Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நித்தி ஆயோக்-இல் அடல் கண்டுபிடிப்பு இயக்கம், சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயன்படுத்தலுக்கான அமைப்பை நிறுவுவது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை நித்தி ஆயோக்-இல் அடல் புதுமைப்படைப்பு இயக்கம்(எய்ம்), சுயவேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்படுத்தலுக்கான அமைப்பு(சேடு), அதற்கு தேவையான ஊழியர்களுடன் செயல்படுவதற்கான தனது அனுமதியை அளித்தது.

எய்ம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அடல் புதுமைப்படைப்பு இயக்கம் மற்றும் அதன் இயக்குநரகத்தை நிறுவுவதென்பது இந்த இயக்கத்தின் செயல்பாட்டை கூரிய கவனத்துடன் அமல்படுத்த வழிவகுக்கும். நாட்டின் புதிய கண்டுபிடிப்புகள், நிறுவனத்திறன் ஆகியவற்றிற்கான குவிமையமாக இந்த அமைப்பு விளங்கும்.

இதுகுறித்த விவரங்கள்:

(அ) இந்த இயக்கமானது இயக்க உயர்மட்டக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும். மகத்தான சவால்களுக்கான பகுதிகள், பரிசுத் தொகை, எய்ம் மற்றும் சேடு ஆகியவற்றின் பல்வேறு கூறுகளை அமல்படுத்துவது ஆகியவை உள்ளிட்ட இதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான அனைத்து முடிவுகளையும் இந்த உயர்மட்டக் குழுவே எடுக்கும்.

(ஆ) இந்த இயக்கத்திற்கான இயக்குநரையும் மேலும் தேவையான ஊழியர்களையும் நித்தி ஆயோக் நியமிக்கும்.

பின்னணி:

நாட்டில் கண்டுபிடிப்புகளுக்கான சூழ்நிலையை பெருமளவிற்கு ஊக்குவிப்பது, நிறுவனத் திறன் குறித்த உணர்வை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களுடன் 2015-16ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அடல் கண்டுபிடிப்பு இயக்கம் (எய்ம்) மற்றும் சேடு என்று அறியப்பட்ட ஒரு வழியமைப்பையும் நிதி ஆயோக்-இல் உருவாக்குவது என்ற அரசின் நோக்கத்தை அறிவித்ததோடு, இதற்கென முறையே ரூ. 500 கோடி மற்றும் ரூ. 1000 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த எய்ம் மற்றும் சேடு ஆகிய திட்டங்களின் விரிவான விஷயங்களை இறுதிப்படுத்த, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் உள்ள தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் தருண் கன்னா அவர்களின் தலைமையில் கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனத்திறன் ஆகியவற்றிற்கான நிபுணர் குழு ஒன்றை நிதி ஆயோக் உருவாக்கியது. இந்தக் குழு தனது அறிக்கையில் (உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடியதும் கிட்டத்தட்ட உடனடியாக பலனளிக்கக் கூடியதுமான) குறுகிய கால, ( 5 முதல் 7 ஆண்டு காலத்தில் பலனளிக்கக் கூடிய வகையிலான ) நடுத்தர கால மற்றும் பலனளிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் வகையிலான, எனினும் நாட்டின் நிறுவனத் திறன் துறையில் மிக ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய, நீண்ட கால திட்டங்கள் அடங்கிய விரிவான பரிந்துரைகளை அளித்திருந்தது. அமலாக்குவது, நடைமுறைப்படுத்துவது, அதன் தாக்கம் ஆகியவற்றை கண்காணிக்க தெளிவான அமைப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இந்தக் குழு வலியுறுத்தியிருந்தது.

2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் தொடர்ச்சியாக எய்ம் மற்றும் சேடு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டன. 2015 ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நிதிச் செலவுகளுக்கான குழு இந்தக் முன்மொழிவை ஆய்வு செய்து, எய்ம் என்பது இலக்காகவும் சேடு என்பது அணுகுமுறையாகவும் விளங்குகிறது என்று கருத்து தெரிவித்தது. எனவே ‘எய்ம்’ என்ற தலைப்பின் கீழ் ஒரே ஒரு திட்டமும் அதன் கீழ் இரண்டு வகையான உட்பிரிவுகளைக் கொண்டதாகவும் அமையும். 1) புதிய கண்டுபிடிப்புகள் 2) சேடு – இந்த அமைப்பில் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு அவர்கள் வெற்றிகரமான நிறுவனத் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்படுவர்.

*******