Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதிநிலை அறிக்கை-2018 தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை


“இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது. விவசாயம் தொடங்கி கட்டமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. ஒருபுறத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலைகளைப் போக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைப் பற்றி குறிப்பிடும் இந்த நிதிநிலை அறிக்கை, மற்றொரு புறத்தில், நாட்டில் உள்ள சிறுதொழில்முனைவோரின் சொத்துகளை அதிகரிப்பதற்கான திட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. உணவு பதப்படுத்தல் முதல் பைபர் ஆப்டிக்ஸ் வரையில், சாலை முதல் கப்பல் போக்குவரத்து வரை, இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்களின் கவலைகள் பற்றி, கிராமப்புற இந்தியா முதல் பலமான இந்தியா வரை, டிஜிட்டல் இந்தியா முதல் ஸ்டார்ட் அப் இந்தியா வரை என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஊக்கம் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது. நாட்டில் வளர்ச்சியின் வேகத்தை இது அதிகரிக்கச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இது விவசாயிகளுக்கு உகந்த, சாமானிய மக்களுக்கு உகந்த, வணிகச் சூழலுக்கு உகந்த மற்றும் வளர்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக உள்ளது. தொழில் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வை எளிதாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. நடுத்தர மக்களுக்கு கூடுதல் சேமிப்பு, 21வது நூற்றாண்டு இந்தியாவுக்கான பதிய தலைமுறை கட்டமைப்புகள் , சிறந்த சுகாதார உத்தரவாதம் – என எல்லாமே வாழ்வை எளிதாக்கும் அம்சத்தை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளாக உள்ளன.

வரலாறு காணாத அளவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ததன் மூலம், நாட்டின் முன்னேற்றத்துக்கு நமது விவசாயிகள் பெரிய அளவுக்கு பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஊக்கம் தரவும், அவர்களுடைய வருமானத்தைப் பெருக்கவும் இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்மொழியப் பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மைக்கு வரலாற்றில் இல்லாத அளவாக ரூ.14.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 51 லட்சம் புதிய வீடுகள், 3 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள், சுமார் 2 கோடி கழிப்பறைகள், 1.75 கோடி வீடுகளுக்கு மின் இணைப்புகள் போன்றவை மூலம் தலித்கள், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் பயன்பெறுவார்கள். இந்த முன்முயற்சிகளால் புதிய வேலைவாய்ப்புகள், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளின் உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு ஆதாய விலை அளிக்கும் முடிவை நான் பாராட்டுகிறேன். இந்த முடிவால் விவசாயிகள் முழுமையான பயன்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து வலுவான ஒரு நடைமுறையை மத்திய அரசு உருவாக்கும். இந்த வகையில் `பசுமை பாதுகாப்புத் திட்டம்’ ஒரு செயல்திறன் மிக்க அம்சமாக இருக்கும். குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இது உதவிகரமாக இருக்கும். பால்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதில் அமுல் நிறுவனம் எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு, தொகுப்பு முறையிலான அணுகுமுறை எந்த அளவுக்கு பயனுள்ளதாக என்பதிலும் பழக்கப்பட்டிருக்கிறோம். இப்போது, வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண் உற்பத்திப் பொருட்களை மனதில் கொண்டு, நாடு முழுக்க வெவ்வேறு மாவட்டங்களில் வேளாண்மை தொகுப்பு அணுகுமுறை அமல் செய்யப்படும். மாவட்டங்களை அடையாளம் கண்ட பிறகு குறிப்பிட்ட ஒரு வேளாண் பொருளுக்கு இருப்பு வைத்தல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை உருவாக்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

நமது நாட்டில் வருமான வரி செலுத்துவதில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் `வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம்’ , கூட்டுறவு சங்கங்களைப் போன்ற அமைப்பு, இந்த ஆதாயத்தைப் பெறவில்லை. எனவே, விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபடும் `வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வருமான வரி விலக்கு அளிப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இயற்கை வேளாண்மை, நறுமணப் பொருள் மற்றும் மூலிகை சாகுபடியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், `வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும்’ இடையில் தொடர்புகள் ஏற்படுத்துவதன் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அதேபோல பசுஞ்சாண தான திட்டம் கிராமத்தை தூய்மையாக வைக்க உதவுவதுடன், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போரின் வருவாயை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். நமது நாட்டில் விவசாயிகள் வேளாண்மையுடன் சேர்த்து வெவ்வேறு தொழில்களையும் செய்கின்றனர். சிலர் மீன் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, கோழி அல்லது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற கூடுதல் செயல்பாடுகளுக்கு வங்கிகளிடம் இருந்து கடன் வசதி பெறுவதில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு விவசாயக் கடன் அட்டை மூலம் கடன் வசதிக்கு ஏற்பாடு செய்வது மிகவும் செயல்திறன்மிக்க நடவடிக்கை. இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 7000 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 22 ஆயிரம் ஊரக வணிக மையங்கள், புதிய சிந்தனை திட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. வரக்கூடிய நாட்களில், இந்த மையங்கள் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கக் கூடியதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கக் கூடியதாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஊரக மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் புதிய மையங்களாகவும் இருக்கப் போகின்றன. பிரதமர் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமங்கள், ஊரகப் பகுதி சந்தைகளுடன், உயர் கல்வி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும். கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வை இது எளிதாக்கிடும்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம், வாழ்க்கை முறை எளிதாக்கப்படுவதன் உத்வேகம் நீட்டிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஏழைப் பெண்களுக்கு புகையில் இருந்து விடுதலை அளிப்பதாக மட்டுமின்றி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் முக்கிய ஆதாரமாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் இலக்கு 5 கோடி குடும்பங்கள் என்பதில் இருந்து 6 கோடி குடும்பங்கள் என உயர்த்தப்பட்டிருப்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டத்தால் தலித், மலைவாழ் மற்றும் பிற்பட்ட வகுப்பு குடும்பத்தினர் பெருமளவில் பயனடைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக இந்த அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைக்கான செலவு கவலையை ஏற்படுத்தக் கூடியதாக இருந்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள `ஆயுஷ்மான் பாரத்’ என்ற புதிய திட்டம், இந்த தீவிரமான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருக்கும். இந்தத் திட்டம் சுமார் 10 கோடி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்தக் குடும்பங்களுக்கு, அடையாளம் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை கிடைக்கும். இதுவரை இல்லாத வகையில் உலக அளவில் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது இருக்கும். இதற்கான செலவை அரசே ஏற்கும். நாட்டின் அனைத்து முக்கிய பஞ்சாயத்துகளிலும் 1.5 லட்சம் சுகாதார நல மையங்கள் அமைக்கும் சிந்தனை பாராட்டுக்குரியது. கிராமங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்க இந்த மையங்கள் உதவிகரமாக இருக்கும். நாடு முழுக்க 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதை மேம்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கும் நிலையையும் மேம்படுத்தும். நாடு முழுக்க குறைந்தபட்சம் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலையை எட்டுவது நமது பெருமுயற்சியாக இருக்கும்.

