Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்டயக் கணக்காளர்கள் தினத்தை ஒட்டி தில்லி ஐ.ஜி.ஐ. ஸ்டேடியத்தில் 1 ஜூலை 2017 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

s20170701110524

s20170701110525


வணக்கம் !

வாழ்த்துகள் !

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின்  தலைவர் மதிப்புக்குரிய நிலேஷ் விகம்சே அவர்களே, நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, நாடெங்கும் சுமார் 200 இடங்களில் இருந்து நேரலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பட்டயக் கணக்காளர் துறையைச் சேர்ந்தவர்களே, மாநிலங்களில் இருந்து இதில் இணைந்துள்ள மரியாதைக்குரிய முதலமைச்சர்களே, தில்லியின் மழையையும் பொருட்படுத்தாமல் இங்கே வந்திருக்கும் ஆர்வமுள்ள சகோதர, சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் கனிவான வரவேற்புகளை தெரிவித்துக் கொள்கிறேன் !

இன்றிரவு இந்த நல்லதொரு தருணத்தில், பாராட்டு பெறும் சாதனையாளர்களான, பல தரப்பு, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து இன்று இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும், தொலைக்காட்சி மற்றும் வானொலியின் மூலம் கவனிப்பவர்களுக்கும், கவுரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் வணக்கம்.

இன்றைக்கு நாம் இந்திய பட்டயக் கணக்காளர் நிலையத்ன் (ICAI) நிறுவன நாளை கொண்டாடுகிறோம். இந்த நல்ல தருணத்தில் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நல்ல வாய்ப்பும் கூட  உங்களுடைய நிறுவன நாளும், இந்தியாவின் புதிய பொருளாதார மாற்றத்துக்கான – “சரக்குகள் மற்றும் சேவை வரி” -யின் தொடக்க நாளும் ஒன்றாக அமைந்துள்ளன.

இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவமான நாளில் உங்கள் மத்தியில் நான் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகவும் பெருமையாகவும் இருக்கிறது. பல பத்தாண்டுகளாக பட்டயக் கணக்காளர் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி செய்து வரும் அன்புக்குரிய இளைஞர்கள் மற்றும் நிபுணர்களே, உங்கள் அனைவருக்கும்  பெருமைக்குரிய உரிமையை அரசு அளித்திருக்கிறது. கணக்குப் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை தணிக்கை செய்து, அவை சரியானவையா அல்லது திருத்தி எழுதப்பட்டவையா என்று சான்றளிக்கும் அதிகாரம் உங்கள் துறையினருக்குதான் உள்ளது. சமூகம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கும் மருத்துவர்களைப் போல, நாட்டின் ஆரோக்கியமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான நிதி நிலைக்கு நீங்கள் பொறுப்பு ஏற்றிருக்கிறீர்கள்.  தன்னுடைய வருமானம் பெருக வேண்டும் என்பதற்காக மக்கள் நோய்களுக்கு ஆளாகும் வகையில் ஆரோக்கியமற்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என எந்த மருத்துவரும் ஊக்குவிக்க மாட்டார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். யாரேனும் ஒருவர் நோயுற்றால், தனது வருமானம் அதிகரிக்கும் என மருத்துவர் அறிவார். ஆனால் அப்போதும் மக்களுக்கு ஆரோக்கியமான பழக்கங்களையே மருத்துவர் பரிந்துரை செய்வார்.

அன்பு நண்பர்களே, பொருளாதார மற்றும் நிதி அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதையும், எந்த மோசடிகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். இந்த நாட்டின் பொருளாதார அமைப்பின் தூண்களாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது உண்மையில் பெரிய மரியாதைக்குரியது. என்னைப் பொருத்தவரை, இன்று உங்கள் அனைவரிடம் இருந்தும் விஷயங்களை அறிவதற்கும், நல்ல வழிமுறைகளை அறிவதற்கும் பெரிய வாய்ப்பாக இது உள்ளது. இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள், தங்களின் நிதி சார்ந்த திறன்களில் திறமை மிக்கவர்களாக உலகெங்கும் பாராட்டப்படுகிறார்கள்.

புதிய சார்ட்டட் அக்கவுண்டன்சி பாடத் திட்டத்தை அறிமுகம் செய்யும் வாய்ப்பு இன்றைக்கு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. உங்களின் துடிப்பான கல்விக்கும், உங்களின் தேர்வுகளின் நம்பகத்தன்மைக்குமான அடையாளம் இது. இந்தத் தொழிலில் புதிதாக சேருபவர்களின் நிதி சார்ந்த திறமைகள் மேலும் ஒருங்குதிரட்டப் படுவதற்கு இந்தப் புதிய பாடத் திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன். உலகமயமாக்கல் சூழ்நிலையில், நமது கல்வி நிலையங்கள் துடிப்புமிக்க மனிதவளத்தை உருவாக்கும் வகையில், துடிப்புமிக்க முறைமைகளை உருவாக்குவதில் இப்போது நாம் கவனம் செலுத்த வேண்டும். தொழில்துறையின் தேவைக்கு ஏற்றவாறு இருப்பதற்கு, உலகளாவிய தேவைகள் மற்றும் தரத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை நாம் வடிவமைக்க வேண்டும். அக்கவுன்டன்சி துறையில் தொழில்நுட்ப தேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் நமது பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். கணக்காளர் துறையில் புதுமைகளை நாம் ஊக்குவித்திட வேண்டும். பட்டய நடுநிலை நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை புதுமையாக ஆக்குவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். அக்கவுன்டன்சி துறையில் தேவைப்படும் புதிய மென்பொருளுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன.

