Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நான்காவது தொழில்புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

நான்காவது தொழில்புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

நான்காவது தொழில்புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரை


 

நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அதில் உரையாற்றினார். 

“நான்காம் தலைமுறை தொழிற்சாலைகள்” என்ற தலைப்பிலான இந்த தொழிற்புரட்சியில் தற்போதைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்கவும், மனித வாழ்வின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் தேவைப்படும் அம்சங்கள் இருப்பதாகக் கூறினார். சான்பிராஸிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது மையமாக இந்த மையம் அமைந்துள்ளது என்று கூறிய பிரதமர், இது எதிர்காலத்தில் பல்வேறு முன்முயற்சிகளுக்கான வாசல்களை திறந்துவைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

     செயற்கை நுண்ணறிவு, இயந்திர கல்வி முறை, இணையவழி அன்றாட அலுவல்கள், ப்ளாக்செயின் எனப்படும் தகவல் பாதுகாப்பு முறை மற்றும் பெருந்தகவல் மையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நமது நாட்டை வளர்ச்சிப்பாதையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதுடன், நாட்டின் குடிமக்கள் வாழ்வில் பெருமளவிலான மேம்பாட்டை அளிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை இது வெறும் தொழில்துறை மாற்றமல்ல ஆனால் சமூக மாற்றமாகவும் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  தொழில்துறை புரட்சி  மாற்ற இயலாத நேர்மறை மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்தப் புரட்சி, குறைந்த கால அவகாசத்தில் நிறைய பணிகள் நடைபெறும் வகையில் பெரும் மாற்றத்தை விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

     நாட்டில் டிஜிட்டல் இந்தியா இயக்கம் எவ்வாறு இணைய வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறது என்பதை பிரதமர் விளக்கினார். தொலைபேசி வசதிகள், இணையதள இணைப்புகள் மற்றும் கைபேசி வழி இணையதள இணைப்புகள் எவ்வாறு பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  அதேபோல நாட்டின் பல பகுதிகளில் பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  கைபேசி வழியாக அதிகளவில் இணைய சேவையை பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், அதேநேரத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதி வழங்கப்படும் நாடாகவும் இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.  இந்த முன்னேற்றங்கள் குறித்து பேசிய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பு அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்தும், அதன் காரணமாக உருவாகியுள்ள ஆதார், பணப்பரிமாற்ற செயலி யூ.பி.ஐ., விவசாயப் பொருட்களுக்கான சந்தை-இ-நாம், மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கான கொள்முதல் இணையதளம் ஜெம் ஆகியவை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.  

     செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்து தேசிய அளவில் வியூகம் வகுக்கப்பட்டு, இந்த கட்டமைப்பை அதிவேக அளவில் நாட்டில் நிறுவ கடந்த சில மாதங்களாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பிரதமர் எடுத்துரைத்தார்.  தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த தொழில்புரட்சி மையம் இத்தகைய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றார்.  தொழில் புரட்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையிலான விரிவாக்கம் ஆகியவை சுகாதாரத்துறையில் முன்னேற்றம் மற்றும் மலிவு கட்டணத்தில் சுகாதாரம் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும் என்று பிரதமர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கும், வேளாண் துறையிலும் இந்த முன்னேற்றங்கள் அளவிட முடியாத உதவிகளை வழங்கும் என்று தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  தற்போதைய போக்குவரத்து முறைகள், நவீன தொழில்நுட்ப ரீதியிலான போக்குவரத்து முறைகள் ஆகியவற்றிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரும் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இத்தகைய தொழில் புரட்சி  இந்தியாவில் மேற்கூறப்பட்ட துறைகளில் ஏற்படும் போது இந்தியாவிற்கு மட்டுமின்றி, உலகிற்கே பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைத்துவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  

நான்காம் தொழில் புரட்சி ஏற்படும் போது அதில் இந்தியா தனக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.  அந்தப் புரட்சிக்கு இந்தியா தன்னால் இயன்ற பங்களிப்பை அளவிட முடியாத அளவிற்கு வழங்கும் வாய்ப்பு இருப்பதையும் எடுத்துரைத்தார்.  திறன் இந்தியா இயக்கம், தொடங்குக இந்தியா இயக்கம் மற்றும் அடல் புதிய கண்டுபிடிப்புகள் இயக்கம் ஆகியவை நமது இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.