Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்


‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘உருவாதல் மற்றும் விரைவுபடுத்தும் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத் திட்டம், முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் கட்டமைப்புத் திறன் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (பிஎம்இஜிபி) முதல் எம்எஸ்எம்இ துறையை முன்னேற்றுதல் வரையிலான புதிய அம்சங்கள் போன்ற முக்கியமான முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்தார். 2022-23-க்கான பிஎம்இஜிபி பயனாளிகளுக்கு உதவித் தொகையை டிஜிட்டல் வழியாக அவர் பரிவர்த்தனை செய்துவைத்தார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022-ன் முடிவுகளையும் அறிவித்தார்; தேசிய எம்எஸ்எம்இ விருதுகளை வழங்கினார்; தற்சார்பு இந்தியா நிதியத்தில் 75 எம்எஸ்எம்இ-களுக்கு டிஜிட்டல் சமபங்கு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு.நாராயண் ரானே, திரு.பானு பிரதாப் சிங் வர்மா, நாடு முழுவதிலும் இருந்து எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய எம்எஸ்எம்இ-க்களின் முயற்சிகள் தற்சார்பு இந்தியாவின் முக்கியமான இயக்குனராக இருக்கும் என்றார். 21-ம் நூற்றாண்டில் எந்த வகையான உச்சங்களை இந்தியா தொட்டாலும் அது எம்எஸ்எம்இ துறையின் வெற்றியைச் சார்ந்தே இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இந்தியப் பொருட்கள் புதிய சந்தைகளை அடையவும், இந்தியாவின் எம்எஸ்எம்இ துறை வலுவாக இருப்பது முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார். “இந்தத் துறையின் ஆழ்ந்த ஆற்றலையும், உங்களின் திறனையும் மனதில் கொண்டுதான் எமது அரசு புதிய கொள்கைகளை உருவாக்குகிறது, முடிவுகளை எடுக்கிறது” என்று அவர் மேலும் கூறினார். இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சிகளும், அரசால் மேற்கொள்ளப்படும் இதர நடவடிக்கைகளும் எம்எஸ்எம்இ-களின் தரம் மற்றும் மேம்பாட்டுடன் இணைந்தது என்று அவர் கூறினார்.

     எம்எஸ்எம்இ துறையை வலுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீட்டை 650%-க்கும் கூடுதலாக அரசு அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

     இந்தத் துறையுடன் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் எம்எஸ்எம்இ முக்கியமானது என்று அவர் கூறினார்.  பெருந்தொற்று காலத்தில் சிறுதொழில்களை பாதுகாக்க அரசு முடிவு செய்து புதிய பலத்தை அவற்றுக்கு அளித்தது.  அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், மத்திய அரசு எம்எஸ்எம்இ-களுக்கு ரூ.3.5 லட்சம் கோடியை அரசு உறுதி செய்ததாக அவர் கூறினார்.  ஓர் அறிக்கையின் தகவல்படி, 1.5 கோடி வேலைகள் பாதுகாக்கப்பட்டன என்று பிரதமர் தெரிவித்தார். இந்திய சுதந்திரத்தின் ‘அம்ரித கால வாக்குறுதிகளை நிறைவேற்றும் மிகப்பெரிய சாதனமாக எம்எஸ்எம்இ உள்ளது என்று அவர் கூறினார்’.

இந்தத் துறையின் முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்காத முந்தைய அரசுகள் சிறுதொழில் துறையை சிறியதாகவே வைத்திருக்கும் கொள்கைகளை செயல்படுத்தின என்று திரு.மோடி நினைவுகூர்ந்தார்.  இதனை சரிசெய்ய எம்எஸ்எம்இ என்பதன் பொருள் விளக்கம் மாற்றப்பட்டது.  

எந்த தொழில் துறையும் வளர்ச்சியடையவும் விரிவுபடுத்தவும் விரும்பினால் அரசு அதற்கு ஆதரவு அளிப்பது மட்டுமின்றி கொள்கைகளிலும் மாற்றங்களை செய்வது அவசியமாகிறது என்று பிரதமர் கூறினார். அரசு இ-சந்தையில் அரசுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை வழங்க மிக வலுவான தளத்தை எம்எஸ்எம்இ பெற்றுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு எம்எஸ்எம்இ-யும் அரசு இ-சந்தை இணையப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல் ரூ.200 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள திட்டங்களுக்கு உலகளாவிய டெண்டர்கள் கோருவதை தடை செய்திருப்பதும் எம்எஸ்எம்இ துறைக்கு உதவும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி அதிகரிப்பில் எம்எஸ்எம்இ-க்கு உதவி செய்ய பல நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.  வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இதுகுறித்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூன்று அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது, அதாவது வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா.

2008-2012-க்கு இடையேயான காலத்தில் இலக்குகளை எட்டமுடியாத நிலை இருந்ததால், 2014-க்குப் பின் பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் புனரமைக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.  2014-க்குப் பின், இந்தத் திட்டத்தின்கீழ், 40 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.  இதற்கான தொழில்நிறுவனங்களுக்கு இந்த காலக்கட்டத்தில் 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முன்பணம் மானியமாக வழங்கப்பட்டது.  இந்தத் திட்டத்தில் உற்பத்திப் பொருட்களின் செலவு வரம்பும் அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.   

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றி பேசிய பிரதமர், திருநங்கை தொழில்முனைவோர் அவர்களின் இலக்குகளை எட்டுவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.