நண்பர்களே, நமது புனித நூல்கள், மானிட வாழ்வியலுக்கான நோக்கங்கள் பற்றி கூறியுள்ளன. இவற்றில்  தர்மம் (நேர்மை, நன்னெறிகள்), அர்த்தா (பொருளாதார அம்சங்கள்), காமா (உளவியல் அம்சங்கள்), மோட்சம் (ஆன்மிக அம்சங்கள்) என விவரிக்கப்பட்டுள்ளன. தர்மம் மற்றும் மோட்சம் என்று நாம் எப்போது கூறினாலும் நமது மனதில் துறவிகளும், குருமார்களும் உங்களுக்கு எப்போதாவது நினைவுக்கு வந்திருக்கிறதா ~ அதேபோல ஒருவர் கணக்குகள் மற்றும் நிதி பற்றி யோசிக்கும்போது, உங்களைத் தவிர வேறு யாரும் அவருடைய மனதில் முதலில் தோன்ற மாட்டார்கள். பொருளாதார உலகின் துறவிகள் நீங்கள் என்று கூறுவது ஏற்றதாக இருக்கும். மிகவும் உயர்ந்த மோட்சத்தை அடைவதற்கு துறவிகளும், குருமார்களும் நம்மை வழிநடத்துவதைப் போல, பொருளாதார அமைப்பை வழி நடத்திச் செல்வதில் அதே முக்கியமான பங்கு உங்களுக்கு உள்ளது.

ஒருவரை நேர்மையான செயல்பாடு மற்றும் நடைமுறைக்கு வழிநடத்திச் செல்வதில், பட்டயக் கணக்காளர் தொழிலில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் நெறிசார்ந்த பொறுப்பாக உள்ளது.

என் அன்புக்குரிய நண்பர்களே, இன்றைக்கு என்னிடம் நீங்கள் காட்டும் அன்பு மற்றும் அளிக்கும் ஊக்கத்தை மிகவும் பாராட்டுகிறேன். என் இதயத்தில் உள்ள கருத்துகளை உங்கள் அனைவரின் முன்பாக பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகிறேன். நான் அவ்வாறு கூறுவதை நீங்கள் அனைவரும் அனுமதித்தால் நன்றி கூறுவேன். நம் இருவருக்குமே தேசபற்றில் ஒரே மாதிரியான  ஆர்வம் உள்ளது.

தேசத்தின் மீதும் அதன் குடிமக்கள் மீதும் நான் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். ஆனால், சில கடினமான உண்மைகளை நாம் பார்ப்போம் ! இவை அடிக்கடி உங்களை சிந்திக்க வைக்கும். சமூகத்தில் அடிக்கடி இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒரு வீடு தீயில் சிக்கி முழு சொத்துகளும் எரிந்து இழப்பு ஏற்பட்டால், அந்தக் குடும்பம் தனது மன உறுதி மற்றும் சரியான முயற்சிகளால் உடனடியாக அவற்றை மீண்டும் உருவாக்க முடியும் என்று கூறுவார்கள். துயரத்தை அவர்கள் தாங்கிக் கொள்வார்கள்.

ஆனால், அதே வேகத்துடன் புதிதாகத் தொடங்குவார்கள். விரைவிலேயே அவர்கள் திரும்ப எழுவார்கள். தீயில் நாசமான வீட்டை புதுப்பிப்பது சாத்தியம் என்று மூத்தவர்கள் கூறுவார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு திருட்டுப் பழக்கம் இருந்தாலும், அதுபோன்ற குடும்பங்கள் தங்களுடைய மதிப்பான விஷயங்களை ஒருபோதும் கட்டமைக்க முடியாமல் போய்விடும். குடும்பத்தில் ஓர் உறுப்பினர் நன்னெறிக்கு எதிரான பாதையில் சென்றாலும் குடும்பம் நிரந்தர பாதிப்பை சந்திக்கும்.

அன்பு நண்பர்களே, கணக்குகளை சரியாக வைக்கும் பணியில் ஈடுபடக் கூடியவர், நாம் நேர்மையாக இருந்தால், மிகப்பெரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டுவிட முடியும். வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற மிக மோசமான இயற்கைப் பேரிடர்களின்போது, நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு தேசத்தை தூக்கி நிறுத்தும் அபரிமிதமான வல்லமைகள் நமது குடிமக்களுக்கு உண்டு. இருந்தபோதிலும்,  குடிமக்களில் சிலர் திருட்டு மற்றும் களவுப் பழக்கத்தில் ஈடுபட்டால்  தேசம் அல்லது குடும்பம் சீர் செய்ய முடியாத அளவுக்கு துன்பத்தில் சிக்கும். தேசத்தின் வளர்ச்சியில் தடைகள் ஏற்பட்டு, எல்லா கனவுகளும் தகர்ந்துவிடும்.

அதுபோன்ற களவு செய்பவர்களைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பழைய சட்டங்கள் இப்போது மேலும் கடுமையாக்கப் பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுடன் நாம் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அதற்கேற்ப திருத்தப்பட்டுள்ளன.

