Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்


புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.  உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களுக்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்தார். உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், ஒரு நிறுவனத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் மதிப்புகள் மற்றும் ஜனநாயகமாக பரிணமிக்கும் இந்தியாவின் பயணமும் ஆகும் என்று திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பயணத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறையும் ஆற்றிய முக்கிய பங்கை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த நீதித்துறை அமைப்பை ஒப்படைத்த கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் உச்ச நீதிமன்றம் மீதோ, நீதித்துறை மீதோ ஒருபோதும் அவநம்பிக்கை காட்டியதில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். எனவேஉச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பெருமைக்கு தைரியம் அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். இது வாய்மையே வெல்லும் என்ற கலாச்சார பிரகடனத்தை வலுப்படுத்துகிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாட இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்வு பெருமையுடனும் உத்வேகத்துடனும் நிரம்பியுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதித்துறை அமைப்பின் அனைத்து சகோதரர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார், மேலும் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

“நீதித்துறை நமது ஜனநாயகத்தின் பாதுகாவலராகக் கருதப்படுகிறது” என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தத் திசையில் தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து நீதித்துறை நீதியின் உணர்வை நிலைநிறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, நெருக்கடி நிலை காலத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றியதற்காக நீதித்துறையைப் பாராட்டினார்.  அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றம் பாதுகாத்துள்ளது என்றும், தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்வி எழும் போதெல்லாம், நீதித்துறை தேச நலனை முதன்மையாகக் கருதி இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தது. இந்த அனைத்து சாதனைகளுக்காகவும், இந்த மறக்கமுடியாத 75 ஆண்டுகளுக்காக நீதித்துறையின் அனைத்து புகழ்பெற்ற நபர்களுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

நீதியை எளிதாக்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இயக்க அளவில் நீதிமன்றங்களை நவீனமயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைச் சுட்டிக்காட்டியதுடன், உச்சநீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார். மாவட்ட நீதித்துறைக்கான தேசிய மாநாடு இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று கூறிய அவர், உச்ச நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் இணைந்து அகில இந்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மாநாடுஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்தார். நீதியை எளிதாக்குவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அடுத்த இரண்டு நாட்களில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை எடுத்துரைத்து, நிலுவையில் உள்ள வழக்குகளை நிர்வகிப்பது, மனித வளங்கள் மற்றும் சட்ட சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்தார். அடுத்த இரண்டு நாட்களில் நீதித்துறை நலன் குறித்த அமர்வும் ஏற்பாடு செய்யப்படுவது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். “சமூக நல்வாழ்வின் மிக முக்கியமான தேவை தனிப்பட்ட ஆரோக்கியம். இது நமது பணி கலாச்சாரத்தில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.

“வளர்ந்த இந்தியா, புதிய இந்தியா என்பது இன்றைய விடுதலையின் அமிர்த காலத்தில் 140 கோடி குடிமக்களின் விருப்பம் மற்றும் கனவு” என்று பிரதமர் வலியுறுத்தினார். புதிய இந்தியா என்றால் சிந்தனை மற்றும் உறுதியுடன் கூடிய நவீன இந்தியா என்று அவர் மேலும் கூறினார். இந்த தொலைநோக்குப் பார்வையின் வலுவான தூணாக நீதித்துறை திகழ்கிறது என்றும், குறிப்பாக மாவட்ட நீதித்துறை நமது இந்திய நீதித்துறை அமைப்பின் அடித்தளமாக விளங்குகிறது என்றும் திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டின் சாதாரண குடிமகனுக்கு நீதி கிடைப்பதற்கான முதல் தொடுபுள்ளியாக மாவட்ட நீதித்துறை திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே, நீதியின் முதல் மையங்கள் எல்லா வகையிலும் திறமையானதாகவும், நவீனமானதாகவும் இருக்க வேண்டும் என்பது மிகவும் முன்னுரிமை வாய்ந்தது என்று அவர் வலியுறுத்தினார். நம்பிக்கையை வெளிப்படுத்திய திரு மோடி, தேசிய மாநாடும் விவாதங்களும் நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவும் என்று கூறினார்.

