நாடு முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமரின் சமாஜிக் உத்தன் ஏவம் ரோஜ்கர் ஆதாரித் ஜன்கல்யாண் என்ற பிஎம்-சுராஜ் (PM-SURAJ – பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன்) தேசிய தளத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில்முனைவோருக்கு கடன் உதவியையும் அவர் வழங்கினார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த திரு நரேந்திர சென், கிளவுட் கம்ப்யூட்டிங் தொடர்பான இணைய நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார். தமது தொழில்துறைப் பயணத்தை அவர் பிரதமரிடம் விரிவாக விவரித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் செயல்படுவதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார். தான் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நபர் என்றும், ஆனால் தனது குடும்பம் இந்தூருக்கு குடிபெயர்ந்ததாகவும் அவர் கூறினார். தனக்குத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய மென்பொருள் மற்றும் சேவை சங்கமான நாஸ்காமின் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை, கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து தமக்கு ஆர்வத்தைத் தூண்டியது என்று அவர் மேலும் கூறினார். ஒரு கிராமத்தில் அமர்ந்திருந்த நரேந்திராவாகிய தாம் மற்றொரு நரேந்திராவால் ஈர்க்கப்பட்டதாக திரு நரேந்திர சென் பிரதமரிடம் தெரிவித்தார். அரசின் ஆதரவு குறித்து அவரிடம் பிரதமர் வினவியபோது, திரு சென், உதவிக்கான தமது கோரிக்கையை அப்போதைய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்ததாகவும் இது இந்தியாவின் முதல் தரவு மைய பூங்காவை உருவாக்க வழிவகுத்தது என்றும் தெரிவித்தார். புத்தொழில் நிறுவனங்களில் திரு நரேந்திர சென் மற்றும் இதர இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், அவர்களது அணுகுமுறையைப் பாராட்டினார். அவரது வெற்றிக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஜம்முவில் ஒரு கடை நடத்தி வரும் நீலம் குமாரி, பிரதமருடன் கலந்துரையாடினார். கொவிட் ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கல்களை அவர் நினைவு கூர்ந்தார். உஜ்வாலா, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற பல நலத்திட்டங்களின் பயனாளியாக தாம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு வழங்கும் கடனை வாங்கி தொழில் தொடங்கிய அவரை வேலை வழங்குபவர் என்று பிரதமர் பாராட்டினார். முன்பு புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாக இருந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தற்போது அரசின் நலத் திட்டங்களின் பலன்களை மக்கள் பெற்று வருவதாக பிரதமர் அவரிடம் கூறினார். அவரது ஆர்வமூட்டும் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார். ஜன் தன், முத்ரா, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் போன்ற திட்டங்கள் பின் தங்கிய மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருவதாக அவர் கூறினார்.
ஜல் ஜீவன் அக்ரோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரான மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரைச் சேர்ந்த திரு நரேஷ், விவசாயத்தின்போது நீர் வீணாவதைத் தடுப்பதில் தமது புத்தொழில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவித்தார். அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ் ரூ 30 லட்சம் கடன் தொகையைப் பெற்றதாகவும், இது நிறுவனத்தை அமைக்கவும் இயந்திரங்களை வாங்கவும் உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் தேசிய உணவுப் பொருள் விநியோகத் திட்டங்களின் பலன்களைப் பெறுவது குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார். தனது நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது குறித்து பேசிய திரு நரேஷ், தனது நிறுவனம் தயாரித்து வடிவமைத்த தயாரிப்புக்கு இந்திய அரசிடமிருந்து காப்புரிமை கிடைத்துள்ளது என்றார். விவசாயத்தின் போது நீர் வீணாவதைத் தடுக்க இது உதவுகிறது என்றும் அவர் கூறினார். வேளாண் துறையில் முத்திரை பதிக்க முயற்சிக்கும் புதிய தொழில் முனைவோர் அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது உற்சாகத்தைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, வேளாண் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு இவர் உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
தூய்மைப் பணியாளரான குண்டூரைச் சேர்ந்த திருமதி முத்தம்மா பேசுகையில், தமது பெயரில் கழிவுநீரை அகற்றும் (செப்டிக் டேங்க்) வாகனம் ஒதுக்கப்பட்டிருப்பது தமது வாழ்க்கையையே மாற்றியமைத்திருப்பதாகப் பிரதமரிடம் கூறினார். இந்த வாகனம் தனக்கு வலிமையைக் கொடுத்துள்ளது என்றும் சமூகம் தமக்குப் புதிய மரியாதையை வழங்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் உங்களின் (பிரதமர் திரு நரேந்திர மோடி) முயற்சியால் ஏற்பட்டவை என்றும் அவர் கூறினார். தாமும் தமது குடும்பத்தினரும் பெற்று வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். தூய்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு பணியாற்றி வருவதாகக் கூறினார். பெண்களின் கண்ணியம் மற்றும் வளம் ஆகியவை எங்கள் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள்” என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 470 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்றுள்ளதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான மற்றொரு பெரிய வாய்ப்பை நாடு ஏற்படுத்தித் தருகிறது என்று பிரதமர் கூறினார். பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இன்றைய நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் 500 வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 1 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 720 கோடி மதிப்புள்ள நிதி உதவி நேரடியாக மாற்றப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். முந்தைய அரசுகளின்போது இது போன்ற நேரடி பணப் பரிமாற்ற முறையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று அவர் கூறினார். இடைத்தரகர்கள், முறைகேடான பங்குத் தொகைகள் (கமிஷன்) மற்றும் பரிந்துரைகள் எதுவும் இல்லாமல் அரசுத் திட்டங்களின் பயன்கள் தற்போது மக்களுக்கு கிடைப்பதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு நிதி உதவி அளிக்க சுராஜ் தளம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். கழிவுநீர் தொட்டிகளின் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது குறித்தும் பிரதமர் பேசினார்.