கருப்புப் பணம் குறித்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் கிடைத்த நற்பயனுக்கு அத்தாட்சியாக சுவிஸ் வங்கி கணக்குகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன. சுவிஸ் வங்கி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்திய தேசத்தவர்களால் செய்யப்படும் கருப்புப் பண டெபாசிட்களின் அளவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவுக்கு போயுள்ளது.

மூன்று பத்தாண்டுகளுக்கு முன்பு 1987-ல், எந்த தேசத்தவர்கள் எவ்வளவு தொகை டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்ற தகவலை சுவிஸ் வங்கிகளின் அதிகாரிகள் அறிவிக்கத் தொடங்கினார்கள். கடந்த நிதியாண்டு தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியர்களின் டெபாசிட் அளவு  45 % குறைந்திருக்கிறது.

2014-ல் இருந்து, தேசத்தின் ஆட்சியை நீங்கள் நம்பிக்கையுடன் எங்களிடம் அளித்ததில் இருந்து, கருப்புப் பண டெபாசிட் குறைவதற்கான போக்கை நாங்கள் உருவாக்கினோம். அது மேலும் தீவிரமாக்கப்பட்டது. 2013-ல் கருப்புப் பண டெபாசிட்கள்  42% அதிகரித்தது என்று சுவிஸ் வங்கிகள் தெரிவித்தன என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைவீர்கள். மதிப்புமிக்கவர்களே,  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் இருந்து நாம் உடனுக்குடன் தகவல்களைப் பெறும்போது, கருப்புப் பணம் பதுக்குவோரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். உங்களிடம் அதுபோன்ற பணம் இருக்காது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், தேசத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு, அதுபோன்ற கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை எச்சரிக்கச் செய்யும் என்றும் நிச்சயமாக நம்புகிறேன்.

நண்பர்களே, ஒருபுறத்தில் தூய்மையான பாரதம் திட்டத்தை நான் வலியுறுத்துகிறேன். அதேபோல நாட்டின் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளைத் தூய்மை செய்யும் பணியையும் நான் தொடங்கி இருக்கிறேன். நவம்பர் 8 ஆம் தேதி உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்று நம்புகிறேன். நமது சமூகத்தில் இருந்து கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கான முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை உறுதியான மற்றும் தடம் பதிக்கும் முயற்சியாக உள்ளது. நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு, உங்கள் பணிக்காலத்தில் முன் எப்போதையும்விட அதிகமான வேலையில் மூழ்கிவிட்டீர்கள் என்று எனக்கு கூறியுள்ளார்கள். நீங்கள்தான் அதை உறுதிப்படுத்த வேண்டும். தீபாவளி விடுமுறைக்கு திட்டமிட்டு, ஓட்டல்களில் பதிவு செய்த பட்டயக் கணக்காளர்கள், அவற்றை ரத்து செய்துவிட்டு தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பி 24 மணி நேரமும் உழைத்தீர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

நீங்கள் அனைவரும் நேர்மையாக செயல்பட்டீர்களா அல்லது தகவல்களை மறைப்பதில் பங்கேற்றீர்களா என்று எனக்குத் தெரியாது ! நல்லது. அது தேசத்தின் மீதான அக்கறையிலா அல்லது உங்கள் வாடிக்கையாளர் மீதான அக்கறையிலா? ஆனால் அந்த நாட்களில் நள்ளிரவிலும் நீங்கள் பணி செய்தீர்கள்!

நண்பர்களே, கருப்புப் பணம் ஒழிப்பு முயற்சியின் பலம் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதால், முதன்முறையாக இதுபற்றி உங்களுடன் எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள பணம் குறித்த தகவல்களை ஆய்வு செய்வதற்கு பெரிய நடைமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

நவம்பர் 8 க்கு முன்பும், அந்தத் தேதிக்குப் பின்பும் நடந்த பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். நாங்கள் யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. ஆனால் தகவல்களை மட்டும் ஆய்வு செய்கிறோம்.

எனதருமை நண்பர்களே, உங்களுடைய தேசப்பற்று, என்னுடைய தேசப்பற்றுக்கு சற்றும் குறைவானதல்ல என்று முன்பே நான் கூறினேன். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையச்செய்யும் ஒரு விஷயத்தை முதன்முறையாக உங்களிடம் தெரிவிக்க நான் விரும்புகிறேன். இதுவரை தகவல்களை ஆய்வு செய்ததில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பரிவத்தனைகள் – பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளன.

இன்னும் நிறைய தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; எனவே உண்மையான எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்று உண்மையில் எனக்குத் தெரியாது! இந்த நடைமுறை தொடங்கியதில் இருந்து சில மோசமான விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த அரசின் சிந்தனைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்துடன் நீங்கள் இணைந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் இவற்றையெல்லாம் நான் கூறிக் கொண்டிருக்கிறேன்.

ஒருபுறத்தில், அரசும், ஊடகங்களும், ஒட்டுமொத்த வணிக உலகமும் ஜூன் 30 ஆம் தேதி இரவையும் ஜூலை 1 ஆம் தேதியையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று கவனிக்கின்றன. மற்றொரு புறத்தில், 48 மணி நேரத்துக்கு முன்பு, ஒரு லட்சம் நிறுவனங்கள், ஒற்றைக் கையெழுத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர்கள், நிறுவனங்களின் பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது சாதாரண முடிவல்ல நண்பர்களே.

