Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகளில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 71,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த விழாவையொட்டி திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், வேலை நியமனம் பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நல்வாழ்த்து தெரிவித்தார். குஜராத் போன்ற மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாக்கள் பற்றியும், அசாமில் நடைபெற உள்ள விழா பற்றியும் அவர் குறிப்பிட்டார். மத்தியிலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் நடைபெறும் இந்த விழாக்கள் இளைஞர்கள் குறித்த அரசின் உறுதிப்பாட்டைக்  காட்டுகின்றன.

கடந்த 9 ஆண்டுகளில் பணி நியமன நடவடிக்கைகளை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பாகுபாடின்றியும் மேற்கொள்ள அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். பணி நியமன நடைமுறைகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நினைவுகூர்ந்த பிரதமர், புதிய வேலை நியமனத்திற்கு பணியாளர் தேர்வு வாரியம் சுமார் 15-18 மாதங்களை எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது புதிய பணி நியமனங்கள் 6-8 மாதங்களே எடுத்துக் கொள்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி தபால் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பணி நியமன நடைமுறை மிகவும் சிரமமானதாக இருந்ததை கோடிட்டுக் காட்டிய அவர், தற்போது ஆவணங்கள் சுயசரிபார்ப்பு அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து இணையதளத்தின் மூலம் மனுக்கள் அளிப்பதால் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார். சி மற்றும் டி பிரிவுக்கான நேர்காணல்கள் நிறுத்தப்பட்டு விட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒட்டு மொத்த நடைமுறையில் சார்புத்தன்மை நீக்கப்பட்டது இதன் மிகப் பெரிய பயனாகும் என்று அவர் கூறினார்.

9 ஆண்டுகளுக்கு முன் இன்றைய தேதியான மே 16 முக்கியமான நாளாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்நாளில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நாளின் பேரார்வத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற உணர்வுடன் முன்னேறிய இந்தியாவுக்காக பணி செய்வது தொடங்கியது என்றார். இந்நாள் சிக்கிம் உருவான தினமுமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த 9 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை மனதில் கொண்டு அரசின் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். நவீன அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கான ஊரகப் பணிகள் அல்லது விரிவாக்கம் என எதுவாகயிருப்பினும் மத்திய அரசின் கொள்கை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் மூலதனச் செலவு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அரசு சுமார் 35 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட மூலதனச் செலவுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையால் புதிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள், புதிய ரயில் தடங்கள், பாலங்கள் போன்ற நவீன அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

