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்காக அவர்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவது எங்களின் இலக்காகும். புந்தேல்கண்டில் சாகுபடி பயிர்களுக்கு ட்ரோன்கள் மூலம் நமது சகோதரிகள் உரங்களையும், மருந்துகளையும் தெளித்து வேளாண்மையில் தீவிரமாக பங்கேற்கும் போது புந்தேல்கண்ட் அதிவேகமாக செழுமைப் பாதையில் முன்னேறும்.

நண்பர்களே,

புனித பூமியான புந்தேல்கண்டை முன்னேற்றத்தில் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல இரட்டை என்ஜின் அரசு ஓய்வின்றி உழைக்கிறது. புந்தேல் கண்ட் தொடர்ந்து வளமான, முன்னேற்றப் பாதையில் செல்வதற்காக இன்று பாகேஸ்வர் தாமில் நான் பிரார்த்தனை செய்தேன்.

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

ஹர் ஹர் மகாதேவ்!

***

(Release ID: 2105656)
TS/SMB/RR/KR