அரசியல் பார்வையில், செயல்படக் கூடியவர்களால் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. தேசத்தின் நலனுக்காக மட்டுமே வாழக் கூடியவர்களால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியும். ஒற்றைக் கையெழுத்தால் ஒரு லட்சம் நிறுவனங்களை அகற்றும் அதிகாரம்  தேசப்பற்று என்ற உந்துதலில் இருந்துதான் வந்தது. ஏழைகள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், அதை ஏழைகளிடமே திருப்பித் தந்தாக வேண்டும்.

இது மட்டுமின்றி, கருப்புப் பணம் பதுக்குதல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள 37 ஆயிரம் போலி நிறுவனங்களை அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளது. அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தில் சட்டத்தை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

போலி நிறுவனங்களை அகற்றுவது, கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆகியவை அரசியல் ரீதியாக சரியற்றது என்பதையும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நான் முழுமையாக அறிந்திருக்கிறேன். ஆனால், நாட்டுக்காக யாராவது ஒருவர் இதுபோன்ற உறுதியான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

என் பட்டயக் கணக்காள நண்பர்களே, உங்கள் இன்ஸ்டிடியூட்டின் நிறுவன நாள் நிகழ்ச்சிக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். அதிகாரத்தின் ஆதாரமாக இருக்கும் புத்தகத்தை சரி செய்யுமாறு உங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். பண மதிப்பிழப்புக்குப் பிறகு, ஒருசிலர் நிச்சயமாக அந்த நிறுவனங்களுக்கு உதவி செய்திருக்கலாம். இந்தத் திருடர்களும், கொள்ளையர்களும் சில பொருளாதார டாக்டர்களிடம் சென்றிருப்பார்கள். இந்த விஷயத்துக்காக உங்களிடம் அவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால், நிச்சயமாக அவர்கள் சிலரின் உதவியை நாடியிருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டாக வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட, உங்களிடையே அமர்ந்துள்ள, அந்த நபர்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணரவில்லையா? நண்பர்களே, நமது நாட்டில் இரண்டு லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு உதவியாளர்கள் இருப்பார்கள்.

அவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சம் இருக்கும். பட்டயக் கணக்காளர்கள் மற்றும் உதவியாளர்கள் எண்ணிக்கையை சேர்த்தால், உங்களுடைய அலுவலர்களையும் அத்துடன் சேர்த்தால், தோராயமாக எட்டு லட்சத்துக்கும் அதிகமாக வரும். உங்களுடைய குடும்பத்தில், அதாவது,  இந்தத் துறையில் நீங்கள் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறீர்கள். புள்ளிவிவரங்களில் இருந்து நீங்கள் வேகமாக விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள் என்பதால் மேலும் சில உண்மைகளை உங்கள் முன்பு வைக்கிறேன்.

நமது நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பொறியாளர்களும், மேலாண்மைப் பட்டதாரிகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரிவினர் உயர் வருவாய் தொழிலில் உள்ளவர்கள் அல்லது அதிக மரியாதைக்குரிய வேலைகளில் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நாட்டில் இதுபோன்ற தொழில்களில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால், நமது நாட்டின் நகரங்களில் கோடிக்கணக்கான ஆடம்பர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் 2 கோடியே 18 லட்சம் பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விவரங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; இருந்தாலும் நமது நாட்டில் வெறும் 32 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தங்களுடைய வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

உங்களில் யாராவது இதை நம்ப முடிகிறதா? கணக்குப் பதிவுகளை சரிபார்க்கக் கூடிய உங்களிடம் நான் இதைக் கேட்கிறேன். இந்த நாட்டில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் வெறும் 32 லட்சம் பேர்தானா?

என்  அன்பான  சக நண்பர்களே, இதுதான் நமது நாட்டில் கசப்பான உண்மை. இந்த நாட்டில் 32 லட்சம் பேர் மட்டுமே தங்களின் வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது என்று காட்டியுள்ளதாக இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சம்பளப் பட்டியலில் உள்ளவர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானம் உண்டு. பெரும்பான்மையான சம்பளம் அரசிடம் இருந்து பெறப்படுகிறது என்று நம்புகிறேன்.

இவற்றுடன், நாட்டில் உண்மையான சூழ்நிலை என்ன? எனவே , சகோதரர்களே, இந்தத் தகவல்கள் மேற்கொண்டு முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான வாகனங்கள் வாங்கப்படுவதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள். இருந்தாலும் நாட்டு நலன் குறித்த விஷயத்தில் பொறுப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை; இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

கூடுதலாக தகவல்களை குறிப்பிடுவதை விட, எனது கருத்துக்களை உங்கள் முன்பு தெரிவிக்க விரும்புகிறேன். பட்டயக் கணக்காளர் சகோதரர்களே, ஒரு நபர் அல்லது கட்சிக்காரர், தன்னைச் சுற்றியுள்ள சூழல், நேர்மையாக வரியை செலுத்த வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே, வரியை செலுத்துகின்றனர். மாறாக, உண்மையை மறைக்குமாறு ஆலோசகர் அறிவுரை வழங்கினால், அவர்கள் தவறான பாதையில் செல்ல  தைரியமாக முடிவெடுக்கின்றனர். எனவே, இதுபோன்ற தவறான ஆலோசகர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

