Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பசுமை வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

பசுமை வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


வணக்கம்!

2014-ஆம் ஆண்டிலிருந்து அனைத்து பட்ஜெட்டுகளிலும் ஒரு சிறந்த நடைமுறை உள்ளது. நமது ஒவ்வொரு பட்ஜெட்டும் புதிய காலங்களுக்கான சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அமைந்துள்ளன. பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்ற நடைமுறைகளுக்கு முக்கியத் தூண்களாக  3 அம்சங்கள் உள்ளன. முதலாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை அதிகரிப்பதாகும், இரண்டாவது படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதாகும். மூன்றாவதாக எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நாட்டில் விரைந்து முன்னெடுத்துச் செல்வதாகவும், இந்த உத்திகளின் ஒரு பகுதியாக  பட்ஜெட்டுகளில் தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  எத்தனால் கலப்பு, பிரதமரின் வேளாண் எரிசக்திப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம், சூரிய மின்சக்தியை ஊக்குவித்தல், மேற்கூரை சூரியசக்தி தகடுகள் அமைத்தல், நிலக்கரி வாயு உருவாக்கம் மற்றும் பேட்டரி மூலம் மின்சக்தி சேமிப்பு ஆகிய வழிமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.  இந்த ஆண்டு பட்ஜெட்டிலும், முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  தொழிற்சாலைகளுக்கான பசுமைக் கடன், விவசாயிகளுக்கான பிரதமரின் பிரணம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு கோபர்தன் திட்டம், நகரங்களுக்கான வாகனக் கழிவுக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பசுமை ஹைட்ரஜன் மற்றும் ஈர நிலப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் எதிர்கால தலைமுறையினருக்கு பசுமை வளர்ச்சியில் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்கான அடித்தளமாக அமையும்.

நண்பர்களே,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இந்தியா வலிமையான நிலையை அடையும் போது, ஒட்டுமொத்த உலகத்திற்கும் மாற்றத்தைக் கொண்டு வரும். சர்வதேச பசுமை எரிசக்திச் சந்தையில், இந்தியாவை முன்னணி நாடாகத் திகழச் செய்ய இந்த பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, உலகில் உள்ள எரிசக்தித்துறை முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இன்று உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பன்முகத் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பசுமை முதலீட்டாளர்களும் இத்துறையில், முதலீடு செய்ய இந்த பட்ஜெட்டின் மூலம் இந்தியா சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இத்துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இது பலன் அளிக்கும்.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான இலக்குகளை இந்தியா குறைந்தக் காலத்திற்கு முன்பே அடைந்துள்ளதை நமது பயணம் எடுத்துக் காட்டுகிறது.  கடந்த 9 ஆண்டுகளில், நிறுவப்பட்ட மின் திறனில் 40 சதவீதம் புதைப்படிவமற்ற எரிபொருட்கள் பங்களிப்பைக் கொண்டதாக அமைந்துள்ளதுடன், இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்தியா எட்டியுள்ளது.  பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்புக்கான இலக்கையும்  5 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே எட்டி 2025-26-ஆம் ஆண்டுக்குள் அடைந்துவிடும். 500 ஜிகாவாட்  புதைப்படிமம் அற்ற நிறுவப்பட்ட மின் திறன் இலக்கை  2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா எட்டும். உயிரி எரிபொருட்களுக்கு நமது அரசு வழங்கும் முக்கியத்துவம் முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அண்மையில், இ-20 எரிபொருளை நான் அறிமுகம் செய்தேன். நாட்டின் வேளாண் கழிவுகள் அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், மூலை முடுக்கெல்லாம் எத்தனால் ஆலைகளை நிறுவ முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும். சூரியசக்தி, காற்று மற்றும் உயிரி எரிவாயு ஆகியவை தனியார் துறையினருக்கு தங்கச் சுரங்கம் அல்லது எண்ணெய் வயல்களைவிடக் குறைவானது அல்ல.

நண்பர்களே, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யும் குறிக்கோளுடன் இந்தியா செயல்படுகிறது. இத்துறையில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க 19,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரோலைசர் உற்பத்தி பசுமை எஃகு உற்பத்தி, நீண்ட தூரம் போக்குவரத்திற்கான எரிபொருள், செல் உற்பத்தி போன்றவற்றில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

நண்பர்களே,

கோபரிலிருந்து (பசு சாணம்) 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது.. இதே போல், ஒன்றரை லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயுவை வேளாண் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் 8 சதவீதம் அளவிற்கு எரிவாயுவை நாட்டின் நகரப்பகுதிகளுக்கு விநியோகம் செய்ய முடியும்.

