Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடல்

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடல்

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடல்


தேர்வு குறித்த கலந்துரையாடலின் 6-வது அத்தியாயத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இன்று புதுதில்லி தல்கத்தோரா விளையாட்டு மைதானத்தில் கலந்துரையாடினார். கலந்துரையாடலுக்கு முன்பு மாணவர்கள் காட்சிப்படுத்தி வைத்திருந்த பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார். பிரதமரின் சிந்தனையில் உருவான தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல்வேறு பொருள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். இந்த ஆண்டு, 155 நாடுகளிலிருந்து சுமார் 38.80 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், முதல் முறையாக இந்த ஆண்டு, குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களின் போது நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினார். பிற மாநிலங்களிலிருந்து புதுதில்லி வந்துள்ளவர்கள் குடியரசு தின விழாக் காட்சிகளை காணும் வாய்ப்பை பெற்றனர். தேர்வு குறித்த கலந்துரையாடலின் முக்கியத்துவம் பற்றி, இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான கேள்விகள் பதிவேற்றப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைய தலைமுறையினரின் எண்ணங்களை காணும் வாய்ப்பு இதன் மூலம் தமக்கு கிட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்தக் கேள்விகள் எனக்கு பொக்கிஷம் போன்றவை” என்று பிரதமர் கூறினார். இந்த அனைத்துக் கேள்விகளையும் தொகுக்க வேண்டுமென தாம் விரும்புவதாகக் கூறிய அவர், வரும் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானிகள் இவற்றை பகுப்பாய்வு செய்யும் போது இளம் மாணவர்களின் எண்ணங்களின் எத்தகைய சிந்தனைகள் உதயமாகி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஏமாற்றத்தைக் கையாளுதல்

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா மாணவி அஸ்வினி, தில்லி பீதாம்புரா கேந்திரிய வித்யாலயாவைச் சேர்ந்த நவ்தேஜ், பாட்னாவின் நவீன் பாலிகா பள்ளியின் பிரியங்கா குமாரி, ஆகியோர் எழுப்பிய, குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஏற்படும் குடும்பத்தின் ஏமாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை தவறு என்று கூற முடியாது என்றார். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் சமூக அந்தஸ்து காரணமாக உள்ள எதிர்பார்ப்புகளாக இருந்தால் அவை கவலையளிக்கக் கூடியதுதான் என்றார். அதிகரித்து வரும் செயல்பாடுகளின் தரம் குறித்தும் ஒவ்வொரு வெற்றியுடனும் வளரும் எதிர்பார்ப்புகள் குறித்தும் திரு.மோடி பேசினார். எதிர்பார்ப்பு வலை சூழ்வதைக் கண்டு பணிந்து விடுவது நல்லதல்ல என தெரிவித்த அவர், ஒருவரது சொந்தத் திறமைகள், தேவைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் எதிர்பார்ப்புகளை பொருத்திப் பார்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டை உதாரணமாக கூறிய பிரதமர், பவுண்டரிகளும். சிக்சர்களும் அடிக்கப்படும்போது உற்சாகமடையும் கூட்டத்தினரின் முழக்கங்கள் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு இடையூறாக இருப்பதில்லை என்று தெரிவித்தார். கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரரின் கவனத்தைப் போல மாணவர்களின் படிப்பும் இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், நீங்கள் கவனத்துடன் இருந்தால் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தார். எதிர்பார்ப்புகளை வைத்து குழந்தைகள் மீது பெற்றோர் சுமையை ஏற்றக் கூடாது என்று வலியுறுத்திய அவர், மாணவர்கள் தங்களது ஆற்றலுக்கு ஏற்ப எப்போதும் தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், அழுத்தங்கள் தங்களது சொந்த ஆற்றலுக்கு ஏற்றதா இல்லையா என்று ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய சூழலில் இந்த எதிர்பார்ப்புகள் சிறந்த செயல்பாட்டுக்கு தூண்டுகோலாக இருக்கக்கூடுமென்று தெரிவித்தார்.

