பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு வட்டி மானியம் அளிக்கும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (கிராமப்பகுதி) கீழ் இல்லாமல் கட்டப்படும், ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் வட்டி மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புறப் பகுதிகளில் புதிய வீடுகள் கட்ட வழி ஏற்படும். அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில், புதிய பிரிவுகளை கட்ட முடியும். இந்தத் திட்டத்தின்கீழ், கடனைப் பெறும் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை தேசிய வீட்டுவசதி வங்கி செயல்படுத்தும். தற்போதைய நிகர மதிப்பில், 3% வட்டி மானியத்தை தேசிய வீட்டுவசதி வங்கிக்கு மத்திய அரசு வழங்கும். இதையடுத்து, வட்டி மானியத்தை தொடக்க கடன் நிறுவனங்களுக்கு (பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கும். இந்த நடவடிக்கையால், பயனாளிகள் மாதாந்திரம் செலுத்த வேண்டிய தொகை (EMI) குறையும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளின் மூலம், தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை அளித்து அவர்களை பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துடன் (கிராமப்பகுதி) உரிய முறையில் இணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். புதிய திட்டத்தின்மூலம், கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், கிராமப்புற வீட்டுவசதித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.