Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் 21 நாட்கள் முழுமையான எல்லை மூடலுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார


கொவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழுமையான எல்லை மூடலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் முக்கிய உரை நிகழ்த்திய பிரதமர், மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகள் கூட, இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் இதனைக் கட்டுப்படுத்த ஒரே வழி சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டும்தான் என்றும் கூறினார்.

உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளும் இந்தக் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதை நீங்கள் காண்கிறீர்கள் . இந்த நாடுகள் போதிய முயற்சிகள் எடுக்காமல் இல்லை அல்லது ஆதார வளங்கள் குறைவில்லை. தயாரிப்புப் பணிகள் , முயற்சிகள் என அனைத்தையும் கடந்து இந்தக் கொரோனா வைரஸ் அவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க இந்த நாடுகள் சிரமப்படுகின்றன. கொரோனா வைரசைத் தீவிரத்துடன் கையாள்வதற்கான ஒரே வழி சமூக இடைவெளி மட்டும்தான் என்பதைக் கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாடுகளின் நிகழ்வுகள் பகுப்பாய்வும், நிபுணர்களின் கருத்தும் நிரூபித்துள்ளன.

அலட்சியமாக இருப்பவர்கள் குறித்து எச்சரித்த பிரதமர், ஒரு சிலரின் அலட்சியம், ஒரு சிலரின் தவறான கருத்துக்கள், உங்களை, உங்கள் குழந்தைகளை, உங்கள் பெற்றோரை, உங்கள் குடும்பத்தை, உங்கள் நண்பர்களை, ஒட்டுமொத்த தேசத்தைக் கடுமையாக பாதித்துவிடும் . இந்த அலட்சியம் தொடர்ந்தால் இந்தியாவிற்கு ஏற்படும் அழிவை மதிப்பிடுவது சாத்தியமாகாது என்றார்.

கடந்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாநில அரசுகள் பிறப்பித்துள்ள எல்லை மூடல் உத்தரவுகளை மனமார பின்பற்ற வேண்டுமென்று மக்களை அவர் வலியுறுத்தினார் .

இன்று நள்ளிரவிலிருந்து ஒட்டுமொத்த தேசமும் முழுமையான எல்லை மூடலின்கீழ் கொண்டுவரப்படுகிறது. 21 நாட்களுக்கு மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது என்று பிரதமர் அறிவித்தார்.

சுகாதாரத் துறை நிபுணர்களின் அனுபவங்களிலிருந்தும் மற்ற நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறிய அவர், நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு இந்த 21 நாட்களும் இன்றியமையாதவை என்றார்.

இது மக்கள் ஊரடங்கைவிட சில படிகள் கூடுதலாகவும் கடுமையாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராக நாட்டையும் அதன் அனைத்துக் குடிமக்களையும் பாதுகாக்க இந்த முடிவு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

கொள்ளை நோயால் உருவாகும் பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதித்த பிரதமர், இந்த எல்லை மூடல் காரணமாக நிச்சயம் பொருளாதார பாதிப்பு ஏற்படும். இருப்பினும் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையைப் பாதுகாப்பது நமது உயர் முன்னுரிமை ஆகும். எனவே நாட்டில் இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு எனது வேண்டுகோளாகும் என்றார்.

அடுத்த 3 வாரங்களில் நிலைமையை நாம் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், நாடு 21 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிடுவதோடு ஏராளமான குடும்பங்கள் அழிந்து விடும். எனவே அடுத்த 21 நாட்களுக்கு ஒன்றே ஒன்றைச் செய்யுங்கள் – தங்களின் வீடுகளுக்குள்ளேயே தங்கி இருங்கள் என்று மக்களிடம் அவர் வலியுறுத்தினார் .

கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்துள்ள நாடுகளின் அனுபவம் நம்பிக்கைக் கதிர்களைத் தந்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். எல்லை மூடலைக் கடைப்பிடித்த, விதிகளைக் கண்டிப்புடன் மக்கள் பின்பற்றிய நாடுகளில் நோய் பரவலைத் தடுக்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் தற்போதைய செயல்பாடுகள் இந்தப் பேரழிவின் தாக்கத்தை எவ்வளவு குறைக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. நமது மன உறுதியை வலுப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். ஒவ்வொரு கட்டத்திலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். Jaan hai toh Jahaan hai என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் . பொறுமை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தருணம் இதுவாகும் . எல்லை மூடல் நிலைமை நீடிக்கும் வரை நாம் மன உறுதியைப் பராமரிக்க வேண்டும் . நமது வாக்குறுதியை நாம் காப்பாற்றவேண்டும்.

குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் அசௌகரியங்கள் ஏற்படாததை உறுதிசெய்ய நாடு முழுவதும் மத்திய – மாநில அரசுகள் துரிதமாகப் பணியாற்றுவதாகப் பிரதமர் கூறினார். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தொடர்ந்து சுமூகமாகக் கிடைப்பதை உறுதிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான காலத்தில் ஏழைகளின் பிரச்சனைகளைக் குறைக்க மத்திய – மாநில அரசுகளோடு மக்கள் சமூகத்திலிருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் பாடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நோய்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பதினைந்தாயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது என்றும் திரு மோடி அறிவித்தார் .

இத்தகைய நேரத்தில் பரப்பப்படும் வதந்திகள் அல்லது கட்டுக்கதைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு ஏற்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் மருந்து எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான காலத்தில் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை இந்தியர் அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .

இந்த இக்கட்டான தருணத்தில் மக்கள் ஊரடங்கு வெற்றி பெறுவதை உறுதி செய்ய, முழு பொறுப்போடும், உணர்வுபூர்வமாகவும் ஒன்றிணைந்து பங்களிப்பு செய்த இந்தியர்கள் அனைவரையும் பிரதமர் பாராட்டினார். நமது நாடு நெருக்கடியில் வீழும் காலத்தில், மனித குலம் நெருக்கடியில் வீழும் காலத்தில், அதனைக் கையாள ஒவ்வொரு இந்தியரும் எவ்வாறு ஒன்றுபட்ட முயற்சிகளுடன் முன்வருவார்கள் என்பதை ஒருநாள் மக்கள் ஊரடங்கு மூலம் இந்தியா நிரூபித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

21 நாட்கள் எல்லை மூடல் நீண்ட காலம் என்ற போதும், உங்களின் பாதுகாப்புக்கும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்கும் இது அதே அளவு இன்றியமையாததாகும் என்று உரை நிறைவில் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியர்கள் வெற்றிகரமாகப் போராடுவார்கள் என்பது மட்டுமின்றி வெற்றியும் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*****