Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை


என் அன்புக்குரிய சக குடிமக்களே,

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய, தியாகத்தால் தான் இதுவரையில் கொரோனா தாக்குதலை நாம் பெருமளவு கட்டுப்படுத்தி வந்திருக்கிறோம். உங்கள் நாட்டை, உங்கள் இந்தியாவைக் காப்பாற்றுவதில் நீங்கள் அதிக சிரமங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன். சிலர் உணவுக்காக, சிலர் வெளியூர் செல்ல முடியாமல், சிலர் வீடுகளை மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் நிலையில் இருந்திருக்கிறீர்கள். இருந்தபோதிலும், உங்கள் நாட்டுக்காக, ஒழுக்கம் நிறைந்த ஒரு போர்வீரனைப் போல உங்கள் கடமைகளை நீங்கள் ஆற்றி வருகிறீர்கள். இதுதான் “இந்திய மக்களாகிய நாங்கள்” என்று நமது அரசியல்சாசனம் கூறும் வாசகத்தின் வலிமை ஆகும்.

கூட்டு வல்லமையை இந்திய மக்களான நாம் வெளிப்படுத்தி இருப்பது, பாபா சாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவருக்கு அளிக்கும் மரியாதையாக உள்ளது. உறுதி மற்றும் கடின உழைப்புடன் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்ற உத்வேகத்தை நமக்கு அளிப்பதாக, பாபா சாகிப்பின் வாழ்க்கை உள்ளது. நம் அனைவர் சார்பாகவும் பாபா சாகிப் முன் நான் தலைவணங்குகிறேன்.

நண்பர்களே, நாட்டின் பல பகுதிகளில், பல பண்டிகைகள் கொண்டாடப்படும் தருணமாகவும் இது உள்ளது. வைஷாகி, போஹேலா பைஷாக், புத்தாண்டு மற்றும் விஷு விழாக்களுடன் சேர்த்து, பல மாநிலங்களில் புத்தாண்டுகளும் தொடங்கியுள்ளன. முடக்கநிலை காலத்தில், விதிமுறைகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் விதம், வீடுகளில் இருந்தபடியே சிறிய அளவில் பண்டிகைகளைக் கொண்டாடுவது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயல்கள் ஆகும். புத்தாண்டு சமயத்தில், உங்களுடைய நல்ல ஆரோக்கியத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, உலகம் முழுக்க கொரோனா தொற்றுப் பாதிப்பின் நிலையை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதில் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்களாகவும், சாட்சிகளாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு கொரோனா பாதிப்புகூட வராமல் இருந்த போதே, கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை இந்தியா தொடங்கிவிட்டது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100-ஐ தொடுவதற்கு முன்னதாகவே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் இருக்கவேண்டும் என்பதை இந்தியா கட்டாயமாக்கியது. பல இடங்களில் வணிக வளாகங்கள், கிளப்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் மூடப்பட்டன. 500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 21 நாட்களுக்கு முழுமையான முடக்கநிலை என்ற மிகப்பெரிய நடவடிக்கையை இந்தியா எடுத்தது.

பிரச்சினை தீவிரமாகும் வரையில் இந்தியா காத்திருக்கவில்லை. மாறாக, ஆரம்ப நிலையிலேயே விரைவாக முடிவுகள் எடுத்ததன் மூலம், முளையிலேயே அதைக் கிள்ளி எறிய முயற்சி மேற்கொண்டோம்.

நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு சிக்கலான தருணத்தில் நமது நாட்டின் நிலைமையை வேறெந்த நாட்டோடும் ஒப்பிடுவது சரியாகாது. அதே சமயம், உலகின் மிகப்பெரிய, சக்தி வாய்ந்த நாடுகளிள் கொரோனா தொற்று தொடர்பான எண்ணிக்கையை நாம் பார்த்தோமானால், இந்தியா சிறப்பாக கையாளப்படும் நிலைமையில் இன்று இருக்கிறது. ஒரு மாதத்துக்கு, ஒன்றரை மாதத்துக்கு முன்னர், பல நாடுகளில் கொரோனா தொற்று இந்தியாவுக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று, அந்த நாடுகளின் கொரோனா தொற்று இந்தியாவை விட 25 முதல் 30 மடங்கு அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளில் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்தியா மட்டும் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைபிடிக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் இன்றைய நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்.

