பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தேசிய வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றியதோடு, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000த்திற்கும் அதிகமானோர்க்கு நியமனக் கடிதங்களை வழங்கினார். ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். பிரதமர் உரையின்போது நாடு முழுவதும் 37 இடங்கள் விழாவுடன் இணைக்கப்பட்டன.
மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு விழாக்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கபட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வேலைவாய்ப்பு விழாக்களின் பயணம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்றும் 50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்பு விழாக்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான அரசு உறுதிப்பாட்டின் அடையாளங்கள் என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். “நாங்கள் வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி, வெளிப்படையான நடைமுறையையும் பராமரித்து வருகிறோம்”, என்று திரு மோடி கூறினார். ஆட்சேர்ப்பு நடைமுறைகளால் இளைஞர்களிடையே அதிகரித்த நம்பிக்கை பற்றி அவர் குறிப்பிட்டார். நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, தேர்வு நடைமுறையை மறுசீரமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது என்று அவர் கூறினார். பணியாளர் தேர்வு சுழற்சியின் கீழ் ஆட்சேர்ப்பு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரமும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். “வேலைவாய்ப்பு அறிவிப்புக்கும் வேலைவாய்ப்பு கடிதத்திற்கும் இடையிலான ஒட்டுமொத்த நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று திரு மோடி விளக்கினார். எஸ்.எஸ்.சி.யின் கீழ் சில தேர்வுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, தேர்வுகள் இப்போது இந்தி, ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
வளர்ச்சியின் வேகம் ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்ற தோர்டோ கிராமம், ஹொய்சாலா கோயில் வளாகம் மற்றும் சாந்தி நிகேதனுக்கு உலகப் பாரம்பரிய இடத்திற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது பற்றி அவர் குறிப்பிட்டார் . இந்த வளர்ச்சிகள் மற்றும் அதிகரித்த சுற்றுலா, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல், விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன என்றார் அவர்.
“வேலை வாய்ப்புகளை வழங்கும் பாரம்பரிய துறைகளை அரசு வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ஆட்டோமேஷன், பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி போன்ற புதிய துறைகளையும் ஊக்குவிக்கிறது” என்று பிரதமர் கூறினார். ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் புதிய வழிகளைத் திறப்பது குறித்தும், அதன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பயிர் மதிப்பீடு மற்றும் ஊட்டச்சத்து தெளிப்புகளின் எடுத்துக்காட்டுகளையும் அவர் குறிப்பிட்டார். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், ட்ரோன்கள் நில வரைபடத்திற்கு பயன்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் ஸ்பிதி பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி மருந்துகளை விநியோகிப்பதாகவும், இதன் மூலம் மதிப்பிடப்பட்ட நேரத்தை 2 மணி நேரத்திலிருந்து 20-30 நிமிடங்களுக்கும் கீழ் குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ட்ரோன்களால் நிறைய பயனடைந்துள்ளன, புதிய வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவியுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கதர் விற்பனை தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இது கதர் மற்றும் கிராமத் தொழில் துறையில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, குறிப்பாக பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
எந்தவொரு நாட்டின் எந்தவொரு போட்டிப் பயனையும் முழுமையாக உணர இளைஞர்களின் சக்தி தேவை என்று பிரதமர் மோடி கூறினார். புதிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இளைஞர்களைத் தயார்படுத்தும் திறன் மேம்பாடு மற்றும் கல்வியின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை, புதிய மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் ஐ.டி ஆகியவை வந்துள்ளன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா நண்பர்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மறுதிறன் மற்றும் மேம்படுத்துதல் இன்றைய தேவையாக இருப்பதால், பிரதமர் விஸ்வகர்மா திட்டம் விஸ்வகர்மாக்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் இணைக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும், இது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், ஆட்சேர்ப்பு செய்பவர்கள்தான் அரசாங்கத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், அவற்றை அடித்தளத்தில் செயல்படுத்துபவர்கள் என்றார். “இன்று, நீங்கள் அனைவரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் எங்கள் பயணத்தில் முக்கியமான கூட்டாளிகளாக மாறி வருகிறீர்கள்” என்று கூறிய பிரதமர், இந்தியாவின் இலக்கை அடைய தங்களின் முழு சக்தியுடனும் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தங்கள் கற்றல் நடைமுறையைத் தொடரவும், ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலைப் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். “உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும்” என்று அவர் குறிப்பிட்டார். ஷரத் பூர்ணிமாவின் புனிதமான தருணத்தைக் குறிப்பிட்டு, நாட்டிற்குள் வேலைவாய்ப்பை உருவாக்கும் வழிமுறையான உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற செய்தியைப் பரப்புமாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை வலியுறுத்திப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
நாடு முழுவதும் 37 இடங்களில் வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள் அரசில் சேர்வார்கள்
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படிதான் வேலை வாய்ப்பு விழா. இவ்விழா, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஓர் ஊக்கியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அங்கு 750 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் ‘எங்கும் எந்த சாதனமும்‘ கற்றல் வடிவத்தில் கிடைக்கின்றன.
***
ANU/PKV/SMB/DL
Addressing the Rashtriya Rozgar Mela. Best wishes to the newly inducted appointees. https://t.co/IRZUeVQ5yl
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
Our government is working in mission mode keeping in mind the future of the youth. pic.twitter.com/rv1pasJOGa
— PMO India (@PMOIndia) October 28, 2023
Today, India's trajectory and the pace of its progress are generating new employment prospects across all sectors. pic.twitter.com/nCkd9hWxmq
— PMO India (@PMOIndia) October 28, 2023
Today, India is equipping its youth with skills and education to harness emerging opportunities. pic.twitter.com/HKthTqqqRp
— PMO India (@PMOIndia) October 28, 2023