Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரையாற்றினார்


புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞரும், தங்களது சொந்த ஆளுமை மற்றும் அடையாளத்துடன் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். எனினும், ஒரு மாத காலத்தில், புதிய நட்புறவு ஏற்படும் என்றும், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவில் பின்பற்றப்படும் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை ஒவ்வொரு இளைஞருக்கும் தேசிய மாணவர் படை முகாம் கற்பிப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டுக்காக சில நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரையும் அவர்கள் ஊக்குவிப்பதாக பிரதமர் கூறினார்.

தேசிய மாணவர் படை முகாம்களில் கற்றுக் கொள்ளும் இந்த உணர்வு, அவர்களது வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். தேசிய மாணவர் படை என்பது சீருடையோ அல்லது ஒரே மாதிரியாக இருப்பதோ இல்லை என்றும், இது ஒற்றுமை குறித்தது என்றும் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். தேசிய மாணவர் படை மூலம், இலக்கு அடிப்படையில் பணியாற்றும் குழுவாக நாம் ஊக்குவிக்கப்பட்டு, மற்றவர்களை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய மாணவர் படையானது, அற்புதமான 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்த பிரதமர், பல்வேறு மக்களுக்கு இலக்கு நோக்கிய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். நாம் அடைந்த சாதனைகளை இன்று கொண்டாடுவதுடன், தேசிய மாணவர் படை அனுபவங்களை வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக எவ்வாறு இருக்கச் செய்யலாம் என்று சிந்தித்து வருவதாகவும் திரு. நரேந்திர மோடி கூறினார். தேசிய மாணவர் படை 75 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ள அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள இந்திய இளைஞர்கள், ஊழலை ஏற்றுக் கொள்ள மறுப்பதை பிரதமர் குறிப்பிட்டார். ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் நின்றுவிடாது என்றும் அவர் தெரிவித்தார். இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

பீம் செயலி மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்குமாறு தேசிய மாணவர் படையினருக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர், மற்றவர்களையும் இந்தத் தளத்தில் இணைய ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான நடவடிக்கை என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்கள் சிலவற்றை முடிவுசெய்துவிட்டால், அனைத்துமே சாத்தியம் தான் என்று பிரதமர் மேலும் கூறினார்.

தொடக்கத்தில், செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களுக்கு எதுவும் நடக்காது என்று பொதுமக்கள் நம்பிவந்ததாக பிரதமர் கூறினார். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டதாக அவர் கூறினார். முதலமைச்சர்களாக பதவிவகித்தவர்கள் கூட, ஊழலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

ஆதார் குறித்துப் பேசிய பிரதமர், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மாபெரும் பலத்தை அளித்துள்ளதாகக் கூறினார். இதற்கு முன்னதாக, தவறானவர்களின் கைகளுக்கு சென்றவை, தற்போது உரிய பயனாளிகளுக்கு செல்வதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

***