தேர்வுகளுக்கு தயாராதல் மற்றும் நேர மேலாண்மை

தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது பற்றி தெரியவில்லை. மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலையால் மறதி ஏற்படுகிறது என்று டல்ஹவுசி கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த 11-வது வகுப்பு மாணவர் ஆரூஷி தாக்கூரின் கேள்வி, நேர மேலாண்மை குறித்த ராய்ப்பூர் கிருஷ்ணா பப்ளிக்  பள்ளியைச் சேர்ந்த அதிதி திவானின் கேள்வி ஆகியவற்றுக்கு பதிலளித்த பிரதமர், தேர்வுகள் உள்ளனவோ இல்லையோ பொதுவாழ்வில் நேர மேலாண்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். வேலை என்பதும் ஒருவரை களைப்படையச் செய்யாது. வேலை இல்லாமைதான் ஒருவரை களைப்படைய வைக்கும் என்று கூறிய அவர், பல்வேறு விஷயங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து மாணவர்கள் குறித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். விரும்புகின்ற விஷயங்களுக்கு அதிக நேரத்தை செலவிடுவது ஒருவரது பொதுவான அணுகுமுறைதான். ஆர்வம் குறைந்த அல்லது மிகக் கடினமான பாடங்களை உள்ளம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் போது நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எதையும் திணிப்பதை விடுத்து ஓய்வான மனநிலையில் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும். வீட்டில் தாய்மார்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நேரப்படி செய்வதை கவனிக்கும் மாணவர்கள், நேர மேலாண்மையை எளிதில் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் இவ்வளவு வேலைக்கு இடையே களைப்படைவதை நாம் பார்க்க முடியாது. அதிலும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி சில படைப்பாற்றல் வேலைகளை செய்வதை நாம் காணலாம். மாணவர்கள் தங்களது அன்னையரை கவனித்து நுணுக்கமான நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பெரிய பயன்களுக்கு உங்களது நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

 

தேர்வுகளில் நியாயமற்ற செயல்கள் மற்றும் குறுக்கு வழிகள்

சத்தீஸ்கரின் பாஸ்டரில் உள்ள சுவாமி ஆத்மானந்த் அரசு பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவன் ரூபேஷ் காஷ்யப், தேர்வுகளில் நியாயமற்ற மற்றும் மோசடி செயல்களைத் தவிர்ப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதேப் போல் ஒடிசாவின் கோனார்க்பூரியைச் சேர்ந்த தன்மே பிஸ்வால், தேர்வுகளில் மோசடிகளை ஒழிப்பது குறித்தும் கேட்டார். இதற்கு பதிலளித்த பிரதமர், மோசடிகளைத் தடுப்பது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  நீதிக்கு புறம்பான செயல்களை செய்து தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பாளரை முட்டாளாக்கும் முறைகேடுகள் மிகவும் அபாயகரமானவை என்றார்.  ஒட்டுமொத்த சமூகமும் தாமாக முன்வந்து இத்தகைய மோசடிகளைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  சில பள்ளிகளின் ஆசிரியர்கள் டியூசன் எடுப்பதன் மூலம் இத்தகைய முறைகேடுகளை கற்பித்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வழிகளை உருவாக்கி தருவதாக்கக் குற்றம் சாட்டினார். காலமாற்றத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை முழுவதுமே மாறும், நீங்கள் ஒவ்வொரு படியிலும் தேர்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், குறுக்கு வழியைத் தேர்வு செய்யும் மாணவர்கள், சில தேர்வுகளில் மட்டுமே தேர்ச்சியடைய முடியுமே தவிர, வாழ்க்கையில் கட்டாயம் தோல்வியையேத் தழுவுவார்கள் என்று தெரிவித்தார்.  ஏமாற்றுவோரின் வாழ்க்கை ஒருபோதும் வெற்றிபெறாது, மோசடிகளைக் கையாண்டு ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளில் நீங்கள் தேர்ச்சி பெற்றாலும்,  உங்கள் வாழ்க்கை முழுவதும் கேள்விக்குறியாக மாறிவிடும் என்றார்.  கடினமாக உழைக்கும் மாணவர்கள் ஒருபோதும் மோசடி செய்து கிடைக்கும் இடைக்கால வெற்றியை விரும்பமாட்டார்கள் என்றும், கடின உழைப்பு வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நற்பலனை தரும் என்றும் பிரதமர் தெரிவித்தார். தேர்வுகள் வந்து, போகும். ஆனால் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்தாக வேண்டியது கட்டாயம் என்று கூறினார். ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் வழியாக இருப்புப் பாதையை கடப்பதற்கு பதிலாக, ஒருசிலர் இருப்புப் பாதையை நேரடியாகக் கடந்து ஆபத்தைத் தேடிக்கொள்வர், குறுக்குவழி ஒரு போதும் இலக்கை அடைய உதவாது. மாறாக கையாளும் குறுக்கு வழி, நம் வாழ்க்கையை  குறுகிய காலத்தில் அழித்துவிடும் என்று பிரதமர் தெரிவித்தார்.