இதற்காக நீங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பட்டய கணக்காளர்கள் விவகாரத்தில், மனித வள மேலாண்மையை உங்களால் மட்டுமே செய்ய முடியும். பாடத் திட்டங்களை நீங்கள் மட்டுமே தயார் செய்கிறீர்கள்; நீங்களே தேர்வை நடத்துகிறீர்கள்; விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் நீங்களே உருவாக்குகிறீர்கள்; உங்களது அமைப்பு மட்டுமே குற்றவாளிகளைத் தண்டிக்கிறது. ஜனநாயகத்தின் கோயில், அதாவது, 125 கோடி மக்களின் குரலான இந்திய நாடாளுமன்றம், உங்களுக்கு இந்த அளவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

அப்படி இருக்கும்போது, கடந்த 11 ஆண்டுகளில், 25 பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே தவறு செய்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்வி எழுகிறது. 25 பேர் மட்டுமே குளறுபடிகளை செய்தார்களா? மேலும், ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வழக்குகள், கடந்த பல ஆண்டுகளாகவே நிலுவையில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஒரு புகாரை மட்டுமே, முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. இதுபோன்ற  தகுதிவாய்ந்த தொழில் நிபுணத்துவம் பெற்றவர்கள் விவகாரத்தில் இது கவலை அளிக்கக் கூடியதா? இல்லையா? என்பதை என்னிடம் கூறுங்கள் எனது நண்பர்களே.

 

சகோதர, சகோதரிகளே! சுதந்திரப் போராட்டக் காலத்தில், நாட்டின் பல்வேறு இளைஞர்கள், தூக்கு மேடைக்கு சென்றனர். நாட்டின் தலைசிறந்த மக்கள் பலரும், நாட்டின் சுதந்திரத்துக்காக சிறையில் அவதிப்பட்டனர். அந்தக் காலத்தில், பல்வேறு தொழில் நிபுணர்களும், தாங்களாகவே முன்வந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள், வழக்கறிஞர்கள். இந்த வழக்கறிஞர்கள் பெருமளவில் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு சட்டம் தெரிந்திருந்தது. சட்டத்துக்கு எதிராக போராடினால், ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்கள் அறிந்துவைத்திருந்தனர். இருந்தாலும், அந்தக் காலத்தில் சட்டத்துறையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றிருந்த அனைத்து வழக்கறிஞர்களும், நாட்டுக்காக தங்களது தொழிலை விட்டுக் கொடுத்தனர்.

மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், டாக்டர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு மட்டுமன்றி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், பண்டித மதன் மோகன் மாளவியா,  பால கங்காதர திலகர், மோதிலால் நேரு, சி. ராஜகோபாலாச்சாரி, தேஷ்பந்து சித்தரஞ்சன் தாஸ், சைஃபுதின் கிச்லூ, பூலாபாய் தேசாய், லாலா லஜபதி ராய், தேஜ் பகதூர் சப்ரு, ஆசஃப் அலி, கோவிந்த் வல்லப் பந்த், கைலாஷ் நாத்கட்ஜு உள்ளிட்ட பலரும், நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர். தேசப்பற்றால் ஊக்குவிக்கப்பட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

அவர்களில் பலரும், நமது அரசியல்சாசனத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர். சகோதர, சகோதரிகளே, இந்த மாமனிதர்கள், நமது நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் என்பதை நம்மால் மறக்க முடியாது.

நண்பர்களே, வரலாற்றில், நமது நாடு மற்றொரு முக்கியமான கட்டத்தில் இன்று உள்ளது. 1947-ம் ஆண்டில் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு, இன்று பொருளாதார ரீதியில் நமது நாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த 2017-ம் ஆண்டில் நமது நாடு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே  சந்தை” என்ற கனவு நனவாகியுள்ளது. இந்த வரலாற்றுப்பூர்வமான சூழ்நிலையில், பட்டயக் கணக்காளர்களுக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது. நண்பர்களே, எனது ஆழமான உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

சுதந்திரப் போராட்டத்தின்போது, நாட்டின் சுதந்திரத்துக்காக வழக்கறிஞர்கள், தங்களது உயிரை விட்டுக் கொடுத்தனர். இன்று, நான் உங்களது உயிரை விடுமாறு கோரிக்கை விடுக்கவில்லை. சிறைக் கம்பிகளுக்கு பின்னால் செல்லக் கூடாது என்று விரும்புகிறேன்.

இந்த நாடு உங்களுடையது; மேலும், நாட்டின் எதிர்காலம், உங்களது குழந்தைகளுக்கானது. எனவே, சுதந்திரப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் தலைமைவகித்ததைப் போன்று, இந்த புதிய காலத்தின் தலைமை உங்களது கைகளில் இருக்க வேண்டும்.

இன்று பொருளாதார வளர்ச்சி, பட்டயக் கணக்காளர்கள் குழுவின் தலைமையில் இருக்கும். இந்த மாபெரும் பொருளாதார வளர்ச்சியை வலுவாக்க, வேறு யாரும் அல்ல, நீங்களே வழியை ஏற்படுத்த முடியும் என்பதை உங்களால் பார்க்க முடியும்.