மூத்த குடிமக்களை மனதில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. இப்போது பிரதமரின் முதியோர் ஓய்வூதிய (வயா வந்தன்) திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரையிலான தொகைக்கு மூத்த குடிமக்கள் குறைந்தபட்சம் 8% வட்டியைப் பெறுவார்கள். அவர்களின் வங்கி மற்றும் அஞ்சலக டெபாசிட்களுக்கான வட்டியில் ரூ.50,000 வரையிலான தொகைக்கு வரி விதிக்கப்படாது. ரூ.50,000 வரையிலான மருத்துவக் காப்பீட்டு சந்தாவுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். அதுதவிர, கடுமையான நோய்களுக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவில் ரூ.1 லட்சம் வரையிலான தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

நீண்ட காலமாக, நமது நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது எம்.எஸ்.எம்.இ -க்கள், பெரிய தொழிற்சாலைகளைவிட அதிகமான வரி செலுத்தி வந்துள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில், துணிச்சலான ஒரு முடிவாக எம்.எஸ்.எம்.இ -களுக்கு வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த நடைமுறைப்படி 30% என்றில்லாமல், அவர்கள் இனி 25% மட்டுமே வரி செலுத்துவார்கள். எம்.எஸ்.எம்.இ தொழிற்சாலைகளுக்குத் தேவையான நடைமுறை மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, வங்கிகள் மற்றும் NBFC-களிடம் இருந்து கடன் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. மேக் இன் இந்தியா லட்சியத் திட்டத்துக்கு ஊக்கம் தருவதாக இது இருக்கும்.

பெரிய தொழிற்சாலைகளின் வாராக் கடன் பிரச்சினை (NPA) காரணமாக எம்.எஸ்.எம்.இ துறை நெருக்கடியை சந்தித்து வந்தது. மற்றவர்களின் தவறுகளுக்காக சிறிய தொழில்முனைவோர் பாதிக்கப்படக் கூடாது. எனவே, எம்.எஸ்.எம்.இ பிரிவில், NPA மற்றும் நெருக்கடியான கணக்கு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சரி செய்தல் நடவடிக்கைகளை அரசு விரைவில் அறிவிக்கும்.

வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கவும், நீண்டகால பயன் தரும் ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. முறைசாரா பிரிவில் இருந்து முறைசார்ந்த பிரிவுக்கு மாறுவதற்கு இது தூண்டுதலை ஏற்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புதிய தொழிலாளர்களுக்கு 3 ஆண்டு காலத்துக்கு வருங்கால வைப்பு நிதியில் அரசு 12% பங்களிப்பு செய்யும். இதுதவிர, பெண் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டு காலத்துக்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்துக்கு செலுத்தும் பங்களிப்பு இப்போதைய 12% -ல் இருந்து 8% ஆகக் குறைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு அதிகரிக்கும். பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இருந்தபோதிலும், நிறுவனத்தின் பங்களிப்பு 12% என்றே தொடரும். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதில் ஒரு பெரிய நடவடிக்கையாக இது இருக்கும்.

நவீன இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்கு, சாமானிய மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கு, வளர்ச்சியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு, இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா தொடர்பான கட்டமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது ரூ.1 லட்சம் கோடி அதிகமாகும். இந்தத் திட்டங்கள் நாட்டில் வேலைவாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகைகள் அறிவித்தமைக்காக நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன்.
ஒவ்வொரு இந்திய குடிமக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவதாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும். பின்வரும் விஷயங்களை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது – விவசாயிகளின் சாகுபடி பயிர்களுக்கு லாபகரமான விலை, நலத் திட்டங்கள் மூலமாக ஏழைகள் முன்னேற்றம், வரி செலுத்தும் குடிமக்களின் நேர்மைக்கு மதிப்பு அளித்தல், சரியான வரி சீர்திருத்தம் மூலமாக தொழில்முனைவோரின் உத்வேகத்துக்கு ஆதரவு அளித்தல், நாட்டுக்கு மூத்த குடிமக்கள் செய்த பங்களிப்பை பாராட்டுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாழ்வை எளிதாக்குதலை மேம்படுத்தும் வகையிலும், புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை அளித்த நிதியமைச்சர் மற்றும் அவருடைய குழுவில் உள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

*****