கடினமாக உழைத்தல்- புத்திகூர்மையுடன் உழைத்தல்

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த மாணவன், கடினமாக உழைப்பதற்கும், புத்தி கூர்மையுடன் உழைப்பதற்கும் இடையேயான வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு புத்தி கூர்மையுடனான உழைப்பு குறித்து தெரிவித்த பிரதமர், தாகம் உள்ள காகம் கற்களை நிரப்பி தண்ணீரைப் பருகுவதை உதாரணமாகக் காட்டினார்.  நாம் செய்ய வேண்டிய பணியின் பின்புலம் குறித்து  ஆய்வு செய்வதுடன், சரியாக புரிந்துகொண்டு பணியாற்றுவதே சிறந்தது என்றும் புத்தி கூர்மையுடன் கடினமாக உழைப்பதே தற்போதைய தேவை என்று பிரதமர் கூறினார். எந்த பணியை செய்வதாக இருந்தாலும் முதலில் அதனை முழுவதும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றார். புத்தி கூர்மையுடன் பணியாற்றியக்கூடிய மெக்கானிக் ஒருவர், 200 ரூபாய் கூலிக்கு, ஒரு ஜீப்பை இரண்டு நிமிடங்களில் பொருத்துகிறார் என்றால், இது அவருடைய பணி அனுபவத்தை காட்டுவதாக உள்ளது. அதே நேரத்தில் கடினமாக உழைக்கக்கூடிய தொழிலாளியால் அனைத்தையும் சாதிக்க முடியாது என்றார்.  இதே போல் விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் அங்கு சிறப்பு பயிற்சி முக்கியப் பங்காற்றுகிறது. எனவே நாம் செய்ய வேண்டியதன் தேவையைக் கருத்தில் கொண்டு புத்திகூர்மையுடன் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒருவருடைய திறமையை அங்கீகரித்தல்

குருகிராமின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்  ஜோவிட்ரா பட்ரா, சராசரியான மாணவன் தேர்வுகளை நன்றாக எழுத முடியுமா என கேள்வி எழுப்பினார். ஒவ்வொருவரும் தன்னுடைய திறனை பரிசோதித்து கொள்வது அவசியமான ஒன்று என்று பதிலளித்த பிரதமர், சரியான இலக்கையும், அதற்கான திறனையும் மாணவர்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஒருவருடைய திறமைகளை தெரிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற முறையில் அவர்களை தயார்படுத்த முடியும் என்றார்.   நம்மில் பெரும்பாலானோர் சராசரி மற்றும் சாதாரணமானவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவர்கள்  தங்களை தயார்படுத்திக் கொண்டால் அடைய முடியாத இலக்கைக் கூட எட்டி சாதனைப்படைக்க இயலும் என்றும் கூறினார்.  இந்தியாவின் பிரதமராக ஒரு பொருளாதார நிபுணர்  பதவி வகித்த காலத்தில், அடைய முடியாத வெற்றியை தற்போது இந்தியா அடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  நாம் சராசரியானவர்கள் என்ற எண்ணத்தை ஒருவரிடம் திணிக்கக்கூடாது, அந்த சராசரியானவர்களால்தான் சாதனைப்படைக்க இயலும் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களது திறமைகளை அங்கீகரித்து ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விமர்சனங்களை கையாளுதல்

