Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நொய்டாவில் மெட்ரோ திட்டத்தில் முன்னேற்றம் – நொய்டா பெருநகர மெட்ரோ ரயில் திட்டம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 29.07 கிலோ மீட்டர் தொலைவிலான நொய்டா பெருநகர மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கான மொத்த செலவு ரூ5,503 கோடியாகும்.

நொய்டா மற்றும் நொய்டா பெருநகரங்களுக்கிடையேயான இந்த மெட்ரோ ரயில் இணைப்பு, தில்லியின் இந்த இணைப்பு நகரங்களுக்கு தில்லியிலிருந்து செல்லும் மக்களுக்கு பெரும் வகையில் உதவி புரியும். இதனால் தில்லியின் நெரிசல் பெரும் வகையில் குறையும். இதன் காரணமாக இந்தப் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளும், வணிகப் பகுதிகளும் வளரும். மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படடால், சாலைகளில் வாகன நெரிசல் குறைந்து, குறைந்த நேரத்தில் மக்கள் குறித்த இடத்துக்கு செல்ல முடியும். இதனால் படிம எரிபொருட்களின் பயன்பாடு குறைந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். நொய்டா பெருநகரத்தில் வசிக்கும் 7.50 லட்சம் மக்கள் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் பெரும் பயனை அளிக்கும்.

இந்த திட்டம் நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். இந்த நிறுவனத்தில் மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு ஆகியவை சமமான பங்குதாரர்களாக இருக்கும். தற்போது உள்ள நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனம், ஒரு சிறப்பு நிறுவனமாக மாற்றப்பட்டு, மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசின் கூட்டு நிறுவனமாக மாற்றப்பட்டு, அந்நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தால் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு பெருகும். திறன் படைத்த மற்றும் திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு இது வேலை வாய்ப்பை வழங்கும். இத்திட்டத்தின் ஆரம்பகால செயல்பாடுகளின்போது, பல மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இத்திட்டத்திற்கான அறிக்கையின் படி, இத்திட்டம் ஏப்ரல் 2017ல் நிறைவடைய உள்ளது. இது வரை 70 சதவீத கட்டுமான பணிகள் மற்றும் 40 சதவீத நிதி பயன்பாடு ஆகியவை முடிந்துள்ளன.

மத்திய மெட்ரோ சட்டங்கள், மெட்ரோ ரயில் (கட்டுமான பணிகள்) சட்டம் 1978 மற்றும் மெட்ரோ ரயில் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2007 ஆகிய சட்டங்கள் இத்திட்டத்துக்கான வழிகாட்டும் சட்டங்களாக அமையும்.

பின்னணி :

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சி சட்டத்தின் படி உருவாக்கப்பட்டது. தில்லி பிரதேசத்தின் புறநகரான நொய்டா, நவீன நகரமாக அனைத்து நவீன வசதிகளோடு உள்ள நகராக உருவெடுத்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நொய்டா மற்றும் நொய்டா பெருநகரம் ஆகியவற்றின் மக்கள் தொகை 7,50,000. இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 19,00,000ஆக அதிகரிக்க உள்ளதாக மதிப்பிடப் படுகிறது. தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள், நொய்டா நகரை தங்குவதற்கு ஏற்ற நகராக தேர்ந்தெடுத்துள்ளனர். நொய்டா நகரில் 10,000 தொழில் நிறுவனங்களை தொடங்க முடியும். தற்போது 7,500 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2,00,000 மக்களுக்கு நொய்டா வேலை வாய்ப்பை வழங்குகிறது. நொய்டாவிலிருந்து தில்லி மற்றும் அரியானாவிற்கு சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. நொய்டாவில் ரயில் போக்குவரத்து வசதி கிடையாது. இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் மட்டுமே. இது நொய்டாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நொய்டாவுக்கு அருகில் உள்ள தில்லி ரயில் நிலையம் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தில்லியின் துணை நகரமாக கருதப்படும் நொய்டா, 2021ம் ஆண்டில் நொய்டாவின் மக்கள் தொகை 12 லட்சமாகவும் அதன் வேலை வாய்ப்பு வழங்கும் சாத்தியக்கூறுகள் 4,50,000ஆக உயர வாய்ப்பு உள்ளது. நொய்டா பெருநகரத்தில் குடியிருப்புப் பகுதிகள் வளரத் தொடங்கியிருந்தாலும், அது இன்னும் வளரும் திட்டமாகவே இருந்து வருகிறது. தில்லி மற்றும் நொய்டாவுக்கு பயணம் செய்ய போக்குவரத்து வசதியின் தேவை அதிகமாக இருக்கிறது. நொய்டா பெருநகரத்தில் வசிப்பது விலை குறைவாக இருப்பதால், பெரும்பான்மையான மக்கள், நொய்டா பெருநகரத்தில் தங்கி, நொய்டா மற்றும் தில்லிக்கு வேலைக்காக செல்வதை விரும்புகின்றனர். நொய்டா பெருநகரத்திலிருந்து நொய்டா மற்றும் தில்லிக்கு செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் சாலை போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். நொய்டாவில் ரயில் நிலையம் கிடையாது. நொய்டாவுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையமான பொராகி நொய்டா பெருநகர மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தில்லி விமான நிலையம் நொய்டா பெருநகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வரக் கூடிய ஆண்டுகளில் நொய்டா மற்றும் நொய்டா பெருநகரத்தின் மக்கள் தொகை பெருமளவில் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.