நாம் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பது கடந்த சில நாட்களின் அனுபவத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. சமுக விலகலில் இருந்தும் பொது முடக்கத்தில் இருந்து நம் நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது. பொருளாதார நோக்கு நிலையில் இருந்து வேண்டுமானால், அதிக விலை கொடுத்திருப்பதாக தற்போது சந்தேகத்துக்கு இடமின்றி தோன்றுகிறது. ஆனால், இந்திய மக்களின் உயிரோடு அளவிடும் போது, இது ஒரு ஒப்பீடே அல்ல. நமது அளவான வளங்களோடு இந்தியா தேர்ந்தெடுத்த பாதை இன்று ஒட்டுமொத்த உலகத்துக்கும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, நாட்டின் மாநில அரசுகளும் இதில் பெரிய பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நண்பர்களே, இத்தனை முயற்சிகளுக்கு நடுவிலும் கொரோனா பெரும் தொற்று பரவும் விதம் சுகாதார வல்லுநர்களையும்,  உலகெங்கும் உள்ள அரசுகளையும் இன்னும் விழிப்பாக இருக்க செய்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் இந்தியாவில் எப்படி முன்னேற்றமடைய வேண்டும் என்பது குறித்து நான் மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். பொது முடக்கம் தொடரப்பட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆலோசனை தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப்போனால், பல மாநிலங்கள் பொது முடக்கத்தைத் தொடர ஏற்கனவே முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளன.

நண்பர்களே, இந்த அனைத்து பரிந்துரைகளையும் மனதில் கொண்டு, இந்தியாவில் பொதுமுடக்கம் மே 3 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், நாம் ஒவ்வொருவரும் மே 3 வரை பொது முடக்கத்தில் இருக்க வேண்டும். இந்த சமயத்தில், தற்போது நாம் கடைபிடித்து வரும் ஒழுக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸை புது இடங்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் நாம் பரவ விடக்கூடாது என்பதே அனைத்து சக மக்களுக்கும் எனது வேண்டுகோள் மற்றும் பிரார்த்தனை ஆகும். உள்ளூரில் சிறிய அளவில், ஒரே  ஒரு புது நோயாளி வந்துவிட்டாலும் கூட  அது நமக்கு வருத்தமளிக்கக் கூடிய விஷயமாகும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் பரிதாப மரணமும், நமது வருத்தத்தை இன்னும் அதிகரிக்க செய்ய வேண்டும்.

எனவே, கொரொனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் (Hotspots) குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கொரொனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ள இடமாக  மாறக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளை நாம் மிகவும் நெருக்கமாகவும், கண்டிப்புடனும் கண்காணிக்க வேண்டும். புதிதாக ஹாட்ஸ்பாட்டுகள் உருவானால், அது நமது கடின உழைப்புக்கும், தவத்துக்கும், மேலும் சவாலாக இருக்கும். வரும் ஒருவார காலத்துக்கு, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகவும் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

20 ஏப்ரல் 2020 வரை ஒவ்வொரு நகர்ப்புறமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும், ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதை எந்த அளவிற்குப் பின்பற்றுகின்றனர் என்பது மதிப்பீடு செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்கள் பகுதிகளை எந்த அளவிற்குப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்துக் கொள்ளப்படும்.

இந்த கடும் சோதனையில் வெற்றி பெறும் பகுதிகள், ஹாட்ஸ்பாட் பிரிவில் இடம்பெறாது. கொரொனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ள  பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பு இங்கு மிகமிகக் குறைவாக இருக்கும். இவ்வாறு உள்ள பகுதிகளில்20 ஏப்ரல் 2020 தேதிக்குப் பிறகு, தெரிவு செய்யப்பட்ட தேவையான நடவடிக்கைகளுக்கு ஊரடங்கைத் தளர்த்தி விடலாம். இந்த அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வெளியே செல்வதற்கான விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவையாக இருக்கும். ஊரடங்கு விதிகள் மீறப்பட்டால், அனுமதி உடனடியாக திரும்பப் பெறப்படும்.கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் பெருகும். எனவே, நாம் அக்கறை இல்லாமல் இருந்து விடக்கூடாது என்பதை நாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் மற்ற எவரும்அக்கறை இல்லாமல் இருந்து விடுவதையும் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக அரசு தரப்பில்,  விரிவான விதிமுறைகள் நாளை வெளியிடப்படும்.