முதன்முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சம் கோடியை விஞ்சியுள்ளது. “கிராமங்களில் உள்ள நமது சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் நமது சகோதரிகளின் மிகக் கடினமான உழைப்பின் காரணமாக இது சாத்தியமானது. கடந்த 8 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

தொழில்முனைவோர் பாதையை தொடர்வதற்கு சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உத்தரவாதம் அளிக்காமல் கடன் பெறுவதில் ஏற்பட்ட சிரமம் மிகப்பெரிய தடையாக இருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். 2014-க்குப் பின், அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம் – அனைவரின் நம்பிக்கை – அனைவரின் முயற்சி என்பதன் மூலம் தொழில்முனைவோரின் எல்லையை விரிவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியர் ஒவ்வொருவரும் எளிதாக தொழில் தொடங்க முத்ரா திட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். உத்தரவாதம் இல்லாமல் வங்கிக்கடன்கள் வழங்கும் இந்தத் திட்டம் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மகளிர் தொழில்முனைவோர், தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்குகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ், ரூ.19 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களில் 7 கோடி தொழில்முனைவோர் முதன் முறையாக தொழில் தொடங்கி புதிய தொழில்முனைவோராக மாறியிருக்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.  உத்யாம் இணையப்பக்கத்தில் பதிவு செய்திருப்போரில்  18%-க்கும் அதிகமானோர் பெண் தொழில்முனைவோர் என்று அவர் குறிப்பிட்டார். தொழில் முனைவோரில் அனைவரையும் உட்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் என்பது உண்மையான உணர்வில் சமூக நீதியாகும்என்று அவர் கூறினார்.

“உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உங்களோடு ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்படவும் கொள்கைகளை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என எம்எஸ்எம்இ துறைக்கு நான் உறுதியளிக்கிறேன். தொழில்முனைவோர் இந்தியாவின் ஒவ்வொரு சாதனையும் தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுக்கும். உங்களிடமும் உங்களின் திறமையிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

திட்டத்தின் பின்னணி:

     ‘தொழில்முனைவோர் இந்தியா என்பது தொடக்க நாளிலிருந்து எம்எஸ்எம்இ-களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பணியாற்றுவதில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகும்.  எம்எஸ்எம்இ துறைக்குத் தேவையான உரிய கால உதவியை வழங்க முத்ரா திட்டம், அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம், பாரம்பரிய தொழில்களை மறு உருவாக்கம் செய்வதற்கான நிதித்திட்டம் போன்ற பல திட்டங்களை அவ்வப்போது அரசு தொடங்கியுள்ளது.  இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உதவி செய்துள்ளது.

     ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டுடனான உருவாக்குதல் மற்றும் விரைவுபடுத்துதலில் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத் திட்டம், தற்போதுள்ள எம்எஸ்எம்இ திட்டங்களின் விரிவாக்கத்துடன் மாநிலங்களில் எம்எஸ்எம்இ-களின் திறன் மற்றும் ஈடுபாட்டு அமலாக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இது புதிய கண்டுபிடிப்பு, ஆலோசனைகளை ஊக்குவித்தல், புதிய வணிகங்களையும், தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொழில்முனைவோரையும் பாதுகாத்தல், நடைமுறைகளை மேம்படுத்துதல், சந்தை வசதிகளை விரிவுபடுத்துதல், தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை பயன்படுத்துதல், எம்எஸ்எம்இ-களை போட்டித்திறன் மற்றும் தற்சார்பு கொண்டதாகவும் மாற்றுவதற்கு 4.0 தொழில்துறை ஆகியவற்றை ஊக்கப்படுத்துதல் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு உதவும்.

     முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் திறன் கட்டமைப்பு திட்டம் என்பது உலகளாவிய சந்தைக்கு சர்வதேச தரங்களில் பொருட்களையும், சேவைகளையும் வழங்க எம்எஸ்எம்இ-களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.  இது உலகளாவிய மதிப்பு தொடரில் இந்திய எம்எஸ்எம்இ-களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதோடு, அவற்றின் ஏற்றுமதி திறனை உணர்வதற்கு உதவும்.

     உற்பத்தித் துறைக்கான அதிகபட்ச திட்டச் செலவை ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தியது, சேவை துறையில் இதனை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியது, அதிகபட்ச மானியங்களை பெறுவதற்கான சிறப்பு வகை விண்ணப்பதாரர்கள் பட்டியலில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் திருநங்கைகளை இணைத்தது உள்ளிட்டவை பிரதமரின் வேலை உருவாக்க திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். மேலும், வங்கிப் பணி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தும் நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் / தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதும் இதில் அடங்கும்.

     எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022 என்பது தனிநபர்களின் வெளிப்படாத உருவாக்கத்திறனுக்கு ஆதரவளித்து மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை அதிகரிப்பது எம்எஸ்எம்இ-களுக்கு இடையே புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். தெரிவு செய்யப்பட்ட ஆலோசனைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆலோசனைக்கும் ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

தேசிய எம்எஸ்எம்இ விருதுகள் 2022 என்பவை இந்தியாவின் செயலூக்கமிக்க எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில்     எம்எஸ்எம்இ-களின், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின், முன்னேற விரும்பும் மாவட்டங்களின், வங்கிகளின் சிறப்புமிக்க செயல்பாட்டிற்கான அங்கீகாரமாகும்.

***************