Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கனிமவள ஆய்தல் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தேசிய கனிமவள தேடுதல் ஆய்வு கொள்கைக்கு (NMEP) ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் துறையின் பங்களிப்புடன் நாட்டில் கனிமவள ஆய்வையும் துரிதப்படுத்துவதுதான் NMEPயின் அடிப்படை நோக்கமாகும். நாடு முழுவதும் இருக்கும் கனிமவளத்தை சரியான முறையில் ஆய்வுசெய்து தேடுவதன் மூலம் நாட்டின் கனிமவளத்தை உள்ளது உள்ளபடியே கண்டறிந்து இந்திய பொருளாதாரத்தில் கனிமவளத்துறையின் பங்களிப்பை பெருக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.

பொதுத் துறை, பொது-தனியார் கூட்டு ஆராய்ச்சி, புவியின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் கனிமங்களை வெளிக்கொணர எடுக்கப்படும் சிறப்பு செயல்பாடுகள், நாட்டின் ஏரோ ஜியோஃபிசிகல் ஆய்வு மற்றும் பிரத்யேக ஜியோசைன்டிஃபிக் தரவுதளம் அமைத்தல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் உலகத்தரத்திலான ஜியோசைன்டிஃபிக் தரவுகளை பயன்படுத்துவதையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.

நாடு முழுதும் தேடுதல் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வகையில் NMEP சில முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது.

i. அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட தேடுதல் ஆய்வுப் பகுதிகளை தனியார் துறைக்கு சுரங்க அமைச்சகம் ஏலத்திற்கு விடும். ஒருவேளை தேடுதல் ஆய்வின் முடிவில் ஏலம் விடத்தக்க வகையில் வளங்கள் கண்டறியப்பட்டால் அதன்மூலம் கிடைக்கும் நிதி பகிர்ந்துகொள்ளப்படும்.

ii. ஒருவேளை தேடுதல் ஆய்வு செய்யும் நிறுவனத்துக்கு ஏலம் விடத்தக்க வகையில் வளங்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஆன செலவு குறைந்தபட்ச கணக்கில் திருப்பியளிக்கப்படும்,

iii. அடிப்படை ஜியோசைன்டிஃபிக் தரவுகளை பொதுப்பார்வைக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் உருவாக்கும்.

iv. மறைவாக இருக்கும் கனிமவளங்களை கண்டறிய உதவும் நவீன தரவுகளை பெறும் வகையில் தேசிய ஏரோஜியோஃபிசிகல் நிகழ்ச்சிகளை அரசே நடத்தும்.

v. தேசிய ஜியோசைண்டிஃபிக் தரவு பாதுகாப்பகம் அமைத்து, அதில் பேஸ்லைன் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், கனிமவள கையிருப்பாளர்கள் ஆகியோரால் வெளியிடப்பட்ட கனிம தேடுதல் ஆய்வு தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

vi. நேஷனல் சென்டர் ஃபார் மினரல் டார்கெட்டிங் என்ற பெயரில் லாப நோக்கத்தோடு செயல்படாத நிறுவனம் ஒன்றை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளோடு இணைந்து ஆரம்பிப்பதன் மூலம் நாட்டில் கனிமவள தேடுதலுக்கு தேவைப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசு உத்தேசித்துள்ளது.

vii. லாபத்தை பங்கிட்டுக் கொள்ளும் திட்டங்களின் மூலம் தனியார் முதலீட்டை கனிமவள தேடுதல் பணிகளை நோக்கி வரவழைக்க வழிவகை செய்யப்படும்.

viii. ஆஸ்திரேலியாவின் அன்கவர் திட்டத்தையொட்டி, தேசிய ஜியோஃபிசிகல் ஆராய்ச்சி நிறுவனம், ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள NCMT மற்றும் ஜியோசைன்ஸ் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து மறைவாகவும், அடியாழத்தில் புதைந்தும் இருக்கு கனிமவளங்களை கண்டறிய தனிப்பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதிலும் அரசு கவனம் கொண்டுள்ளது.

