Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய தலைநகர் தில்லி பிரதேச (அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்போரின் சொத்துரிமைகள் அங்கீகரிப்பு) மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய தலைநகர் தில்லிப் பிரதேச (அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்களின் சொத்துரிமைக்கு அங்கீகாரம் வழங்குதல்) மசோதா 2019-ஐ நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொத்துகளைப் பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தில் சில சலுகைகளை வழங்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதால் இது பயனுள்ளதாக இருக்கும்.

தில்லியில் அரசு நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 40 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மனைப்பிரிவாகவோ அல்லது கட்டடமாகவோ இங்குள்ள சொத்துக்கள் அனைத்தும் பொது அதிகாரம் வழங்கல், உயில், விற்பனை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டதாகும். இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சொத்துக்கள், பதிவு ஆணையங்களால் பதிவு செய்யப்படாததால், இங்கு வசிப்பவர்களுக்கு சட்டப்பூர்வ பத்திர ஆவணங்கள் ஏதுமில்லை. இதனால், இந்த சொத்துகளுக்கு வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ எந்தவித கடன் வசதியையும் அளிப்பதில்லை.

சூரஜ் லேம்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும், ஹரியானா மாநில அரசுக்கும் இடையிலான வழக்கில், உச்சநீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. விற்பனை ஒப்பந்தம், பொது அதிகாரப் பத்திரம் அல்லது உயில் பரிவர்த்தனைகளை மாற்றமாகவோ, விற்பனையாகவோ கருதமுடியாது எனக் கூறியுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் முழுமையான பரிவர்த்தனைகளாகாது என்று கூறியுள்ள நீதிமன்றம், அவை தற்போதுள்ள விற்பனை ஒப்பந்தமாகவே கருதப்படும் என்று தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகப் பொருளாதார நிலையையும், கள நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, பொது அதிகார ஒப்பந்தம், விற்பனை ஒப்பந்தம், உயில், கையகத்துக்கான கடிதம் மற்றும் இதர ஆவணங்களை பணம் செலுத்தியதற்கான ஆதாரமாகக் கொண்டு, அவற்றை அங்கீகரிப்பதுடன், வசிப்பவர்களுக்கு இந்தச் சொத்துக்களுக்கான உரிமையை வழங்க வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், தற்போதுள்ள கட்டமைப்புகள், குடிமை மற்றும் சமூக வசதிகளை முன்னேற்றி, மேம்படுத்தி, அங்குள்ளவர்கள் தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு வகை செய்ய முடியும்.

***