பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் திரு.கே.பி. சர்மா ஒளியுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், இரு நாட்டு மக்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கொரோனோ தொற்றுக்கு எதிராக தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
நேபாளத்தில் பிரதமர் ஒளியின் தலைமையின் கீழ் இயங்கும் அரசு மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும், கொரோனோ சவாலுக்கு எதிரான நேபாள மக்களின் தீர்மானமான உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
பெருந்தொற்று பரவாமல் தடுக்க, சார்க் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மேற்கொண்ட முன்முயற்சிகளைப் பிரதமர் ஒளி பாராட்டினார். இந்த விஷயத்தில் நேபாளத்துக்கு இந்தியா இருதரப்பு ரீதியிலான ஆதரவை வழங்கியதற்காக அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உலகளாவிய இந்தத் தொற்றுக்கு எதிரான போரில் நேபாளத்தின் முயற்சிகளுக்கு இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். கொவிட்-19 காரணமாக, எல்லை கடந்து அத்தியாவசியப்பொருட்களை விநியோகிப்பது உள்பட, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, தங்கள் நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்தவாறு, பரஸ்பர ஆலோசனைகளை வழங்குவதுடன் ஒத்துழைப்பு அளிப்பதெனவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
நேபாளப் பிரதமர் ஒளி மற்றும் அந்நாட்டு மக்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
*****
Spoke today with Prime Minister of Nepal, Shri @kpsharmaoli. We discussed the prevailing situation due to COVID-19. I appreciate the determination of people of Nepal to fight this challenge. We stand in solidarity with Nepal in our common fight against COVID-19.
— Narendra Modi (@narendramodi) April 10, 2020