பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்கள் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் தொழில் செய்வதை எளிமை ஆக்கும் வகையில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை எளிமையாக்குவதையும், தாராளமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன் மூலமாக முதலீடு, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் பெருமளவு நேரடி அந்நிய முதலீடு அதிகரிக்கும்.
நேரடி அந்நிய முதலீடு (FDI), பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாக இது இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்கீழ் பெரும்பாலான துறைகள் / செயல்பாடுகளில் ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% வரையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப் படுகிறது. பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, காப்பீடு, ஓய்வூதியம், இதர நிதிச் சேவைகள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், ஒலிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து துறை, டிரேடிங் உள்ளிட்ட பல துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அண்மையில் அரசு சீர்திருத்தங்கள் செய்தது.
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2013 – 14-ல் இது 36.05 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2015-16ல் கிடைத்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 55.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2016-17 நிதி ஆண்டில் இது 60.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, முன் எப்போதையும்விட அதிக அளவாக வந்திருக்கிறது.
நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை மேலும் தாராளமாக்குவது மற்றும் எளிமையாக்குவதன் மூலம், இன்னும் அதிகமான அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணரப்பட்டது. அதற்கேற்ப நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
விவரங்கள் :
ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் (SBRT) FDI-க்கு இனி அரசின் அனுமதி பெறத் தேவையில்லை.
சிவில் விமானப் போக்குவரத்து
வழக்கில் உள்ள கொள்கையின்படி, அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத விமான போக்குவரத்து சேவையில் உள்ள இந்திய நிறுவனங்களின் மூலதனத்தில், 49% வரையில், அந்நிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் முதலீடு செய்யலாம். இருந்தபோதிலும், இந்த வசதி இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பொருந்தாது. அதனால் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியாது. இப்போது இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, பின்வரும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது:
கட்டுமான மேம்பாடு : நகரியங்கள், வீட்டுவசதி, கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கிங் சேவைகள்
ரியல் எஸ்டேட் புரோக்கிங் சேவை என்பது ரியல் எஸ்டேட் வியாபாரத்துடன் மட்டும் முடிந்துவிடாது என்று தெளிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமேடிக் முறையில் இது 100% FDI-க்கு தகுதி பெறுகிறது.
மின்சார இணைப்பகங்கள்
வழக்கில் உள்ள கொள்கையின்படி மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய (மின்சார சந்தை) கட்டுப்பாடுகள், 2010-ன் கீழ் பதிவு செய்துள்ள மின்சார இணைப்பகங்களில் 49% FDI, ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், FII/FPI கொள்முதல்கள் இரண்டாவது நிலை சந்தை அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இப்போது, இந்த விதியை நீக்குவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் FII/FPI-கள் பிரதானச் சந்தையிலேயே மின்சார இணைப்பகங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்.
FDI கொள்கையின் கீழ் பிற ஒப்புதல் தேவைகள் :
கவலை ஏற்படுத்தும் நாடுகளில் இருந்து FDI முன்மொழிவுகளை ஆய்வு செய்யும் பொருத்தமான ஆணையம்
வழக்கில் உள்ள நடைமுறைகளின்படி, செயல்பாட்டில் உள்ள FEMA 20, FDI கொள்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்களின்படி, பாதுகாப்புத் துறை அனுமதி தேவைப்படும், கவலை தரும் நாடுகள் தொடர்பான முதலீடுகள் குறித்த FDI விண்ணப்பங்கள், ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படும் துறைகள் /செயல்பாடுகள் பிரிவின் கீழ் வந்தால் உள்துறை அமைச்சகம் (MHA) மூலம் பரிசீலிக்கப்படும். அரசு ஒப்புதல் பெற வேண்டிய துறைகள் / செயல்பாடுகள் பிரிவின் கீழ் பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற வேண்டியவையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்கள் / துறைகள் மூலம் ஆய்வு செய்யப்படும். ஆட்டோமேடிக் முறை துறைகளில் முதலீடுகளுக்கு, கவலை தரும் நாடு என்ற அம்சத்தில் மட்டும் முதலீடுகளுக்கான ஒப்புதல் தேவைப்பட்டால், அந்த FDI விண்ணப்பங்களை அரசின் ஒப்புதலுக்கு தொழில் கொள்கை & மேம்பாட்டுத் துறை (DIPP) பரிசீலனை செய்யும் என இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு ஒப்புதல் முறையின் கீழ் வரும் நேர்வுகளிலும், கவலை தரும் நாடு என்ற வகையில் பாதுகாப்புத் துறை ஒப்புதல் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறை/ அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுவது தொடரும்.
மருந்துகள் துறை :
மருந்துகள் தயாரிப்புத் துறையில் FDI கொள்கையின்படி, FDI கொள்கையில் குறிப்பிட்டுள்ள `மருத்துவ உபகரணம்’ என்பதற்கான வரையறை மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் திருத்தத்துக்கு உள்பட்டது. இந்தக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள வரையறை முழுமையாக இருக்கும் காரணத்தால், FDI கொள்கையில் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மேற்கோள் காட்டுவதைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, FDI கொள்கையில் உள்ளவாறு `மருத்துவ உபகரணங்கள்’ என்பதற்கான வரையறையைத் திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தணிக்கை நிறுவனங்கள் குறித்த கட்டுப்பாட்டு நிபந்தனைகளைத் தடை செய்தல் :
இப்போதுள்ள FDI கொள்கையின்படி, அந்நிய முதலீடுகளைப் பெறும் இந்திய நிறுவனங்களில் நியமிக்கப்படும் தணிக்கையாளர்களைப் பொருத்தவரை எந்த விதிமுறைகளும் கிடையாது. இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர் சர்வதேச நெட்வொர்க் உள்ள ஒரு குறிப்பிட்ட தணிக்கையாளர் / தணிக்கை நிறுவனத்தைக் குறிப்பிட விரும்பினால், அப்போது முதலீடு பெறும் அந்த நிறுவனங்களின் தணிக்கை கூட்டாக செய்யப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு தணிக்கையாளர் அதே நெட்வொர்க்கை சாராதவராக இருக்க வேண்டும் என்றும் FDI கொள்கையில் விதிமுறை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
******