உங்களது கட்சிக்காரர்களை நேர்மையின் பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலமே, ஊழலை ஒழிக்க முடியும். ஊழலை ஒழிப்பதில், நீங்கள் தலைமை வகிக்க வேண்டும்.

நண்பர்களே, பட்டயக் கணக்காளர்கள் என்பவர்கள், எந்த நாட்டிலும் பொருளாதார அமைப்பின் தூதர்களைப் போன்றவர்கள். உங்களது பணி, வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அரசுடன் இணைப்பதைப் போன்றது. உங்களது கையெழுத்து, பிரதமரின் கையெழுத்தைவிட அதிக சக்திவாய்ந்தது.

உங்களது கையெழுத்து, உண்மையின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் சாட்சியமாக உள்ளது. நிறுவனங்கள் சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும், அவர்களது கணக்குப் புத்தகத்திற்கு நீங்கள் சான்று அளித்தால், அதனை அரசும், நாட்டு மக்களும் நம்புகின்றனர். வரவு-செலவு கணக்கில் நீங்கள் கையெழுத்திட்டுவிட்டால், அந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கின் மீது யாரும் கேள்வி எழுப்புவதில்லை; அதன்பிறகு, கோப்புகள் தேங்குவதில்லை என்று நீங்கள் சிந்தித்துள்ளீர்களா. நண்பர்களே, அதன் பிறகே புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

உங்களுக்கு புதிய வாழ்க்கையை காட்டவே, நான் இங்கு வந்துள்ளேன். நிறுவனத்தின் கணக்குப் புத்தகத்திற்கு நீங்கள் சான்று அளித்தால், உங்களது மதிப்பீட்டின் மீது, அரசு அதிகாரிகள் நம்பிக்கை வைக்கின்றனர். நிறுவனம் சிறப்பான வளர்ச்சியடைந்தால், அதனுடன் நீங்களும் வளர்ச்சியடைய உள்ளீர்கள். நண்பர்களே, இந்த விவகாரம் அதனுடன் முடிந்துவிடவில்லை.

நிறுவனத்தின் வரவு செலவு கணக்கின் மீது நீங்கள் சான்றிதழ் அளிக்கும்போது, அந்த விவரங்கள் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் வைக்கப்படும்போது; மூத்த குடிமகன், தனது சேமிப்பை பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்கிறார்; ஏழை விதவைப் பெண், தனது ஒட்டுமொத்த மாதத்தின் சேமிப்பையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார். நிறுவனத்தின் உண்மையான தகவல்களை வெளிப்படுத்தாவிட்டால், உண்மைகள் மறைக்கப்பட்டால்; மற்றும் உண்மையான நிலை வெளிப்படும்போது, நிறுவனம் மட்டுமே வீழ்ச்சியடையாது, எனது அன்பு சகோதரர்களே, ஏழை விதவைகளின் வாழ்க்கையும் வீழ்ச்சியடையும். மூத்த குடிமக்களின் வாழ்க்கையும் சீர்குலையும். அவர்கள், தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும்,  உங்களது ஒரு கையெழுத்தை நம்பியே முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவின் 125 கோடி மக்களும், உங்களது கையெழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால், உங்களிடம், உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் மீதான நம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள். எந்தவொரு நபரையும் சந்தேகமடைய வைக்காதீர்கள்.

நம்பிக்கையை மீறி செயல்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களது இதயத்தின் ஆழ்மனதில் உணர்ந்தீர்களானால், முன்னோக்கி வந்து, நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை தயவுசெய்து மேற்கொள்ளுங்கள். ஜூலை 1, உங்களது அடித்தளத்துக்கான தேதி. இது, நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. உங்களை நான் அழைக்கிறேன். ஒருங்கிணைப்பை கொண்டாடும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு உங்களை அழைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். உங்களது பணியின் முக்கியத்துவத்தை நீங்கள் பாருங்கள். பிறகு உங்களது பாதையைத் தேர்ந்தெடுங்கள். சமூகம் உங்களிடமே உள்ளது என்பதை பெருமையுடன் உங்களால் நீங்களே உணர முடியும்.

நண்பர்களே, “வரிக் கணக்கு” (tax return)  என்ற வார்த்தைக்கு பல்வேறு வகையான விளக்கங்கள் உள்ளன. இருந்தாலும், அரசு எந்த வரியை வசூலித்தாலும், அதனை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினாலும், அல்லது பயன்படுத்தாவிட்டாலும், இது “வரி கணக்கு” என்று நான் கருதுகிறேன்.

இது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தனது வாழ்க்கை முழுவதும் சமைப்பதற்கு விறகுகளையே பயன்படுத்திவரும் பெண்மணிக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த நிதியானது, குழந்தைகளால் கைவிடப்பட்ட வயதான மக்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை அளிப்பதற்கு இந்த நிதி உதவும். இதன்மூலம், தனது படிப்பை முடிப்பதற்காக மாலை நேர வகுப்புகளில் அவர்களால் கலந்துகொள்ள முடியும்.

தங்களது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாத ஏழை மக்களுக்கு, ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் மருந்துகளை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்களது குழந்தைகள் உணவு இல்லாமல், தூங்கச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக பணியில் ஓய்வெடுக்க முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்க முடியும்.