பயனாளிகளுடன் தாம் நடத்திய கலந்துரையாடலைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பட்டியல் சமூகத்தினர், நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நலத்திட்டங்கள் விரைந்து சென்றடைவது குறித்து திருப்தி தெரிவித்தார். தாம் அவர்களிடம் இருந்து தனித்து இருக்கவில்லை என்றும் ஒரே குடும்பமாக அவர்களைப் பார்ப்பதால் அரசின் உதவிகள் அவர்களைச் சென்றடைந்து, அவர்கள் பயன் அடைவது தம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது என்றும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்தும் அவர் பேசினார். பின்தங்கிய பிரிவினரின் வளர்ச்சி இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது என்று பிரதமர் கூறினார். கடந்த கால மனநிலையை தாம் உடைத்தெறிந்திருப்பதாகவும், எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்குகள், கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கே பின்தங்கிய பிரிவினர் பல தலைமுறைகளாக சிரமங்களை அனுபவித்து வந்துள்ளதாக தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த அரசு அந்தப் பிரிவினரை நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக ஆக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். இலவச உணவு தானியங்கள், இலவச மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பான வீடுகள், கழிப்பறைகள் மற்றும் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு இணைப்பு போன்ற திட்டங்களின் அதிக அளவிலான பயனாளிகள் பின்தங்கிய பிரிவினர் என்று அவர் கூறினார். தற்போது இந்தத் திட்டப் பலன்கள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்கும் இலக்குடன் பணியாற்றி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இடம்பெயரும் சமூகத்தினருக்கான திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நமஸ்தே திட்டம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். மனித கழிவுகளை கைகளால் அகற்றும் மனிதாபிமானமற்ற செயல் குறித்துப் பேசிய பிரதமர், இதனால் பாதிக்கப்பட்ட 60,000 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். அரசின் பல்வேறு நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் பட்டியல் சமூகத்தினரின் நலனுக்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி உதவித் தொகையை அதிகரித்தல், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்தல், முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை வெளிநாடுகளில் தொடர பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். அறிவியல் தொடர்பான பாடங்களில் முனைவர் பட்டம் (பிஎச்டி) படிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று கூறிய பிரதமர், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உட்பட ஏழைகளுக்கு சுமார் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின பிரிவினர் மத்தியில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் துணிகர மூலதன நிதித் திட்டம் குறித்தும் அவர் பேசினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு இயக்கத்தையும் தொடங்கியுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.
பட்டியல் சமூகத்தினர் மற்றும் பின் தங்கிய சமூகங்களின் நலனுக்கான கொள்கைகள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், பின்தங்கிய மக்களுக்கு கண்ணியம் மற்றும் நீதியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும் என்றார். வளர்ச்சியை அதிகரித்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கான இந்த இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் தீவிரமடையும் என்றும் இது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் தெரிவித்தார். உங்களது வளர்ச்சியுடன், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு நிறைவேற்றப்படும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
பின்தங்கிய பிரிவினருக்கு கடன் ஆதரவுக்கான பிரதமரின்-சுராஜ் தேசிய தளம், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது. இது சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான நபர்களுக்கு கடன் ஆதரவு வழங்கப்படும். வங்கிகள், வங்கி சாரா கடன் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் இந்த வசதி செய்து தரப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது, இயந்திரமயமாக்கப்பட்ட தேசிய தூய்மைச் சூழல் அமைப்பின் (நமஸ்தே) கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு (கழிவுநீர்த் தொட்டி தொழிலாளர்கள்) ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் பிரதமர் வழங்கினார். இந்த முயற்சி சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாகும்.
*******
AD/PLM/KRS
बीते 10 वर्षों से हमारी सरकार वंचित वर्ग के कल्याण और उत्थान के लिए समर्पित रही है। दलित, पिछड़े और वंचित समाज के कल्याण से जुड़े एक कार्यक्रम को संबोधित कर रहा हूं। https://t.co/T4iYjNiIo1
— Narendra Modi (@narendramodi) March 13, 2024
हमारी सरकार की योजनाओं से जिस तरह दलित, वंचित और पिछड़े समाज के मेरे परिवारजनों का जीवन बदल रहा है, वो व्यक्तिगत तौर पर मुझे भावुक करने वाला है। pic.twitter.com/ruDu8HT8yS
— Narendra Modi (@narendramodi) March 13, 2024
हम इस विजन के साथ आगे बढ़ रहे हैं कि हमारे वंचित और पिछड़े वर्ग के भाई-बहनों के विकास के बिना भारत विकसित नहीं हो सकता। pic.twitter.com/5Go211UaNX
— Narendra Modi (@narendramodi) March 13, 2024
2014 से पहले जो लाखों करोड़ रुपये घोटालों की भेंट चढ़ जाते थे, हमने उन्हें दलित-वंचित के कल्याण और देश के निर्माण में लगाया है। pic.twitter.com/QHAltO9IH9
— Narendra Modi (@narendramodi) March 13, 2024
आने वाले 5 वर्षों में वंचित वर्ग के विकास और सम्मान को लेकर ये मोदी की गारंटी है… pic.twitter.com/N5B2ACJUbJ
— Narendra Modi (@narendramodi) March 13, 2024