பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்திடப்பட்ட நீர்வள மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
இந்த இரு தரப்பு ஒப்பந்தம் இரு நாடுகளிடையே, சிறந்த முறையில் நீரை பயன்படுத்துவது, நீர் பாசனம், உப்புநீரை சுத்திகரிப்பது, நீர் சேகரிப்பு ஆகியவற்றின் தொழில் நுட்பங்களில் பயனளிக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு தரப்பிலும் ஒரு கூட்டு செயல்பாட்டுக் குழு ஏற்படுத்தப்படும்.
இந்தியா ஏற்கனவே, ஆஸ்திரேலியா, ருவாண்டா, கம்போடியா, ஈரான், ஈராக், பிஜி, சீனா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளோடு நீர் மேலாண்மை வளர்ச்சி கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பின்னணி
மத்திய நீர்வளம், ஆறு வளர்ச்சி மற்றும் கங்கை புதுப்பிப்புத் துறை மற்ற நாடுகளோடு நீர் மேலாண்மை தொடர்பாக பரஸ்பர கூட்டுறவில் ஈடுபட்டு அதன் மூலம், பயிற்சிகள் நடத்துவது, அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது, நிபுணர்களை பரிமாறிக் கொள்வது, பயிற்சி அரங்குகள் நடத்துவது, போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு நீர் மேலாண்மையில் இருக்கும் நிபுணத்துவத்தை கணக்கில் கொண்டு, நீரை உபயோகமாக பயன்படுத்துவது, நீர்பாசனம், நீர் மறு பயன்பாடு, உப்புநீரை மாற்றுவது, போன்ற துறைகளில் இஸ்ரேலோடு ஒப்பந்தம் செய்து, அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்வது என்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.