Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


 

டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சியில் கலந்துரையாடினார். பொதுச் சேவை மையங்கள், என்.ஐ.சி. மையங்கள், தேசிய அறிவாற்றல் கட்டமைப்பு, பி.பீ.ஓ.க்கள், மொபைல் உற்பத்தி பிரிவுகள் மற்றும் மைகவ் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 50 லட்சத்தினருடன் இந்த காணொளிக் காட்சி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட ஆறாவது கலந்துரையாடலாகும் இது.

அனைத்துப் பிரிவு மக்களும் குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெறுவதை உறுதிப்படுத்த டிஜிட்டல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டதாக பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் குறிப்பிட்டார். கண்ணாடி இழை மூலம் கிராமங்களை இணைத்தல், டிஜிட்டல் மூலம் மக்களுக்கு கல்வி, மொபைல்கள் மூலம் சேவைகள் விநியோகம் மற்றும் மின்னணு உற்பத்தி மேம்பாடு என முழுமையான முறையில் அரசு செயல்பட்டதால் இது சாத்தியமானதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பம் குறித்து பேசிய பிரதமர், எளிதான வாழ்க்கையை தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது என்றும், சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் தொழில்நுட்பத்தின் பயன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அரசின் முயற்சிகள் என்றார். பீம் செயலி உட்பட ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் மூலம் ரயில்வே பயண டிக்கெட் பதிவிடுதல், ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் முன்னணு மூலம் விநியோகித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சாமானிய மனிதர்களின் சுமையை பெருமளவு குறைத்திருப்பதாக திரு. நரேந்திர மோடி கூறினார்.

பொதுச் சேவை மையங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய பிரதமர், இந்தியா முழுவதும் உள்ள இந்த பொதுச் சேவை மையங்கள் இந்தியாவின் ஊரக பகுதிகளில் டிஜிட்டல் சேவைகளை அளிப்பதாக குறிப்பிட்டார். இந்த பொதுச் சேவை மையங்கள் ஊரகப் பகுதிகளில் கிராம அளவிலான தொழில் முனைவோரை வெற்றிகரமாக உருவாக்கி 10 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. 2.15 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் பல்வேறு அரசு மற்றும் இதர சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புக்களை அளிக்கும் 2.92 லட்சம் பொது சேவை மையங்கள் ஊரக இந்தியாவில் உள்ளன. 

அதிக அளவிலான டிஜிட்டல் கட்டணங்களை நோக்கிய நகர்வு காரணமாக நடுத்தரகர்கள் நீக்க்ம் ஏற்பட்டுள்ளதாக இந்தக் கலந்துரையாடலின் போது திரு. நரேந்திர மோடி கூறினார். இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை கடந்த நான்காண்டுகளில் குறிப்பிடத்தக்க  வளர்ச்சி கண்டு இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டலாகவும் வெளிப்படையாகவும் ஆக்கியுள்ளது.

பிரதமர் கிராம டிஜிட்டல் கல்வி இயக்கம் பற்றி பேசிய பிரதமர், இந்த திட்டம் ஏற்கனவே 1.25 கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் பயிற்சி அளித்துள்ளது என்றும் இவர்களில் 70 சதவீதம் பேர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார். 20 மணி நேர அடிப்படை கணினி பயிற்சி மூலம் ஆறு கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் அடிப்படைக் கணினி பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் பி.பீ.ஓ. துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த பி.பீ.ஓ.க்கள் தற்போது சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவி வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்திய பி.பீ.ஓ. மேம்பாட்டு திட்டம் மற்றும் வடகிழக்கிற்கான தனி பி.பீ.ஓ. மேம்பாட்டுத் திட்டம் வடகிழக்கு மற்றும் ஊரகப் பகுதிகளில் இரண்டு லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா முழுவதும் பி.பீ.ஓ.க்கள் தொடங்கப்படுவதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் தற்போது தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு பெறுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பல்வேறு மின்னணு உற்பத்தி ஆலைகளின் பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், கடந்த நான்காண்டுகளில் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் இந்தியா நீண்ட தூரம் பயணித்துள்ளது என்றார். இந்தியாவில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த அரசு மின்னணு உற்பத்தி தொகுப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது என்றும் இதன் மூலம் 15 மாநிலங்களில் 23 மின்னணு உற்பத்தி தொகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் சுமார் ஆறு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 120 மொபைல் ஃபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன என்றும் ஆனால் 2014ம் ஆண்டு வெறும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இவை 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி உள்ளன.

வலிமையான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க தேசிய அறிவாற்றல் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் பேசினார். தேசிய அறிவாற்றல் கட்டமைப்பு இந்தியாவில் உள்ள 1700 பெரிய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களை இணைத்து அதன் மூலம் சுமார் ஐந்து கோடி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சக்திவாய்ந்த மேடையை அளித்துள்ளது.

இந்த அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் பொது மக்கள் ஈடுபாட்டு மேடையாக உருவாக்கப்பட்ட மைகவ் மேடையின் தன்னார்வலர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். இந்த மேடையுடன் தொடர்பு உடைய 60 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு, யோசனைகள், சிந்தனைகளை அளித்தல் மற்றும் பல்வேறு தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என திரு. மோடி கூறினார். டிஜிட்டல் இந்தியாவின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தான ‘இ’யை குறிப்பிட்டு நான்கு ‘இ’க்கள் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் இந்தியா இயக்க திட்டங்கள் எவ்வாறு முக்கியப் பங்காற்றின என்பது குறித்து பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பயனாளிகள் விளக்கினார்கள். பொதுச் சேவை மையங்கள் எவ்வாறு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளன என்றும் அது அளிக்கும் பல்வேறு சேவைகள் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்கியுள்ளது என்றும் பல்வேறு பயனாளிகள் விளக்கினார்கள்.