Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா. வரம்பிற்குட்பட்ட மாநாட்டில் கியோட்டோ உடன்படிக்கையின் இரண்டாவது வாக்குறுதி கால வரம்பை ஏற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான கியோட்டோ உடன்படிக்கையின்கீழ், இரண்டாவது வாக்குறுதி கால வரம்பை ஏற்றுக் கொள்வதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கியோட்டோ உடன்படிக்கையின் கீழ், இரண்டாவது வாக்குறுதி கால அளவு, 2012-ம் ஆண்டில் இறுதிசெய்யப்பட்டது. இதுவரை இரண்டாவது வாக்குறுதி கால அளவை 65 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

வானிலை மாற்ற விவகாரங்களில் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியா மிகவும் முக்கிய பங்கு வகித்துவருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வானிலையை எதிர்கொள்ளும் சர்வதேச நாடுகளின் செயல்பாடுகளுக்கு இந்தியா தலைமை வகிப்பதை வெளிப்படுத்துகிறது. கியோட்டோ உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்வதன் மூலம், மற்ற வளரும் நாடுகளும் இதனை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும். இந்த வாக்குறுதியின் காலகட்டத்தில் செயல்படுத்தப்படும் தூய்மை மேம்பாட்டு வழிமுறை (CDM) திட்டங்களுடன் நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளால், முதலீடுகளையும் இந்தியா ஈர்க்கும்.

வானிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் வழிமுறை உடன்பாடு (UNFCC), சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்கள் பரவலை, வானிலை அமைப்பில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வைத்திருக்க கோருகிறது. சுற்றுச்சூழலில் பசுமைஇல்ல வாயுக்கள் அதிக அளவில் இருப்பதற்கு வளர்ந்த நாடுகளே காரணம் என்பதை கியோட்டோ உடன்படிக்கை ஏற்றுக் கொள்கிறது. எனவே, வாயுவை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதுடன், வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி ஆதாரங்களை வழங்குவதுடன், தொழில்நுட்பங்களை வழங்கவும் கியோட்டோ உடன்படிக்கை வழிவகை செய்கிறது. கியோட்டோ உடன்படிக்கையின்படி, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வாயுவை கட்டுப்படுத்துவதற்கு கட்டாய வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

பின்னணி

கியோட்டோ உடன்படிக்கை, 1997-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. முதலாவது வாக்குறுதி காலம் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையானது ஆகும். டோஹாவில் 2012-ல் நடந்த மாநாட்டில், கியோட்டோ உடன்படிக்கையில், இரண்டாவது வாக்குறுதி காலத்தை (டோஹா சட்டத்திருத்தம்) 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நிர்ணயிக்க திருத்தம் செய்யப்பட்டது. டோஹா சட்டத் திருத்தத்தின்படி, சுயவிருப்பம் என்ற வழிமுறைகளின் அடிப்படையில், வளர்ந்த நாடுகள் தங்களது வாக்குறுதிகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
2020-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில், வானிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளை வளர்ந்த நாடுகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தியா எப்போதுமே வலியுறுத்தி வருகிறது. இதுதவிர, உடன்பாட்டின் வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் வானிலை நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. அதாவது, சமத்துவ கொள்கையை பின்பற்றுவது, பொதுவானது, அதேநேரத்தில், திறனுக்கு ஏற்ற வகையில் பொறுப்புகள் வேறுபாடு (CBDR & RC) என்பது போன்ற கொள்கைகளின்படி செயல்பட இந்தியா வலியுறுத்தி வருகிறது.