சண்டிகரின் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர்  மனாட் பஜ்வா, அகமதாபாத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்  கும்கும் பிரதாபாய் சோலங்கி, பெங்களூரு ஒயிட்பீல்டு சர்வதேச பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் தரீரா ஆகியோர் மக்களின் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்றும், அவை  உங்களுக்குள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பினர். இதே போல் தெற்கு சிக்கிமின் டிஏவி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர் அஷ்டாமி சென் ஊடகங்களின் விமர்சனங்களை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், விமர்சனம் என்பது, நம்மை தூய்மைப்படுத்தும் திட்டம் என்றும், வளமான ஜனநாயகத்தின் அடித்தள வேராக அதுவே இருக்கிறது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்றார்.  விமர்சனம் என்பது ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் தன்னுடைய நிகழ்ச்சி குறித்த பார்வையாளர்களின் மேலான கருத்துக்களை  தெரிந்து கொள்ள முயற்சி மேற்கொள்வது, ஒரு வியாபாரி தன்னுடைய பொருள் குறித்த நுகர்வோரின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது போன்றவற்றுக்கு ஒப்பானது என பிரதமர் உதாரணங்களை பட்டியலிட்டார்.  உங்களுடைய செயல்களை விமர்சிப்போர் மிகவும் முக்கியமானவர்கள் என்றார். ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு ஆதரவு அளிக்கும் மனப்பான்மையை  மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்கு மாறாக  அவர்களை வேறு வழியில் திசை திருப்புவதை தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் வழக்கமாக கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்த பிரதமர், இந்த வழக்கத்தை கைவிடாவிட்டால்  மாணவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையாது என்றும் கூறினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ஒரு உறுப்பினர் குறிப்பிட்ட தலைப்பில்  உரையாற்றும் போது எதிர்க்கட்சி கூச்சல் குழப்பத்தை உருவாக்கி இடையூறு செய்வதை மேற்கோள் காட்டிய பிரதமர், எந்த சூழ்நிலையிலும் விவாதத்திற்கு   எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து திசைமாறக் கூடாது என்று குறிப்பிட்டார்.  தொழிலாளி முதல், ஆராய்ச்சியாளர் வரை இன்றைக்கு விமர்சிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களது விமர்சனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், பெரும்பாலான மக்கள் விமர்சனத்திற்கு பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்று அவர் குறை கூறினார். குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனத்திற்கும் இடையே மிகப்பெரிய  இடைவெளி இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர்,  குற்றச்சாட்டுகளை விமர்சனங்களாக முன்வைக்கும் தவறை யாரும் செய்ய வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான மோகம்

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதை எவ்விதம் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொலைக்காட்சி மூலமாக போபாலைச் சேர்ந்த தீபேஷ் அகிர்வார், 10 ஆம் வகுப்பு மாணவனாகிய அதிதாப் மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சி மூலமாக காமாட்சி என்ற மாணவியும், ஜி தொலைக்காட்சி மூலமாக மன்னன் மிட்டல் போன்ற மாணவர்கள் பிரதமருடனான கலந்துரையாடல் நிகழ்வில் கேள்வியை கேட்டனர்.  அதற்கு பதிலளித்த பிரதமர், முதலில் நீங்கள் அறிவுத்திறன் பெற்றவரா? அல்லது மின்னணு சாதனங்கள் அறிவுத்திறன் பெற்றவைகளா? என்பதை தீர்க்கமாக முடிவு செய்து கொள்ளுங்கள்.  உங்கள் அறிவு மற்றும் திறமையை காட்டிலும் மின்னணு சாதனங்களின் ஆற்றல் அதிகம் என்று நீங்கள் நினைக்கும்போதே பிரச்சினைகளும் ஆரம்பித்து விடுகிறது.  மின்னணு சாதனங்களை தேவையான அளவுக்கு சிறந்த முறையில் பயன்படுத்தி தீர்வுகளைக் காண முயற்சியை மேற்கொள்ளுங்கள்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக மின்னணு சாதன திரைகளை 6 மணிநேரம் வரை பார்க்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.  இந்த சூழ்நிலையில்தான் மின்னணு சாதனங்கள் நம்மை அடிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நாம்  சுயமாக சிந்தித்து, செயலாற்றி, முடிவெடுப்பதற்கு நமக்கு இறைவன் ஞானத்தை தந்திருக்கிறார்.  மின்னணு சாதனங்களுக்கு நாம் அடிமையாவதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.  எவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் தன்னை மொபைல் ஃபோனோடு அவ்வளவு சாதாரணமாகக் காண முடியாது என்று பிரதமர் கூறினார். மேலும் அதற்கென தனியாக நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தொழில்நுட்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி விடக்கூடாது.  நமக்குத் தேவையான அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.  தற்போது மாணவர்கள் வாய்ப்பாடு ஒப்பித்தல் நடவடிக்கையே இல்லாமல் இருக்கும் நிலையை வருத்தத்துடன் பிரதமர் தெரிவித்தார்.  இயல்பாக நம்மிடம் கிடைக்கப் பெற்றிருந்த ஆற்றல்களை தவற விட்டிருப்பதை தவிர்த்து அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.  இந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு காலக் கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குதானே சோதனைகளை மேற்கொண்டு, கற்று தேர்வதன் மூலமே ஒருவருடைய தனித்துவ தன்மை வெளிப்படும் என்றார்.  சீரான இடைவெளிகளில் தொழில்நுட்பத்திற்கு ஓய்வு கொடுங்கள்.  ஒவ்வொரு இல்லத்திலும் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத அறையை கண்டறியுங்கள்.  இதன் விளைவாக உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.  குறிப்பாக மின்னணு சாதன அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் மீண்டு விடுங்கள். 