NMEPயின் பரிந்துரைகளை நிறைவேற்ற, ஆரம்பகட்ட செலவிற்கு ஐந்தாண்டுகளுக்கு ரூ.2116கோடிகள் ஜியோலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் ஆண்டு வரவு செலவு நிதி ஒதுக்கீட்டுக்கு மேல் தேவைப்படுகிறது. NMEPயினால் நாட்டின் ஒட்டுமொத்த கனிமவளத்துறையும் பயன்பெறும். .

NMEPயின் தாக்கம்:
1) பொது மற்றும் தனியார் தேடுதல் ஆய்வு நிறுவனங்களுக்கு பயன் தரும் வகையில் ஜியோசைண்டிஃபிக் தரவுகள் அத்தனையும் இலவசமாக பொது பார்வைக்கு வைக்கப்படும்.

2) பொது-தனியார் கூட்டு தேடுதல் ஆய்வுக்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெறுவதற்காக அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகளுடன் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3) மறைவாகவும், அடி ஆழத்தில் புதைந்திருக்கும் கனிம வளங்களை கண்டறியும் பொருட்டு அதற்கென பிரத்யேகமாக ஒரு திட்டத்தை துவக்க இருக்கிறது. இந்திய ஜியோலாஜிகல் கவர் மற்றும் இந்தியாவின் லித்தோஸ்பியர் கட்டுமானத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், நான்கு பரிமாண ஜியோடைனமிக் மற்றும் மெட்டலோஜினிக் எவல்யூஷன், டிஸ்டல் படிமங்களை கண்டறிந்து வெளிப்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி இருக்கும்.

4) தேசிய ஏரோஜியோஃபிசிகல் திட்டத்தை துவக்குவதன் மூலம் குறைந்த உயரத்தில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் வரைபடமெடுக்கும் பணியை செய்து, அதன்மூலம் மறைவாகவும், அடியாழத்திலும் இருக்கும் கனிமவளங்கள் கண்டறியப்படும்.

5) அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட தேடுதல் ஆய்வுப் பகுதிகளை தனியார் துறைக்கு சுரங்க அமைச்சகம் ஏலத்திற்கு விடும். ஒருவேளை தேடுதல் ஆய்வின் முடிவில் ஏலம் விடத்தக்க வகையில் வளங்கள் கண்டறியப்பட்டால் அதன்மூலம் கிடைக்கும் நிதி பகிர்ந்துகொள்ளப்படும்.

6) பகுதிசார்ந்த மற்றும் விரிவான தேடுதல் ஆய்வுப்பணிகளுக்கு ஆகும் செலவுகளை முறைப்படுத்துவதுடன், இந்த செலவுத்தொகை சீரான கால இடைவெளியில் தேவைக்கும், முக்கியத்துவத்திற்கும் ஏற்ப மறுபரிசீலனை செய்யப்படும்.

பின்னணி:

கனிமவளத் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில் 100% FDI அனுமதித்துள்ளது. எனினும் இம்முயற்சிகள் குறைந்த அளவிலேயே வெற்றியை ஈட்டித்தந்துள்ளது. கனிமவளத்துறை கடந்த சில ஆண்டுகளாக பலவகைகளில் விரிவுபெற்றுள்ளது என்பதால் புதிய தேவைகளும் உருவாகியுள்ளது. எனவே நாடு முழுதும் கனிமவள தேடுதல் மற்றும் ஆய்வுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு தனது கனிமவள கொள்கைகளையும், திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2015ல் MMDR சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இதை உறுதி செய்கிறது. சுரங்கம் தோண்டும் குத்தகையும், உரிமை மற்றும் குத்தகையும் இனி ஏலம் விடுவதன் மூலமே வழங்கப்படும் என்பது இந்த மாற்றத்தின் முக்கிய அம்சம். இதன்மூலம் கனிமவளத்தை ஒதுக்கீடு செய்யும் முறைகளில் எளிமையும், வேகமும், வெளிப்படைத்தன்மையும் ஏற்படும். இந்த மூலக்கூறுகளை எல்லாம் நிறைவேற்றும் வகையிலும், சட்டத்திற்கு உட்பட்டவகையில் புதிய செயல்முறைகள், நோக்கங்கள், திட்டங்கள் மற்றும் தேடுதல் ஆய்வுகளை உருவாக்கும் வகையிலும் NMEP வடிவமைக்கப்பட்டுள்ளது.

******