Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேவைப்பட்டாலும் பேராசைப்படக் கூடாது என்பதே இந்தியாவின் வழிகாட்டு கொள்கை: பிரதமர்


 

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 2 மடங்குக்கும் அதிகமாக 450 கிகாவாட் அளவிற்கு உயர்த்த உறுதி

 

பருவநிலை செயல்தி்ட்ட மாநாட்டில் பிரதமர் மோடி உரை

 

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே, ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்பாடு செய்த பருவநிலை செயல்திட்ட மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு புவியின் நாயகன் விருதை பெற்ற பிறகு ஐ.நா. சபையில் உரையாற்ற கிடைத்த முதல் வாய்ப்பு இது என்றார். பருவநிலை மாற்றம் போன்ற கடும் சவால்களை எதிர்கொள்ள, தற்போது நாம் மேற்கொண்டு வரும் பணிகள் போதுமானதல்ல என்றும் அவர் கூறினார். மக்களின் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உலகளாவிய மக்கள் இயக்கம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இயற்கையை போற்றி, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி,  நமது தேவைகளை குறைத்துக் கொண்டு, நமது வருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவது போன்றவை நமது பாரம்பரியம் மற்றும் தற்கால முயற்சிகளுக்கு மிகவும் அவசியமானவை என்றும் அவர் கூறினார்.  பேராசைப்படக் கூடாது என்பதே நமது வழிகாட்டும் கொள்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே தான், இது போன்ற பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைப் பேசுவதோடு மட்டுமின்றி, நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறைகளை இந்தியா தெரிவித்து வருகிறது. டன் கணக்கில் போதனை செய்வதை விட அவுன்ஸ் கணக்கில் நடைமுறைப்படுத்தினாலே சரி என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாகக் கூறிய அவர், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 175 கிகாவாட்டிற்கும் மேல் அதிகரிப்பதோடு, பிறகு 450 கிகாவாட் வரை உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறையை பசுமையாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், பெட்ரோல் மற்றும் டீசலில் கலக்கப்படும் உயிரி எரிபொருட்களின் அளவை கணிசமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள 150 மில்லியன் குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தண்ணீரைப் பாதுகாக்கவும், மழைநீரை சேமிக்கவும் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய திரு.மோடி, இத்திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் செலவிடப்பட இருப்பதாக கூறினார்.

சர்வதேச அமைப்புகளைப் பொறுத்தவரை, நமது சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் 80 நாடுகள் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். தொழில் துறையின் செயல்பாட்டை மாற்றியமைப்பதற்காக, பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவும், சுவீடனும் புதிய தலைமைக் குழு ஒன்றை தொடங்கி உள்ளன. இந்த முன்முயற்சி பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் தனியார் துறையினரும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும். தொழிற்சாலைகள், கரிமப்பொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க இது உதவும்.

பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்பு கூட்டணி ஒன்றை தொடங்கியுள்ள இந்தியா, பிற உறுப்பு நாடுகளும் இந்த கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதியன்று, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்ட மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். பேசுவதற்கான நேரம் முடிந்து விட்டது; உலகம் தற்போது செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 

*********