Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை போபாலில் ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்


போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை (என் ஐ எம் எச் ஆர்) ஒரு சங்கமாக ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனம் 1860 ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் மத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவீனம் ரூ.179.54 கோடி. இந்த மதிப்பீட்டில் ஒருமுறை செலவினமான ரூ.128.54 கோடியும், ஆண்டுதோறும் ஏற்படும் செலவீனமாக ரூ.51 கோடியும் அடங்கும்.

     இந்த நிறுவனத்திற்கு 3 இணைச் செயலாளர்கள் நிலையிலான பதவிகளை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இவற்றில் ஒரு பதவி இடம் நிறுவனத்தின் இயக்குநர், இதர இரண்டு பதவி இடங்கள் பேராசிரியர்களுக்கானவை.

     என் ஐ எம் எச் ஆர்-ன் முக்கிய நோக்கங்கள் மனநலம் பாதித்த நபர்களுக்கு மறுவாழ்வுச் சேவைகளை வழங்குதல், மனநல மறுவாழ்வுத்துறையில் திறன் மேம்பாடு, மனநல மறுவாழ்வுக் கொள்கை வகுப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் ஆகியன ஆகும்.

    இந்த நிறுவனத்தில் ஒன்பது துறைகள் / மையங்கள் அமைந்திருக்கும். இந்த நிறுவனம் பட்டயம், சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, எம் ஃபில் பட்டம், ஆகியவற்றை வழங்கும் 12 வகை மனநல மறுவாழ்வு பாடங்களை பயிற்றுவிக்கும்.  ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பாட வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை 400-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   இந்த நிறுவனத்தை அமைக்க மத்தியபிரதேச அரசு போபாலில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இந்த இடத்தில் 3 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக இந்த நிறுவனம் உருவாக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் நிறைவடையும். அதே காலத்தில் கட்டடங்கள் அமைக்கப்படும் போது இந்த நிறுவனங்கள் போபாலில் தகுதி உள்ள வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தும். மேலும் வெளி நோயாளிகள் சார்ந்த சேவைகளும் வழங்கப்படும். இதனையடுத்து இந்த நிறுவனம் மனநோய் பாதித்த அனைத்து நபர்களுக்குமான முழுமையான மறுவாழ்வு சேவைகளை வழங்கும். மேலும் பட்டமேற்படிப்பு மற்றும் எம் ஃபில் பாடங்களையும் நடத்தும்.

    என் ஐ எம் எச் ஆர் மனநல மறுவாழ்வுத்துறையில் நாட்டிலேயே முதலாவது நிறுவனமாக இருக்கும். மனநல மறுவாழ்வுத் துறையில் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை பொருத்தவரை இது மீச்சிறப்பு நிறுவனமாக செயல்படும். மனநலம் பாதித்தவர்களின் திறம்பட்ட மறுவாழ்வுக்கான சிறந்த மாதிரிகளை உருவாக்குவதில் அரசுக்கு இந்த நிறுவனம் உதவும்.

——