பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கப்பலோட்டுதல் மற்றும் கலங்கரை விளக்க அதிகாரிகளுக்கு கடல்சார் உதவிகளை வழங்கும் சர்வதேச சங்கம் ( International Association of Marine Aids to Navigation and Lighthouse Authorities) (IALA), தனது அரசு சாரா அமைப்பு (NGO) என்ற தகுதிநிலையில் இருந்து அரசுகள்-இடை அமைப்பாக (IGO) மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னணி :
செயின்ட் ஜெர்மெயினென் லாயேவில் (பிரான்ஸ்) தலைமையிடத்தைக் கொண்டுள்ள IALA அமைப்பு, பிரெஞ்சு சட்டத்தின் கீழ் 1957ல் உருவாக்கப்பட்டது. 83 தேசிய உறுப்பினர்களைக் கொண்ட பொது சபையால் அது நிர்வகிக்கப்படுகிறது. அதன் கவுன்சில் தான் நிர்வாக அமைப்பாக செயல்படுகிறது. IALA கவுன்சிலில் 24 தேசிய உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இந்தியாவும் ஒரு கவுன்சில் உறுப்பினர் ஆகும். கப்பல் போக்குவரத்துத் துறையின் கலங்கரைவிளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்கள் இயக்குநரகத்தின் தலைமை இயக்குநர் இதற்கான பிரதிநிதியாக இருக்கிறார். கலங்கரைவிளக்கச் சட்டம் 1927-ன் கீழ் DGLL அந்தமான் நிகோபர் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட இந்திய கடலோரத்தில், பொதுவான நீர் பரப்பில் கடல்வழிகாட்டுதல் உதவிகளை ஏற்படுத்தி பராமரித்து வருகிறது.
ஸ்பெயினில் லா கொருனாவில் மே 2014ல் நடைபெற்ற 12வது மாநாட்டில், IALA-வின் தகுதிநிலையை NGO என்பதில் இருந்து IGO-வாக மாற்றுவது 21 ஆம் நூற்றாண்டில் IALA-ன் நோக்கங்களை சிறப்பாக அடைய வழிவகுக்கும் என்று கப்பலோட்டுதல் மற்றும் கலங்கரை விளக்க அதிகாரிகளுக்கு கடல்சார் உதவிகளை வழங்கும் சர்வதேச சங்க பொதுச்சபை (International Association of Marine Aids to Navigation and Lighthouse Authorities (IALA) General Assembly) தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.