வரி மூலம் சேகரிக்கப்படும் நிதி, நம்மைப் பாதுகாப்பதற்காக,  எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து செயல்படும் வீரதீர ராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிதி, சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், மின்சார விநியோகம் இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும். இவர்கள், தங்களது வீடுகளில் இதுவரை ஒரு பல்பை கூட ஒளிரவிட்டிருக்க மாட்டார்கள்; அவர்கள் மின்சாரம் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டியதை,  வழங்கி உதவுவதைவிட மிகப்பெரிய சேவையாக வேறு என்ன இருக்க முடியும். உங்களது ஒரு கையெழுத்தின் மூலம், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ முடியும் என்பதை நீங்கள் இதுவரை சிந்தித்திருக்க மாட்டார்கள்.

இந்த நாட்டின் சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது; இதில், உங்களால் முக்கியப் பங்கு வகிக்க முடியும். இதில், நீங்கள் ஒரு முறை முடிவுசெய்து விட்டீர்களானால், அதன்பிறகு, ஜூலை 1, 2017 என்பது, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன வரலாற்றில் நிச்சயமாக திருப்பு முனையாக இருக்கும்.

மேலும், நண்பர்களே, நீங்கள் ஒருமுறை சபதம் ஏற்றுவிட்டீர்கள் என்றால், யாருமே வரிஏய்ப்பு செய்ய முயற்சி மேற்கொள்ள மாட்டார்கள் என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். நம்மை சிலர் பாதுகாக்க வருவார்கள் என்று தெரியும்போது மட்டுமே, சட்டத்தை மீறி மக்கள் செயல்படுகின்றனர்.

நண்பர்களே, நாட்டை கட்டமைப்பதில் உங்களுக்கு ஒரு கருவியாக ஜி.எஸ்.டி. திகழ உள்ளது; மக்களைச் சென்றடையுங்கள் என்று உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த வழியாக சென்றபோது, ஜி.எஸ்.டி.-யை வணிகர்களுக்கு நீங்கள் புரியவைப்பீர்கள் என்று நீலேஷ் கூறினார். அவருக்கு வாழ்த்துக்கள். எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் சேருமாறு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இந்த வழியில், பட்டய கணக்காளர் துறையில் உள்ளவர்களுக்கு புதுமையான வாய்ப்புகளை அரசு வழங்கியுள்ளது. இதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்; குறிப்பாக, இந்தத் துறையில் உள்ள இளம் நிபுணர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றிய சட்டங்கள், குறிப்பாக, திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை குறித்த விதிகளை, சரியாக அமல்படுத்துவதில், பட்டய கணக்காளர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறீர்கள். எனவே, முன்னோக்கி வாருங்கள்.

இந்த விதியின் படி, நிறுவனம் நொடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டால், அதன் கட்டுப்பாடுகள், திவாலாதல் கட்டுப்பாட்டாளரிடம் சென்றுவிடும். திவாலாதல் கட்டுப்பாட்டாளராக பட்டயக் கணக்காளர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியும்.  இது, உங்களுக்காக அரசு தொடங்கியுள்ள புதிய பாதை. நீங்கள் இன்றைய சூழலில் எந்தப் பாதையை தேர்வுசெய்தாலும், அந்த வழியில், பட்டயக் கணக்காளர்கள் (CA) என்பது உரிமை சாசனம் (Charter) மற்றும் துல்லியம் (Accuracy),  இணக்கம் மற்றும் நம்பத்தக்க தன்மை ( Compliance and Authenticity) என இருக்க வேண்டும்.

நண்பர்களே, 2022-ம் ஆண்டில் நமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ளது. 2022-ம் ஆண்டுக்கு சில இலக்குகளை நாடு நிர்ணயித்துள்ளது. நமது அனைவரிடமிருந்து கடின உழைப்பையும், தொழில் நிறுவனங்களையும் புதிய இந்தியா எதிர்பார்க்கிறது.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்யும்போது, இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒரு நிறுவனம், பட்டயக் கணக்காளர், தனிநபர் மற்றும் குடிமகன் என்ற அடிப்படையில் முடிவுசெய்து, அதற்கு ஏற்ப நமது நாடு மாறும் வகையில், நமது பங்களிப்பை செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்யும் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 ஆண்டுகளைக் கடந்தபிறகு, இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு, தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

உங்களது அமைப்பின் 75 ஆண்டுகள் நிறைவின்போது, அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை நீங்கள் இன்றே வகுக்க வேண்டும். அந்த வரலாற்றுப்பூர்வமான காலத்துக்கு, இந்த அமைப்பையும், அதன் செயல்பாடுகளையும் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல செயல் திட்டங்களை நீங்கள் இன்றே வகுக்க வேண்டும். நாட்டுக்காகவும், கோடிக்கணக்கான ஆர்வமுடைய  இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவும் நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள் என்பதை முடிவுசெய்யுங்கள்.

நாட்டுக்காக வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத அமைப்பை அளிக்க உங்களால் உதவ முடியாதா? நீங்கள் என்ன சொல்ல உள்ளீர்கள்? வரி செலுத்துவதிலிருந்து எத்தனை பேரை பாதுகாத்துள்ளீர்கள் என்பதை பார்க்க உள்ளீர்களா? அல்லது வரியை செலுத்தி நேர்மையான வாழ்க்கை அமைய எத்தனை பேரை ஊக்குவித்தீர்கள் என்று பார்க்க உள்ளீர்களா? இதில், எது வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.