தேர்வுகளுக்குப் பிந்தைய மனஅழுத்தம்

ஜம்முவைச் சேர்ந்த அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நிதாஹ், நன்றாக படித்தாலும் அதற்குரிய முடிவுகள் வரவில்லை என்கின்ற போது ஏற்படும் அழுத்தத்தை எவ்விதம் கையாள வேண்டும், ஷாஹித் நாயக் ராஜேந்திர சிங் ராஜ்கியா பள்ளி மாணவன் பிரசாந்த், ஹரியானாவைச் சேர்ந்த பல்வால் என்ற மாணவன், மனஅழுத்தம் தேர்வு முடிவுகளை பாதிக்கிறது என்ற கேள்விகள் பிரதமரிடம் கேட்கப்பட்டன.  அதற்கு பதிலளித்த பிரதமர், தேர்வுக்குப் பிந்தைய மனஅழுத்தத்திற்கு நன்றாக தேர்வு எழுதிய பிறகும், உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் இதற்கு காரணமாகும் என்றார்.  மாணவர்கள் மத்தியிலான போட்டி மனப்பான்மைகளும் அவர்கள் மத்தியில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் காரணியாக அமைந்து விடுகிறது என்றும், ஒவ்வொருவரும் மனதளவில் ஆற்றல் மேம்பாடு சம்பந்தமாக பயிற்சிகள் செய்து எத்தகையை சூழ்நிலையையும் சந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.  ஒரே தேர்வு வாழ்க்கையின் இறுதிக்கட்டமாகி விடாது என்றும்,  தேர்வு முடிவுகளை பற்றி அளவுக்கு அதிகமாக தினந்தோறும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

புதிய மொழிகளைக் கற்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்

தெலங்கானாவின் ஜவஹர் நவோதய வித்யாலயா ரங்கரெட்டி பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஆர் அக்ஷராஸ்ரீ, கோபாலின் ராஜ்கியா மத்யமிக் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியான ரித்திகா போன்ற மாணவிகள் அதிக மொழிகளைக் கற்பதன் மூலம் எவ்விதம் நன்மைகள் பெற முடியும் என்று பிரதமரிடம் கேட்டனர்.  அதற்கு பிரதமர், நம்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சார பன்முகத்தன்மை பற்றியும் உயர்வாக சுட்டிக்காட்டினார்.    மேலும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான  மொழிகளையும்,  ஆயிரக்கணக்கான வட்டார பேச்சு வழக்குகளையும் பயன்படுத்தும் மக்களை உள்ளடக்கிய நாடாக இந்தியா இருப்பது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.  புதிய மொழிகளைக் கற்பது, புதிய இசைக் கருவியை கற்பதற்கு சமமானதாகும் என்றார்.  ஒரு பிராந்திய மொழியை கற்பதன் மூலம் அந்த பிராந்தியத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை கற்கும் சிறப்பு கிடைக்கும் என்றார்.  மேலும் ஒருவர் புதிய மொழியை கற்பது அவருடைய அன்றாட வாழ்வியல் முறையில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றார்.  சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக அமையப் பெற்றிருக்கும் நமது நாட்டின் சிறந்த பாரம்பரியத்தை அனைத்து மக்களும் பெருமைக்கொள்ளும் விதமாக இருக்கிறது என்று கூறிய பிரதமர், பூமியில் பழமையான மொழியான தமிழ் மொழி குறித்தும் நமது நாடு  பெருமைக் கொள்கிறது என்றார்.  பிரதமர் தனது ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரை குறித்து நினைவுகூர்ந்த அவர், தமிழ் மொழி குறித்த பல்வேறு உண்மைகள் பற்றி பேசி, இந்த பழமையான மொழியை நமது நாடு கொண்டிருப்பதற்கு பெருமை அடைவதாகவும் கூறினார்.  வடஇந்தியர்கள், தென்னிந்திய உணவு வகைகள் பற்றியும், தென்னிந்தியர்கள், வடஇந்திய உணவு வகைகள் பற்றியும் உயர்வாக தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  ஒருவர் தனது தாய்மொழியுடன் ஒரு பிராந்திய மொழியைக் கற்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், பிராந்திய மொழி தெரிந்தவர்களோடு அவர்களது மொழியில் பேசுவது சிறந்த அனுபவமாக விளங்கும் என்றார்.  குஜராத்தில் உள்ள இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளியின்  8 வயது மகள் பெங்காலி, மலையாளம், மராத்தி, குஜராத்தி போன்ற பல மொழிகள் பேசும் திறன் கொண்டவர் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் தன்னுடைய உரையில் நமது பாரம்பரியம், நாட்டின் மேம்பாடு தொடர்பான ஐந்து உறுதிமொழி குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொருவரும் நமது நாட்டில் பல்வேறு மொழிகள் வழக்கில் இருப்பது குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்று கூறினார்.    

மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பணியில் ஆசிரியர்கள்

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள ஆசிரியை சுனன்யா திரிபாதி, எவ்விதம் மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொண்டு, வகுப்புகளில் கீழ்படிதலுடன் கூடிய ஆர்வமிகுதியை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டார்.  அதற்கு பிரதமர், ஆசிரியர்கள் எப்போதுமே தலைப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து கடுமை காட்டாமல் இயல்புடன் இருக்க வேண்டும் என்றார்.  மேலும், மாணவர்களோடு நல்ல  உறவு முறையை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.  மாணவர்கள் மத்தியில் ஆர்வமிகுதியை அதிகரிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.  அப்படி செயலாற்றியதன் விளைவாகவே இன்றைய அளவிலும் மாணவர்கள், முந்தைய காலக் கட்டத்தில் அவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களின் மதிப்பு பற்றி குறிப்பிடுகின்றனர்.  வகுப்பில் கல்வித் திறன் குறைவாக உள்ள மாணவர்களை அவமானம் படுத்தும் வகையில் மாணவர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளக்கூடாது.  மாறாக நன்றாக கற்கும் மாணவர்களுக்கு கேள்விகளை கேட்டு மாணவர்கள் அதற்கு பதிலளிக்கும் போது அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்றார்.  நன்னடத்தை தொடர்பான பிரச்சினைகளை அணுகும் போது ஆசிரியர்கள், மாணவர்களின் உணர்வுகளை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் பேசக்கூடாது.  அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்களை அடிப்பதன் மூலம் நல்வழிப்படுத்த முடியாது.  அவர்களோடு நல்ல உறவு முறையை பேணி உரையாடும் போது மட்டுமே அவர்களை சரியான வழியில் பயணிக்க வைக்க முடியும் என்றார். 

மாணவர்களின் நடத்தை பற்றி

சமூக கட்டமைப்பில் மாணவர்களின் நடத்தை குறித்து புதுதில்லியைச் சேர்ந்த பெற்றோரான திருமதி சுமன் மிஸ்ரா பிரதமரிடம் கேட்டார்.  அதற்கு பிரதமர், சமூகத்தில் மாணவர்களின் செயல்பாடு மற்றும் நடத்தை போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.  சமூக கட்டமைப்பில் மாணவர்களின் பயன்பாடு தொடர்பாக, ஒட்டுமொத்த அணுகுமுறை அவசியம் ஆகும் என்றார்.   மாணவர்களை குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.  அவர்களுக்கு பரந்து விரிந்த எல்லையை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்கள் சுற்றுலா சென்று அவர்களுடைய அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.  இதன்மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவ அறிவு கிடைக்கும் என்றார்.    12 ஆம் வகுப்பு  தேர்வு எழுதிய பிறகு மாணவர்கள் தங்களது மாநிலங்களை விட்டு வெளியே சுற்றுலா செல்ல வேண்டும் என்றும்,  பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு புத்தம் புதிய அனுபவங்களை தரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளின் சிந்தனை மற்றும் நடவடிக்கை குறித்து சிறந்த புரிதல் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

தனது உரையின் இறுதியில் பிரதமர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.  தேர்வு நேரங்களில் தேவையில்லாத மன அழுத்த சூழ்நிலையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்றார்.  இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் கொண்டாடும் படியாக  உருமாற்றம் அடைந்து அனைத்து மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது உறுதியாகும் என்றார்.

***

AP/PKV/ES/GS/RR/AG/PK/KRS