பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வர்த்தகக் கப்பல் மசோதா, 2016க்கு தனது ஒப்புதலை வழங்கியது.
வர்த்தகக் கப்பல் மசோதா, 2016 1958ஆம் ஆண்டின் வர்த்தகக் கப்பல் சட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் ஆகும். இந்த மசோதா 1958ஆம் ஆண்டின் வர்த்தகக் கப்பல் சட்டம், 1838ஆம் ஆண்டின் கடலோரக் கப்பல்கள் சட்டம் ஆகியவற்றை நீக்குவதற்கும் வழி செய்கிறது.
1958ஆம் ஆண்டின் வர்த்தகக் கப்பல் சட்டம் பல்வேறு ஆண்டுகளாக அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் விளைவாக மிகப் பெரிய சட்டமாக மாறியுள்ளது. 1966ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடையே இந்தச் சட்டத்தில் 17 முறை திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக இச்சட்டத்தின் உட்பிரிவுகள் 560க்கும் அதிகமாக ஆனது. இந்த வரைமுறைகள் இந்த மசோதாவில் நுணுக்கமான வகையில் சுருக்கப்பட்டு 280 பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகள் இந்தியாவில் வர்த்தக்க் கப்பல் தொழில் குறித்த சட்டத்தை எளிமைப்படுத்தும். மேலும் தேவையற்ற வரைமுறைகள் கைவிடப்பட்டு, மீதமுள்ளவை வலுவூட்டப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் வணிகத்தை மேற்கொள்வதை எளிமைப்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை, சிறப்பான வகையில் சேவைகளை வழங்குவது ஆகியவற்றுக்கும் வழிவகுப்பதாக இருக்கும்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டபிறகு, கீழ்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக இருக்கும்:
அ. இந்தியாவில் கப்பல் வணிகம் கையாளும் டன்களின் அளவை அதிகரிப்பது./ கடற்கரையோர கப்பல் வணிக வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றை உருவாக்க:-
அ) பெருமளவிற்கு சொந்தமான கப்பல்கள், முன் தொகை கொடுத்து நடத்தப்படும் கப்பல்கள் இந்தியர்களால் நடத்தப்படும் கப்பல்கள் ஆகியவை இந்திய நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் கப்பல்களாக பதிவு செய்யப்படுவதற்கு அனுமதி அளிப்பது.
ஆ) இந்தியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொள்ளளவை தனிப்பிரிவாக அங்கீகரிப்பது.
இ) இந்திய நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் கப்பல்களுக்கு கடலோர செயல்பாடுகளில் ஈடுபடுவது; சுங்க அதிகாரிகளால் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி அளிப்பது ஆகிய நடைமுறைகளிலிருந்து விலக்களிப்பது.
ஈ) கடலோர கப்பல் வணிகத்தை வளர்த்து, ஊக்குவிக்க கடலோர கப்பல்களுக்கு தனிப்பட்ட விதிமுறைகளை உருவாக்குவது.
ஆ. கப்பல் மாலுமிகளுக்கான கீழ்க்கண்ட நலத்திடங்களை அறிமுகப்படுத்துவது:-
அ) கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்படும் மாலுமிகளுக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் வரை ஊதியம் பெறுவார்கள்.
ஆ) மீன்பிடித்தல், உந்தித்தள்ளும் இயந்திரங்கள் ஏதுமில்லாமல் கடலில் செல்லும் படகுகள், 15 டன்னுக்கும் குறைவான எடையுடைய படகுகள் ஆகியவை உள்பட இத்தகைய படகுகளில்/கப்பல்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கான காப்பீட்டை அந்த கப்பல்/படகுகளின் உரிமையாளர்கள் கட்டாயமாக எடுக்க வேண்டும்.
இ) கப்பலுக்குப் பொறுப்பான அதிகாரியின் முன்பாகவே அதன் ஊழியர்கள் தங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற கட்டுப்பாடு இனி தேவைப்படாது.
இ. எந்தவித சட்டத்தின் கீழும் வராத வகையிலான கப்பல்களை பதிவு செய்வது; பாதுகாப்பு குறித்த அம்சங்களுக்கான வழிமுறைகளை உருவாக்குவது.
ஈ. சர்வதேச கப்பல்வணிக அமைப்பின் அனைத்து தீர்மானங்களையும் விதிமுறைகளையும் இந்திய சட்ட அமைப்பிற்குள் முழுமையாக கொண்டுவருவது (1/1/2016 முதல் கட்டாயமாகப்பட்டுள்ள சர்வதேச கப்பல்வணிக அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கான ஆய்வுத் திட்டத்தின்படி இது அத்தியாவசியமான ஒன்றாகும்) இதன்படி கீழ்க்கண்ட ஏழு மாறுபட்ட தீர்மானங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளன:
அ) 1969ஆம் ஆண்டின் தலையீடு குறித்த தீர்மானம்
ஆ) 1979ஆம் ஆண்டின் தேடுதல்-மீட்டல் குறித்த தீர்மானம்
இ) கடல் வணிக மாசு குறித்த தீர்மானத்தின் ஆறாவது இணைப்பாக கப்பல்களிலிருந்து வெளியேறும் மாசை தடுப்பதற்கான வழிமுறைகள்.
ஈ) கப்பல்களிலிருந்து வெளியேறும் தண்ணீர், கசடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது, நிர்வகிப்பது ஆகியவற்றுக்கான 2004ஆம் ஆண்டின் தீர்மானம்.
உ) 2007ஆம் ஆண்டின் நைரோபி கப்பல் இடிபாடுகளை அகற்றுவது குறித்த தீர்மானம்.
ஊ) 1989ஆம் ஆண்டின் கப்பல் இடிபாடுகளை மீட்பது குறித்த தீர்மானம்.
எ) கப்பல்கள் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சர்வதேச தீர்மானம்.
இவைபோக, கப்பல்களை ஆய்வு செய்வது, பரிசோதிப்பது, சான்றிதழ் அளிப்பது போன்றவற்றுக்கான விதிமுறைகள் தற்போதைய சட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் இந்திய கப்பல் தொழிலின் வசதிக்காக எளிமையான முறையில் முன்வைக்க ஒரே இடத்தில் மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் அனைத்து வகையான கப்பல்களையும் பதிவு செய்வதற்கான வழிமுறை ஏற்பாடுகள் 2016ஆம் ஆண்டின் வர்த்தக கப்பல் மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்ச் பகுதிக்கு மட்டுமே பொருந்தக் கூடிய வகையிலான இயந்திரங்கள் இல்லாமல் செயல்படும் படகுகளை பதிவு செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட 1838ஆம் ஆண்டின் கடலோரக கப்பல்கள் சட்டத்தை முழுமையாக அகற்றுவது எனவும் தீர்மானிப்பட்டது.
***