நொய்டாவில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைக்குப் பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், தில்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தை நொய்டா சிட்டி செண்டரில் இருந்து நொய்டாவின் செக்டர் 62 வரை 6.675 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 1967 கோடி செலவில் நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசு மானியம் மற்றும் சார்புக் கடனாக ரூ. 340.60 கோடி அளிக்கும்.
விவரங்கள்:
1. தில்லி மெட்ரோவை நொய்டா சிட்டி செண்டரில் இருந்து நொய்டா செக்டர் 62 வரை 6.675 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2. இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கான மொத்த செலவு ரூ. 1967 கோடி ஆகும்.
3. இந்த திட்டப்பணி தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், இந்திய அரசு மற்றும் தில்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசின் சிறப்பு நோக்க வாகனத்தால் நடைமுறைப்படுத்தப்படும்.
4. இந்தத் திட்டத்தின் சட்ட பூர்வமான கட்டமைப்பு மெட்ரோ சட்டம், மெட்ரோ ரயில்வே (கட்டுமான பணிகள்) சட்டம் 1978 மற்றும் மெட்ரோ ரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டபடி உள்ளடங்கியதாக இருக்கும்.
பெரும் தாக்கம்:
நொய்டா சிட்டி செண்டரில் இருந்து நொய்டா செக்டர் 62 வரை தில்லி மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுவது துவார்கா நொய்டா ரயில் வழித்தடத்தின் நீட்டிப்பாக இருக்கும். இது மக்கள் நகர்வை உறுதிப்படுத்தும். இதன் மூலம் தில்லி நகரின் நெருக்கடி குறையும். இதனால் இந்தப் பகுதியில் குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்கள் உருவாகும். இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவது வாகனப் போக்குவரத்தை குறைத்து பயன் நேரம் மற்றும் எரிபொருள் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்.
இந்த விரிவுபடுத்தப்படும் வழித்தடம் காரணமாக நொய்டா மற்றும் சுற்றுப்புற மக்கள் அதிக அளவு பயனடைவார்கள். திட்டம் செயல்படுத்தப்படும் பணியில் பொறியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உட்பட சுமார் 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வழித்தடசெயல்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 200 பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கட்டுமான பணியில் 81 சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த நிதி முன்னேற்றத்தில் 50 சதவீதமும் எட்டப்பட்டுள்ளது.
பின்னணி:
உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா நகரம், உத்தரப் பிரதேச தொழில் பகுதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இங்கு அனைத்து வசதிகளும் இருப்பதுடன் இது தில்லியின் மிகவும் நவீன வசதிகளை கொண்ட புறநகராக திகழ்கிறது. 2011 மக்கள் தொகைப்படி நொய்டாவின் எண்ணிகை 6.42 லட்சமாகும். பசுமை மற்றும் திறந்தவெளி நிறைந்திருப்பதால் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் இங்கு குடியேற விரும்புகின்றனர்.
நொய்டாவின் நகர்ப்புறமாகும் போக்கு அதிகரித்து வருகிறது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவுடன் நொய்டாவுக்கு சாலை இணைப்புகள் உள்ளன. பல பகுதிகளில் இருந்து நொய்டாவுக்கும் இங்கிருந்து பல பகுதிகளுக்கு மக்கள் வேலைக்கு செல்கின்றனர். இதன் காரணமாகவே மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து தேவை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இணைப்பு பெற்ற நொய்டாவுக்கு நொய்டா சிட்டி செண்டர் வரை தற்போது ரயில் இயக்கப்படுகிறது. இதனை நொய்டா செக்டர் 62 வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆறு ரயில் நிலையங்கள் அடங்கும். நொய்டாவில் ரயில் நிலையம் கிடையாது. ஹஸ்ரத் நிஜாமுதீன் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். புதுதில்லி நொய்டாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தில்லி விமான நிலையம் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வரும் ஆண்டுகளில் நொய்டாவின் மக்கள் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*****
A decision that will benefit the people of Noida as well as the NCR. https://t.co/niH38kLhRa
— Narendra Modi (@narendramodi) May 16, 2018
via NMApp