தொலை தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்த்திருத்தங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இது வேலை வாய்ப்பை உருவாக்கி பாதுகாக்கும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நலனை பாதுகாக்கும், பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் தொலை தொடர்பு சேவை அளிப்பவர்கள் மீதான ஒழுங்குமுறை சுமையை குறைக்கும்.
கொரோனா சவால்களை எதிர்கொள்வதில் தொலை தொடர்பு துறையின் சிறப்பான செயல்பாடுகளின் பின்னணியில், ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்தே பணியாற்றுதல், காணொலி காட்சி கூட்டம், சமூக ஊடகம் மூலம் தனிநபர்கள் இடையேயான தொடர்பு அதிகரிப்பு ஆகியவற்றால் இணையதள டேட்டா நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளதால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், பிராட் பேண்ட் மற்றும் தொலை தொடர்பின் ஊடுருவல் மற்றும் பரவலை மேலும் ஊக்குவிக்கும்.
வலுவான தொலை தொடர்பு என்ற பிரதமரின் தொலைநோக்கை, மத்திய அமைச்சரவையின் முடிவு வலுப்படுத்துகிறது. போட்டி மற்றும் நுகர்வோர் தேர்வு, அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான அந்தியோதயா மற்றும் பின்தங்கிய பகுதிகளை முன்னுக்கு கொண்டு வருதல், ஆகியவற்றுடன் இணைக்கப்படாதவர்களை உலகளாவிய பிராட்பேண்ட் இணைக்கும். இந்த சீர்திருத்தம், 4ஜி பரவலை ஊக்குவிக்கும், பணப்புழக்கத்தை புகுத்தும், 5ஜி வலையமைப்புக்கான முதலீட்டு சூழலை ஏற்படுத்தும்.
தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களுக்கான 9 அமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் 5 செயல்பாட்டு சீர்திருத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அமைப்பு சீர்திருத்தங்கள்:
1. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் சீரமைப்பு: தொலைதொடர்பு அல்லாத வருவாய் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் வரையறையிலிருந்து விலக்கப்படும்.
2. வங்கி உத்திரவாதங்கள் சீரமைப்பு: உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு.
3. வட்டி விகிதங்கள் சீரமைப்பு / அபராதங்கள் நீக்கம்.
4. இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை.
5. அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு.
6. எதிர்கால ஏலங்களில் பெறப்படும் அலைக்கற்றைகளை, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைக்கலாம்.
7. ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைக்கு அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.
8. அலைக்கற்றை பகிர்வு ஊக்குவிக்கப்படும்.
9. மூதலீட்டை ஊக்குவிக்க, தொலை தொடர்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.
செயல்பாட்டு சீர்திருத்தங்கள்:
1. அலைக்கற்றை ஏலம், ஒவ்வொரு நிதியாண்டில் கடைசி காலாண்டில் நடைப்பெறும்.
2. எளிதாக தொழில் செய்வது ஊக்குவிக்கப்படும்.
3. வாடிக்கையாளர் பற்றி அறியும் முறையி்ல் சீர்திருத்தங்கள்: வாடிக்கையாளரின் சுய தகவல்களுக்கு அனுமதி.
4. வாடிக்கையாளர் விவரம் பற்றிய படிவங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.
5. தொலை தொடர்பு கோபுரங்களுக்கான ஒப்புதல்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களின் பணப்புழக்க தேவைகளை நிவர்த்தி செய்தல்
1. செலுத்த வேண்டிய ஆண்டு கட்டணங்களை 4 ஆண்டுகளை வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.
2. கடந்த ஏலங்களில் எடுத்த அலைக்கற்றைக்கான கட்டணங்களை, அந்தந்த ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வகிதங்களுடன், 4 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.
3. இந்த வட்டியை பங்குகள் முறையிலும் செலுத்தலாம்.
4. செலுத்த வேண்டிய கட்டணத்தை பங்குகளாக மாற்றும் வழிகாட்டுதல்களை மத்திய நிதியமைச்சகம் இறுதி செய்யும்.
மேலே உள்ள விதிமுறைகள், அனைத்து தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755086
—-