சுதந்திர இந்திய வரலாற்றின் தற்போதைய வேகமும், அளவும் முன்னெப்போதும் இல்லாதது என்று பிரதமர் கூறினார். முந்தைய 70 ஆண்டுகளில் 20,000 கிலோ மீட்டர் என்பதோடு ஒப்பிடுகையில், கடந்த 9 ஆண்டுகளில்  40,000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நாட்டின் மெட்ரோ ரயில் வலைப்பின்னல் பற்றி குறிப்பிட்ட அவர், 2014-க்கு முன் சுமார் 600 மீட்டர் தூரம் மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவாக இருந்த கிராமப்புற சாலைகளின் நீளம், தற்போது 7.25 லட்சம் கிலோ மீட்டர் தொலைவாக மாறியிருப்பதாக அவர் கூறினார். இதேபோன்று கடந்த ஒன்பது ஆண்டுகளில்,  4 கோடி வீடுகள் கட்டப்பட்டு இருப்பதுடன், அதற்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பை வழங்க ஏதுவாக கிராமங்களில் 5 லட்சம் பொதுச்சேவை மைங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 30 லட்சம் பஞ்சாயத்து அலுவலகங்கள் கிராமங்களில் கட்டப்பட்டதுடன், ஒன்பது கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதையும் நினைவு கூர்ந்தார். இவற்றின் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். அந்நிய முதலீடாக இருந்தாலும் சரி, இந்தியாவில் ஏற்றுமதியாக இருந்தாலும் சரி, அனைத்து துறைகளிலும், எண்ணிலடங்கா வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும், குறிப்பாக நம்நாட்டு இளைஞர்கள் விரும்பும் புதிய துறைகளை உருவாக்க துணை நின்றிருப்பதாகவும் தெரிவித்தார். புதிய துறைகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு ஸ்டார்ட்-அப் முயற்சியின் வெற்றியே சாட்சி என்றும் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நூறாக இருந்த ஸ்டார்ட் –அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பதுடன், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்க்கையை எளிமையானதாக மாற்றியிருப்பதாகவும், குறிப்பாக, நகரங்களில் செல்போன் ஆப்-பை அடிப்படையாகக் கொண்ட கார் சேவைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும் கூறினார். அதேபோன்று, இணையதளம் வாயிலாக விநியோக அமைப்பு அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பதுடன், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் இந்த இணையதள வாயிலான விநியோகம் பெரும் பலனை அளித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம்  கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம், குடிமக்கள் புதிய தொழில் தொடங்க வழிவகை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த முத்ரா கடன்களை பெற்றிருப்பதன் மூலம், 9 கோடி மக்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக மாறியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா என்ற பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு என்று கூறிய பிரதமர், ஊக்கத்தொகையுடன் கூடிய உற்பத்தித் திட்டத்தின் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தித் துறைக்கு மத்திய அரசு நிதியுதவி செய்திருப்பதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள், புதிய வேகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மத்திய தொழில்நுட்ப நிறுவனமும்,  ஒரு மத்திய மேலாண்மை நிறுவனமும், உருவாக்கப்பட்டு இருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 720 –ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1,100-ஆக அதிகரித்திருப்பதாகக் கூறினார். அதேபோல், கடந்த 70 ஆண்டுகளில் வெறும் 7- எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதியதாக 15 எய்ம்ஸ்  மருத்துவமனைகளை மத்திய அரசு கட்டியிருப்பதையும் குறிப்பிட்டார். இதேபோல்,  400-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 700-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், எம்பிஎஸ் மற்றும் எம்டி மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வளர்ச்சியில் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சிக் கூடங்களின்  பங்கையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். “கடந்த 9 ஆண்டுகளில், ஒவ்வொரு நாளும் ஒரு ஐடிஐ நிறுவப்பட்டுள்ளது”என்றார் அவர்  . நாட்டின் தேவைக்கேற்ப 15 ஆயிரம் ஐடிஐக்களில் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு வருவதாகவும், பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் 1.25 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை  (இபிஎப்ஓ) உதாரணத்துக்கு  எடுத்துக்காட்டிய பிரதமர், 2018-19க்குப் பிறகு, இபிஎப்ஓ நிகர ஊதியத்தின்படி 4.5 கோடி புதிய அமைப்பு ரீதியிலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, இது அமைப்பு சார் வேலைகளில் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது என்றார். சுயதொழில் வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

உலக அளவில் இந்தியாவின் தொழில் மற்றும் முதலீட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் நேர்மறையான வரவேற்பு  இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். வால்மார்ட் தலைமை நிர்வாக அதிகாரியுடனான தமது சமீபத்திய சந்திப்பை நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டிலிருந்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மீது தலைமை நிர்வாக அதிகாரியின் நம்பிக்கையை சுட்டிக்காட்டினார். சரக்கு போக்குவரத்து, விநியோக சங்கிலி ஆகிய துறைகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று கூறிய அவர்,   இந்தியாவிலிருந்து ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வதை இலக்காகக் கொண்ட சிஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரியுடனான சந்திப்பையும், இந்தியாவில் மொபைல் உற்பத்தித் துறையில் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சந்திப்பையும் அவர் நினைவு கூர்ந்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான முதலீடுகளை தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.  அடுத்த வாரத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான தமது திட்டமிடப்பட்ட சந்திப்புகள் குறித்தும் தெரிவித்த பிரதமர், அவர்கள் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறினார். இதுபோன்ற முயற்சிகள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

 அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய நாட்டில் நடைபெறும் வளர்ச்சிக்கான இந்த மகாயாகத்தில் நியமன ஆணைகளைப் பெற்றுள்ள புதிய பணியாளர்களின்  பங்களிப்பை சுட்டிக்காட்டி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பணியமர்த்தப்பட்டவர்களைப் பிரதமர் வலியுறுத்தியதோடு, ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்காக அரசு ஏற்படுத்தியுள்ள  ஆன்லைன் கற்றல் தளமான ஐகாட்  கர்மயோகி தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

பின்னணி

வேலைவாய்ப்பு  மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடத்தப்பட்டது. அங்கு மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் துறைகளில்  ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், வணிக எழுத்தர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவி பதிவாளர், உதவி பேராசிரியர் போன்ற பல்வேறு பணிகளில் சேருவார்கள்.

வேலைவாய்ப்பு மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். இது  வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு ஊக்கியாக செயல்படுவதுடன், இளைஞர்களுக்கு  அதிகாரம் அளித்து,  தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு கர்மயோகி பரம்ப் என்ற ஆன்லைன் நோக்குநிலை பாடத்தின் மூலம் தங்களைப் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

*****

(Release ID: 1924401)