நேர்மையான முறையில் வரியை செலுத்தச் செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை பேரை நீங்கள் கொண்டுவர உள்ளீர்கள் என்பதற்கான இலக்கை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இலக்கை நிர்ணயிப்பதில் உங்களைவிட வேறு சிறந்த நீதிபதியாக யார் இருக்க முடியும்?

உங்களது தொழில் துறையில், தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எவ்வாறு விரிவுபடுத்த முடியும் என்பதையும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பட்டய கணக்கியல் துறையில் தடயவியல் அறிவியலின் பங்கு என்னவாக இருக்கும்? இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும்? இதற்கான இலக்கையும் முடிந்தால் நீங்கள் நிர்ணயிக்கலாம்.

நண்பர்களே, உங்களால் முடியும் என்பதால் உங்களிடம் எனக்கு மற்றொரு எதிர்பார்ப்பு உள்ளது., இதனை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இதில் நீங்கள் ஏன் பின்தங்கியுள்ளீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நண்பர்களே, உலக அளவில் மதிப்புமிகுந்த 4 கணக்கு தணிக்கை நிறுவனங்கள் உள்ளன. மிகப்பெரும் நிறுவனங்களும், அமைப்புகளும், தங்களது கணக்கு தணிக்கைப் பணிகளை இந்த 4 நிறுவனங்களிடமே வழங்குகின்றன. இவை மிகப்பெரும் 4 நிறுவனங்கள் (big four) என்று அழைக்கப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களின் அருகில் கூட நாம் இடம்பெறவில்லை. இந்த இடத்தை உங்களால் பிடிக்க முடியும். இதற்கான திறனில் நம்மிடம் பற்றாக்குறை எதுவும் இல்லை. எனது நண்பர்களாகிய உங்களால் ஓர் இலக்கை நிர்ணயிக்க முடியுமா? உலக அளவில் இந்தியா மதிப்பு பெறவேண்டுமானால், 2022-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-ம் ஆண்டை கொண்டாடும்போது, உலக அளவில் கவுரவிக்கப்படும் நிலையை இந்தியா எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்க முடியும். அதன்பிறகு, இந்த மிகப்பெரும் 4 நிறுவனங்கள் என்பதை மிகப்பெரும் 8 நிறுவனங்கள் என்று நம்மால் மாற்ற முடியும்.

இந்த மிகப்பெரும் 8 நிறுவனங்களில், 4 நிறுவனங்கள், என் முன்னால் இங்கு அமர்ந்திருக்கும் மக்களுடையதாக இருக்க வேண்டும். நண்பர்களே, இது நமது கனவு. நமது நிறுவனங்களுக்கு மதிப்பையும், தொழில் நிபுணத்துவத்தையும் வழங்குவதில் சிரமம் கிடையாது.

எனது நண்பர்களே, உலக அளவில் பட்டய கணக்காளர் துறையில் நீங்கள் மதிக்கப்படுபவராக இருக்க வேண்டியது அவசியம். இறுதியாக, மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிக்கத்தக்க பொருளாதார நிபுணரான சாணக்கியரின் அறிவுரையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாணக்கியர் கூறும்போது, “ஒரு செயலை சரியான நேரத்தில் செய்யாவிட்டால், வெற்றியின் மதிப்பை காலம் தான் குறைக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். எனவே, உங்களது நேரத்தை வீணடித்துவிடாதீர்கள்.

சிறிது நேரத்துக்கு முன்பு அருண் ஜேட்லி அவர்கள் உங்கள் முன்னிலையில் பேசினார்; அவர் பேசும்போது, இந்த மாதிரியான வாய்ப்புகள் இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு கிடைத்ததில்லை என்று கூறினார். இது உங்களுக்கும் அரிதான நேரம். இந்த வாய்ப்பை உங்களைத் தாண்டிச் சென்றுவிட அனுமதிக்காதீர்கள்.

இந்தியாவின் வளர்ச்சியில், முக்கிய இடத்தில் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுப்பதற்காக நான் வந்துள்ளேன். ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதுகாக்கவும், நீடித்து இருக்கச் செய்யவும் இந்த தொழில் துறைக்கு திறன் இருக்கிறது என்ற உண்மையை பார்க்க மறந்துவிடாதீர்கள். இந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் நிறுவன தினத்தையொட்டி, நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், இந்த அமைப்பின் ஒட்டுமொத்த பயிற்றுநர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடியோ இணைப்பு மூலம், இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, மற்ற நாடுகளில் இருந்தபடி, இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் நமது நாட்டின் பட்டய கணக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்; புதிய உற்சாகத்துடனும், நேர்மை என்ற கொண்டாட்டத்தில், இந்த நாட்டின் சாதாரண மக்களையும் ஈடுபடுத்தி புதிய பாதையை ஏற்படுத்தியும், புதிய கோணத்தில் நாம் முன்னோக்கிச் செல்வோம் என்ற வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏராளமான நன்றிகள் எனது நண்பர்களே, ஏராளமான நன்றிகள்.