இந்திய மேலாண்மை கல்வி நிறுவன (ஐ.ஐ.எம்.) மசோதா 2017-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ஐ.ஐ.எம் – கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படும். இதனால், ஐ.ஐ.எம் – களால் தங்களது மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியும்.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
1. ஐ.ஐ.எம் – களால் தங்களது மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியும்.
2. கல்வி நிறுவனங்களுக்கு போதிய நம்பகத்தன்மையுடன் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
3. இந்த கல்வி நிறுவனங்களின் மேலாண்மை, வாரியத்தால் நிர்வகிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் தலைவர், இயக்குநர் ஆகியோர் வாரியத்தால் தேர்வுசெய்யப்படுவார்கள்.
4. வாரியத்தில் முன்னாள் மாணவர்கள், வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்பது, இந்த மசோதாவின் மற்ற முக்கிய அம்சங்கள்.
5. வாரியத்தில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின உறுப்பினர்களையும் சேர்க்க மசோதாவின் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுதந்திரமான அமைப்புகள் மூலம் மறுஆய்வு செய்யவும், அதன் முடிவுகளை பொதுமக்கள் பார்வையில் வைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
7. கல்வி நிறுவனங்களின் ஆண்டறிக்கை, நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். இந்தக் கணக்குகளை தலைமைத் தணிக்கை அதிகாரி (CAG) தணிக்கை செய்வார்.
8. ஐ.ஐ.எம் – முக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பின்னணி
இந்திய மேலாண் கல்வி நிறுவனங்கள் என்பவை, நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்கள். இவை மேலாண்மை பிரிவில் சர்வதேச தரத்திலான கல்வி மற்றும் பயிற்சியை அளிக்கின்றன. ஐ.ஐ.எம் -கள், உலகத்தரமான மேலாண் கல்வி நிறுவனங்களாகவும், உயர்தர மையங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை நாட்டுக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளன. அனைத்து ஐ.ஐ.எம் – களும் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தனித்தனியான தன்னாட்சி அமைப்புகள்.
சங்கங்களாக இருப்பதால், ஐ.ஐ.எம் – களுக்கு பட்டங்களை வழங்க அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே, மேலாண்மைப் பாடங்களில் முதுநிலை பட்டயம் மற்றும் சிறப்புப் பாடத் திட்டங்கள் (Fellow Programme) வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள், எம்.பி.ஏ – க்கள் மற்றும் பி.எச்.டி – களுக்கு இணையாக கருதப்பட்டாலும், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக ஆய்வாளர் படிப்புகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.