நண்பர்களே, நமது ஏழை சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு தான் 20 ஏப்ரலுக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு, குறிப்பிட்ட அளவுக்கான விலக்கு அளிக்கப்படுகிறது. தினக்கூலி பெறுபவர்கள், தங்கள் உணவுக்கு தினக்கூலியை நம்பி இருப்பவர்கள் — இவர்கள்தான் என்னுடைய குடும்பத்தினர். அவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கே நான் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறேன். பிரதமரின் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு உதவுவதற்கு அரசு தன்னால் இயன்ற அளவிற்கான எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. புதிய விதிமுறைகளை உருவாக்கும்போது அவர்களின் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ரபி பருவ பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

நண்பர்களே, நாட்டில் போதுமான அளவுக்கு மருந்துகள், உணவுப் பொருள்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.  இதேபோல,  சுகாதார மேம்பாட்டுக் கட்டமைப்பில் அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் கண்டு வருகிறோம். ஜனவரி மாதம் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு ஒரே ஒரு ஆய்வுக்கூடம் இருந்த நிலையில், தற்போது 220-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு 10,000 நோயாளிகளுக்கு 1500 முதல் 1600 படுக்கைகள் தேவை என்பது உலக நாடுகளின் அனுபவத்தில் தெரிந்து கொண்ட தகவல் ஆகும். இந்தியாவில், இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளுக்கு நாம் ஏற்பாடு செய்யதுள்ளோம். இது மட்டுமல்லாமல், 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொவிட் சிகிச்சைக்காக செயல்பட்டு வருகின்றன. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்த வசதிகள் மேலும் கூடுதல் வேகத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, இன்று நம்மிடம் ஓரளவுக்கே ஆதாரங்கள் உள்ள நிலையில், உலக நலனுக்காகவும், மனிதகுல நலனுக்காகவும், கொரோனோ வைரசுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னணியில் திகழ, இந்தியாவின் இளம் விஞ்ஞானிகள் முன்வரவேண்டும் என்று நான் அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே, நாம் தொடர்ந்து பொறுமையாகவும், விதிமுறைகளைப் பின்பற்றியும் வந்தால், கொரோனோ போன்ற பெருந்தொற்று நோயையும் நம்மால் முறியடிக்க முடியும். இந்த நம்பிக்கையில், நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

முதல் விஷயம்-

உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது விஷயம்-

ஊரடங்கின் லட்சுமணக் கோட்டையும், தனி நபர் விலகலையும்  முற்றிலுமாகப் பின்பற்றுங்கள். தவறாமல், வீடுகளில் செய்யப்பட்ட முகக்கவசங்களை தயவு செய்து பயன்படுத்துங்கள்.

மூன்றாவது விஷயம்-

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அவ்வப்போது, வெந்நீரை உட்கொள்ளுவதுடன், கொப்பளிக்கவும் செய்யவும்.

நான்காவது விஷயம்-

கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க ,ஆரோக்கிய சேது கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும். இதேபோல, இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மற்றவர்களை ஊக்குவிப்பு செய்யுங்கள்.

ஐந்தாவது விஷயம்-

உங்களால் இயன்றவரையில், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள். குறிப்பாக, அவர்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.

ஆறாவது விஷயம்-

உங்களது தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுங்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.

ஏழாவது விஷயம்-

நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகிய நாட்டின் கொரோனோ வீரர்கள் மீது அதிக மரியாதை செலுத்துங்கள்.

நண்பர்களே, மே மாதம் 3-ம் தேதி வரை, ஊரடங்கு விதிமுறைகளை அதிகபட்ச உண்மை உணர்வுடன் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே தங்கி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

VayamRashtreJagrutyaa” என்ற முழக்கத்துடன் நாம் அனைவரும் நம் நாட்டை நித்திய விழிப்புணர்வு கொண்டதாக வைத்திருப்போம். இந்த சிந்தனையுடன் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

உங்களுக்கு மிக்க நன்றி!