எளிதான வாழ்க்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கைத் தரம், எந்தவொரு நாட்டிற்கும் வளர்ச்சிக்கான மிகவும் அர்த்தமுள்ள அளவுகோலாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், வாழ்க்கையை எளிதாக்குவதற்கு  எளிதான நீதி கிடைப்பது அவசியம் என்று கூறினார். மாவட்ட நீதிமன்றங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நீதியின் இந்தத் தாமதத்தை அகற்ற கடந்த தசாப்தத்தில் பல மட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த நாடு சுமார் ரூ .8,000 கோடியை செலவிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட நிதியில் 75 சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே நடந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். “இந்த 10 ஆண்டுகளில், 7.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற அரங்குகள் மற்றும் 11 ஆயிரம் குடியிருப்பு அலகுகள் மாவட்ட நீதித்துறைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

மின்னணு நீதிமன்றங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, தொழில்நுட்பத்தின் தலையீடு நீதித்துறை நடைமுறைகளை விரைவுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள் முதல் புகார்தாரர்கள் வரை மக்களின் பிரச்சினைகளை விரைவாக குறைத்துள்ளது என்றார். நாட்டில் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த முயற்சிகள் அனைத்திலும் உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு முக்கிய பங்காற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு 2023 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆப்டிகல் கேரக்டர் அங்கீகாரம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தொழில்நுட்ப தளங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை பகுப்பாய்வு செய்யவும், எதிர்கால வழக்குகளையும் கணிக்கவும் உதவும் என்று திரு மோடி எடுத்துரைத்தார். காவல்துறை, தடயவியல், சிறைத்துறை மற்றும் நீதிமன்றம் போன்ற பல்வேறு துறைகளின் பணிகளை தொழில்நுட்பம் ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் என்று அவர் கூறினார். முற்றிலும் எதிர்காலத்திற்கு தயாரான நீதி அமைப்பை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் மாற்றத்திற்கான பயணத்தில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கொள்கைகள் மற்றும் சட்டங்களின் முக்கியப் பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். எனவே, சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் முதல் முறையாக சட்ட கட்டமைப்பில், இதுபோன்ற பெரிய மற்றும் முக்கியமான மாற்றங்களை நாடு செய்துள்ளது என்று திரு மோடி கூறினார். இந்திய நீதி சட்டம் வடிவில் உள்ள புதிய இந்திய நீதித்துறை முறை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ‘முதலில் குடிமகன், கண்ணியம் முதன்மையானது, நீதி முதலில்என்பதே இந்தச் சட்டங்களின் சாரம் என்று கூறினார். இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அடிமைகளின் காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தேசத்துரோகம் போன்ற காலனித்துவ கால சட்டத்தை ரத்து செய்வதற்கான உதாரணத்தை அவர் வழங்கினார். குடிமக்களை தண்டிப்பது அல்ல, ஆனால் அவர்களைப் பாதுகாப்பது என்ற சட்டத்தின் பின்னணியில் உள்ள யோசனையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர் மோடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதையும், சிறிய குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சமூக சேவையை வழங்குவதையும் முதல் முறையாக குறிப்பிட்டார். இந்திய சாட்சியச் சட்டம் பற்றி பேசிய திரு மோடி, புதிய சட்டங்களின் கீழ் மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகள் ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார். இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம் பற்றி குறிப்பிட்ட அவர், நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையை நீதித்துறை குறைக்க மின்னணு முறையில் சம்மன்களை அனுப்பும் அமைப்பு நடைமுறையில் உள்ளது என்றார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்தப் புதிய நடைமுறையில் மாவட்ட நீதித்துறைக்கு பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் சகாக்கள் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். “இந்த புதிய முறையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நமது  வழக்கறிஞர்கள் மற்றும் பார் அசோசியேஷன்களுக்கு முக்கிய பங்கு உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை இன்றைய சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய பிரச்சினையாக  உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டதை திரு மோடி எடுத்துரைத்தார். 2019 ஆம் ஆண்டில், விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ அரசு திட்டமிட்டது என்று அவர் கூறினார். மேலும் விளக்கிய அவர், விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் கீழ் முக்கிய சாட்சிகளுக்கு வாக்குமூலம் அளிக்கும் மையம் அமைக்க ஏற்பாடு உள்ளது என்றார். மாவட்ட நீதிபதி, மாவட்ட மாஜிஸ்திரேட், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைக் கொண்ட விரைவான சிறப்பு நீதிமன்றங்களின் கீழ் மாவட்ட கண்காணிப்புக் குழுக்களின் முக்கியப் பங்கை அவர் மேலும் வலியுறுத்தினார். குற்றவியல் நீதி அமைப்பின் பல்வேறு அம்சங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் குழுவின் பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார். இந்தக் குழுக்களை மேலும் சுறுசுறுப்பானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு மக்கள் தொகையில் பாதி பேருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இங்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நாட்டுக்கு மதிப்புமிக்க தீர்வுகளை வழங்கும் என்றும், ‘அனைவருக்கும் நீதிஎன்ற பாதையை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து, தமது உரையை நிறைவு செய்தார் பிரதமர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் திரு கபில் சிபல், இந்திய பார் கவுன்சில் தலைவர் திரு மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

********

PKV/DL