Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பயங்கரவாத ஒழிப்பில் தாய்லாந்து இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

பயங்கரவாத ஒழிப்பில் தாய்லாந்து இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

பயங்கரவாத ஒழிப்பில் தாய்லாந்து இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்


தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா அவர்களுடனான சந்திப்பு நிகழ்வின் போது பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரை:

மேதகு பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா அவர்களே, உங்களை இந்தியாவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எங்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள். புராண காலத்து ராம பிரான் முதல் அறிவுச்சுடர் புத்தர் வரையிலான நமது கலாச்சார பாரம்பரிய உறவுகள் பகிர்ந்து கொள்ளத்தக்கதாகவே இருந்தது. நமது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளும் நமது உறவை வலுவானதாக்கி உள்ளது.

தாய்லாந்து இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய மதிப்பு மிக்க நட்பு நாடு தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் நெருங்கிய பங்குதார நாடு. நண்பர்களே. இன்று தாய்லாந்து பிரதமரும் நானும் இருதரப்பு உறவு குறித்து முழுமையாக விவாதித்தோம். கலாச்சாரம் முதல் வர்த்தகம் வரை இந்த விவாதம் நீடித்தது. மக்களுக்கு இடையிலான ஆழமான தொடர்பு, தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு, பற்றியும் விவாதித்தோம்.

பரவி வரும் தீவிரவாதமும், பிரிவினைவாத கிளர்ச்சிகளும் இருநாட்டு சமூகத்திற்கும் பொதுவான அச்சுறுத்தல் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். நமது இரு நாடுகளின் பாதுகாப்பு துறைசார்ந்த கூட்டு, இருநாட்டு மக்களையும் இத்தகைய அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் என்பதையும் நாம் அங்கீரித்துள்ளோம்.

இத்தகைய சவால்களை முறியடிக்க இந்தியாவுடன் தாய்லாந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று நமது நோக்கத்தினை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

தீவிரவாத தடுப்பு மட்டுமல்லாமல் இணையதள தீவிரவாத அச்சுறுத்தல் பாதுகாப்பு, போதை கடத்தல் தடுப்பு, பொருளாதார குற்றங்கள், கடத்தல் ஆகியவற்றை தடுக்கவும் நாம் ஆழமான ஒத்துழைப்புக்கு உடன்பட்டுள்ளோம்.

இரு நாடுகளின் நில தொடர்பு என்பது வெகு தொலைவில் இல்லை. அத்துடன் கடல்ரீதியாக இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. ஆகவே ராணுவம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பில் கூடுதல் ஒத்துழைப்புக்கும் பங்களிப்புக்கும் தாய்லாந்து பிரதமரும், நானும் உடன்பட்டுள்ளோம். இருதரப்பு நலன், இரு நாடுகளுக்குமான பிராந்திய இலக்கு ஆகியவற்றிலும் பங்கெடுப்பது இதன் நோக்கம்தான்.

இருதரப்பு பங்களிப்பு என்பது, நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுதல், ஊழியர் ரீதியில் அதிக பரிமாற்றம் மற்றும் செயல்சார்ந்த ஒத்துழைப்பு, கடற்படை சார்ந்த கண்காணிப்பில் ஆழ்ந்த ஒத்துழைப்பு, மற்றும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இணைப்பு பாலத்தை பலப்படுத்துதல் ஆகியவற்றை கொண்டதாக இருக்க வேண்டும்.

வர்த்தகம் மற்றும் தொழில் பறிமாற்றம் இன்று உலகின் முக்கிய அம்சமாக உள்ளது. அந்த வகையில் நானும் தாய்லாந்து பிரதமரும் இருநாட்டு வர்த்தக உறவை மேலும் வலுவாக்க ஒத்துக்கொண்டுள்ளதோடு, அதன் பலன் இருநாட்டுக்கும் பொருளாதார வளத்தைமட்டும் கொடுக்காமல் பிராந்திய பொருளாதார வளமைக்கும் வலுசேர்க்க வேண்டியதாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.

