பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த மாநிலமான ஒடிசாவில் நடைபெறுவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கும், அரசுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கைப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமாண்டமான கண்காட்சி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நேதாஜியின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளை பல கலைஞர்கள் காட்சிகளாக வரைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். நேதாஜி தொடர்பான பல புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த மரபுகள் அனைத்தும் மை பாரத் தளத்திற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இன்று நாம் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாரம்பரியம் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதன்மையான, முக்கியமான இலக்கு விடுதலை பெற்ற இந்தியா என்றும் அவர் கூறினார். இந்த உறுதிப்பாட்டை அடைய, ஒரே சிந்தனையில் தமது முடிவில் உறுதியாக அவர் இருந்ததாக திரு நரேந்திர மோடி கூறினார். நேதாஜி வளமான குடும்பத்தில் பிறந்தவர் என்றும், குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர் பிரிட்டிஷ் அரசில் மூத்த அதிகாரியாக பதவி பெற்றிருக்கலாம் என்றும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் என்றும் பிரதமர் கூறினார். இருப்பினும், நேதாஜி சுதந்திரத்திற்கான வேட்கையில் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் அலைந்து திரிந்து சிரமங்களும் சவால்களும் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாதுகாப்பான சூழலில் வசதிகளுடன் வாழ நினைத்தவர் அல்ல” என்று அவர் மேலும் கூறினார். “தற்போது, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் நமது பாதுகாப்பான வசதிகளுடன் கூடிய சூழல் நிலையிலிருந்து வெளியே வந்து செயலாற்ற வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார். உலக அளவில் சிறந்த நிலைக்கு மாறுவது, சிறப்பானதைத் தேர்ந்தெடுப்பது, செயல்திறனில் கவனம் செலுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி ஆசாத் ஹிந்த் ஃபவுஜை உருவாக்கினார் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தப் படைவீரர்கள் பல்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும், நாட்டின் சுதந்திரமே அவர்களின் பொதுவான உணர்வாக இருந்தது என்பதை எடுத்துரைத்தார். இந்த ஒற்றுமை இன்றைய வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பாடம் என்று அவர் மேலும் கூறினார். அன்று ஒற்றுமை எப்படி சுயராஜ்யத்திற்கு அவசியமாக இருந்ததோ, அதேபோல் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கும் அது இன்று முக்கியமானதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். உலக அளவில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாதகமான சூழலை சுட்டிக்காட்டிய பிரதமர், 21-ம் நூற்றாண்டை இந்தியா எவ்வாறு தனக்கானதாக மாற்றுகிறது என்பதை உலகம் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடமிருந்து உத்வேகம் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் ஒற்றுமையில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் ஒருசேர வலியுறுத்தினார். நாட்டை பலவீனப்படுத்தி அதன் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் எச்சரித்தார்.
இந்தியாவின் பாரம்பரியம் குறித்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான ஜனநாயக வரலாறு குறித்து அடிக்கடி பேசி அதிலிருந்து உத்வேகம் பெறுமாறு அவர் மக்களை ஊக்குவித்து வந்தார் என்றும் பிரதமர் கூறினார். இன்று இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது பாரம்பரியத்தில் பெருமிதத்துடன் வளர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். மறக்க முடியாத வரலாற்று நிகழ்வான சுதந்திர இந்திய (ஆசாத் ஹிந்த்) அரசின் 75-வது ஆண்டு விழாவையொட்டி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியதில் பிரதமர் தமது பெருமையை வெளிப்படுத்தினார். நேதாஜியின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான அருங்காட்சியகம் ஒன்றை அரசு நிறுவியது என்றும், அதே ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளும் தொடங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். “2021-ம் ஆண்டில், நேதாஜியின் பிறந்த நாளை பராக்ரம தினமாகக் கொண்டாட அரசு முடிவு செய்தது” என்று கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா கேட் அருகே நேதாஜியின் பிரமாண்ட சிலையை அரசு நிறுவியுள்ளது என்றார். அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜியின் பெயரை அரசு சூட்டியது என்றும் அவர் கூறினார். குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அரசு மரியாதை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இவை, நேதாஜியின் மரபுகளை கௌரவிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றன என்று பிரதமர் கூறினார்.
“கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியானது சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றும், நாட்டின் ராணுவ வலிமையையும் அதிகரித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இது மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்திய ராணுவத்தின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது எனவும் உலக அரங்கில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உத்வேகம் பெற்று ஒரே இலக்கு, ஒரே குறிக்கோளுடன் வீரமிக்க, அறிவாற்றலுடன் கூடிய பாரதத்துக்காக ஒவ்வொருவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதுவே நேதாஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2095388)
TS/PLM/AG/KR
Netaji Subhas Chandra Bose's ideals and unwavering dedication to India's freedom continue to inspire us. Sharing my remarks on Parakram Diwas.
— Narendra Modi (@narendramodi) January 23, 2025
https://t.co/wyDCWX6BNh