இது போன்ற சாத்தியக் கூறுகளால் கோபர்தன் திட்டம்  இந்தியாவின் உயிரி எரிவாயு உத்தியில், மிக முக்கியப் பிரிவாக உருவெடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டில், கோபர்தன் திட்டத்தின் கீழ் 500 புதிய ஆலைகளை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது பழைய ஆலைகளைப் போல் அல்லாமல், நவீன முறையில் அமைக்கப்படும். இந்த ஆலைகளுக்காக ரூ.10,000 கோடி நிதியை அரசு செலவு செய்யும். கழிவுகளிலிருந்து ஆற்றல் என்ற அரசின் திட்டம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினருக்கு நாட்டில் புதிய சந்தையை ஏற்படுத்தித் தருகிறது. வேளாண் கழிவு, நகராட்சி திடக்கழிவு ஆகியவற்றிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் தனியார் துறையினர் சிறந்த வாய்ப்புகளைப் பெறமுடியும். தனியார் துறையினரை ஊக்குவிக்க நிதி உதவிகளுடன் வரிச்சலுகைகளையும் வழங்குகிறது.

நண்பர்களே,

வாகனக் கழிவுக் கொள்கை, பசுமை வளர்ச்சி உத்தியில் முக்கியப் பகுதியாகும். மத்திய, மாநில அரசுகளின் 3 லட்சம் வாகனங்களை கழிவு செய்வதற்கு இந்தப் பட்ஜெட்டில் ரூ.3,000 கோடி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வாகனங்கள் கழிவு செய்யப்படும். அதாவது, காவல்துறை வாகனங்கள், மருத்துவ அவசர ஊர்திகள், பேருந்துகள் உள்ளிட்ட 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இதில் அடங்கும். மறுபயன்பாடு, மறு சுழற்சி, மீட்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வாகனக் கழிவு, சிறந்த சந்தையாக மாறிவருகிறது. இது நமது பொருளாதார சுழற்சிக்கு புதிய வலிமையை அளிக்கிறது. சுழற்சிப் பொருளாதாரத்தின்  பல்வேறு வகைகளில் இணைய வேண்டும் என்று இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நான் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில், இந்தியாவின் பேட்டரி சேமிப்புத் திறன் 125 ஜிகாவாட் மணி நேரங்களாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு உங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இலக்கை எட்ட பல லட்சம் கோடி மூபாய் முதலீடுகள் தேவை.  எனவே, இதைக் கருத்தில் கொண்டு  பேட்டரி வடிவமைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தேவைக்கு ஏற்ப நிதியுதவி வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. நீர் அடிப்படையிலான போக்குவரத்து இந்தியாவின் மிகப் பெரிய குறையாக உள்ளது. இது எதிர்காலத்தில் நீர்ப்போக்குவரத்து மிகச் சிறந்த துறையாக வேகம் பெறும். நாட்டின் கடல்வழி சரக்குப் போக்குவரத்து தற்போது 5 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதே போல் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மூலம் 2 சதவீத சரக்குப் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவின் நீர்வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இது, இத்துறையில் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

பசுமை எரிசக்திக்கான தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை உலகிற்குத் தலைமை தாங்குவதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது. இது பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அப்பால் உலகளாவிய நன்மைக்கான காரணிகளை முன்னெடுத்துச் செல்லும். இந்த பட்ஜெட் வாய்ப்பாக மட்டுமல்லாமல் நமது எதிர்கால பாதுகாப்புக்கான  உத்தரவாதத்தையும்   கொண்டுள்ளது பட்ஜெட்டில் என்ன இடம் பெறவேண்டும் என்ன இடம் பெறக் கூடாது என்பதற்கான விவாதம் இதுவல்ல. பட்ஜெட் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அமல்படுத்துவதற்கு நாம் விரைவாக செயல்பட வேண்டும். பட்ஜெட் முன்மொழிவுகளை அமல்படுத்த உங்களுடன் இணைந்து செயல்பட அரசு தயாராக உள்ளது. முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர், வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள், வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள்  உள்ளிட்டோர் இந்த இணையவழிக் கருத்தரங்கிற்காக நேரம் ஒதுக்கியதற்கு மீண்டும் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால வெற்றிக்காக நான் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி!

***

(Release ID:1901638)

AP/PLM/KPG/KRS