அந்த வகையில், இந்தியா – தாய்லாந்து கூட்டு வணிககூட்டமைப்பின் கூட்டம் இன்று நடப்பதை வரவேற்கிறோம். இதை நாங்கள் வரவேற்பதுடன், இருநாடுகளுக்கும் இடையே மேலும் வர்த்தக நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விரும்புகிறோம்.

தொழில் வர்த்தகம் மட்டும் அல்லாமல் உற்பத்தி மற்றும் முதலீட்டு இணைப்பையும் பலப்படுத்த விரும்புகிறோம். அதுபோல இருநாடுகளுக்கு இடையே சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்பு பிரிவிலும் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம். இதுபோன்று தகவல் தொழில்நுட்பம், பார்மாதுறை, வாகன பாகங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட இதர சில முக்கிய துறைகளிலும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளோம்.

சமச்சீரான விரிவான பொருளாதார பங்களிப்பு உடன்பாட்டை இருதரப்பும் பகிர்ந்து முன்னெடுத்து செல்வதில் விரைவில் தீர்வு காண உள்ளோம்.

சரக்குகள் சீராக சென்று வரவும, சேவைகள், மூலதன மற்றும் மனிதவள பரிமாற்றங்களும் பொருளாதார உறவுகளும் வலுப்பட விமான, நில மற்றும் கடல்வழி தொடர்பு அவசியம் என்பதை நானும், தாய்லாந்து பிரதமரும் நன்கறிவோம். அதனால் இந்தியா- மியான்மர்- தாய்லாந்து இடையே முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டத்திற்கு உயர் முக்கியத்துவம் அளிக்க நானும், தாய்லாந்து பிரதமரும் விரும்புகிறோம். விரைவில் இதற்கான வாகன போக்குவரத்து உடன்பாடும் கையெழுத்தாக உள்ளது. இணைப்பும் தொடர்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக இன்றி அமையாததாகும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்துவது என்பது இருநாட்டு மக்களுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும். ஆகவே வலுவான இணைப்பும் தொடர்பும் இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கு மட்டும் அல்ல, இருநாட்டு மக்கள் நெருங்கி தொடர்பு கொள்ளவும், அறிவியல், கலாச்சாரம் சுற்றுலா ஒத்துழைப்புக்கும் தேவையாகிறது.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவின் 70 வது ஆண்டுவிழாவை நாம் அடுத்தஆண்டு இருநாடுகளிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இந்தியா அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்ததின ஆண்டுவிழாவை கொண்டாடி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் விரைவில் தாய்லாந்து மொழியில் மொழியாக்கம் செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தாய்லாந்து சுற்றுலா பயணிகளை இந்தியாவுக்கு வரவும், இந்தியாவில் உள்ள புத்த மத முக்கியத் தலங்களை பார்க்கவும் உதவும் வகையில் தாய்லாந்து குடிமக்களுக்கு இரட்டை பதிவு சுற்றுலா விசா விரைவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேதகு தாய்லாந்து பிரதமர் அவர்களே, தாய்லாந்து அரச குடும்பத்திற்கு இந்தியா எப்போதும் மரியாதை அளிக்கிறது. தாய்லாந்து இளவரசி மகா சாக்ரி சிரின்டோன் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து செல்பவர். அவர் எப்போதும் வரவேற்புக்கு உரிய இந்தியாவின் விருந்தினர் ஆவார். இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியா வரவிருப்பதை ஆவலோடு வரவேற்கிறோம். இதுபோன்று பட்டத்து இளவரசர் வஜிராலாங்கோமையும் வரவேற்கிறோம்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய பார்வை கொள்கையும், தாய்லாந்தின் மேற்கு பார்வை கொள்கையும் இருநாடுகளுக்கும் இடையே ஒளிமயமான பங்களிப்பின் எதிர்காலமாக இருக்கும் என்பதை என்னால் அறுதியிட்டு கூறமுடியும்.

அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்று நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.