உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்ற தேசிய கங்கை கவுன்சிலின் முதலாவது கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கங்கை மற்றும் அதன் உப நதிகள் உள்ளிட்ட கங்கை நதி படுகையை சீரமைப்பது மற்றும் மாசுக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்தக் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனைத்துத் துறைகள் மற்றும் உரிய மத்திய அமைச்சகங்களில் ‘கங்கையை மையப்படுத்திய’ அணுகுமுறையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவது இந்த முதல் கூட்டத்தின் நோக்கமாகும்.
இன்றைய கூட்டத்தில் ஜல்சக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு, சுகாதாரம், நகர்ப்புற விவகாரங்கள், மின்சாரம், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளின் மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பீகாரின் துணை முதலமைச்சர், நித்தி ஆயோகின் துணைத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்க அரசு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதாலும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதாலும், அந்த மாநில அரசும் பங்கேற்கவில்லை.
பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், ‘தூய்மை’, ‘இடைவிடா செயல்பாடு’, ‘தெளிவான தன்மை’ ஆகியவற்றில் கவனம் கொண்டு கங்கை நதி தூய்மையின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்தார்.
இந்த துணைக் கண்டத்தில் நமது கங்கை நதி மிகவும் புனிதமானது என்றும், அதனைப் புத்தாக்கம் செய்வது, கூட்டாட்சி முறைக்கு ஒளிரும் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கங்கையைப் புத்தாக்கம் செய்வது, நாட்டுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சவாலாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கங்கையின் மாசுக்குறைப்பு, பாதுகாப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசின் பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டதால், நமாமி கங்கை திட்டத்தை 2014-ல் அரசு மேற்கொண்டதில் இருந்து, ஏராளமான பணிகள் நடைபெற்றுள்ளன என்று அவர் கூறினார். மேலும் காகித ஆலைகளால் உருவான கழிவுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதும், தோல்பதன தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் மாசு குறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், இன்னும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது என்றார்.
கங்கை நதியில் போதிய அளவும், தேக்கம் இல்லாமலும் தண்ணீர் ஓடுவதை உறுதி செய்ய கங்கை நதி பாய்கின்ற ஐந்து மாநிலங்களுக்கு 2015-2020 காலத்திற்கு முதன்முறையில் மத்திய அரசு ரூ.20,000 கோடி தொகையை உத்தரவாதம் அளித்தது. இதுவரை புதிதாகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானத்திற்காக ரூ.7,700 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தூய்மை கங்கை திட்டத்தின் கட்டமைப்பை மேம்படுத்த பொதுமக்களிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், தேசிய நதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் இருந்து சிறந்த நடைமுறைகள் பரவலாவதன் மூலம் மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். திட்டங்களின் அமலாக்கத்தை விரைவுப்படுத்த சிறப்பான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கங்கை குழுக்களின் திறனில் மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றார்.
தனிநபர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், பெரும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பங்களிப்பைப் பெறுவதற்கு தூய்மை கங்கை நிதியம் என்பதை அரசு உருவாக்கியுள்ளது. 2014-ல் இருந்து பெறப்பட்ட அன்பளிப்புகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்துள்ள நிதி மற்றும் சியோல் அமைதிப்பரிசுக்கான தொகை ஆகியவற்றுடன் மாண்புமிகு பிரதமர் தனிப்பட்ட முறையில் இந்த நிதியத்திற்கு ரூ.16.53 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கங்கை தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, நீடித்த வளர்ச்சிக்கான மாதிரியை உருவாக்க ‘நமாமி கங்கா’ என்பதை ‘அர்த் கங்கா’ திட்டமாக உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக குறைந்த செலவில் பண்ணை அமைத்தல், பழ மரக்கன்றுகள் நடுதல், கங்கை நதிக்கரைகளில் நாற்றங்கால் கட்டுதல் போன்ற நீடித்த வேளாண் நடைமுறைகளில் விவசாயிகளை ஈடுபடுத்த வேண்டும். இந்தத் திட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளோடு நீர் விளையாட்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதும், முகாம்களுக்கான இடங்களை ஏற்படுத்துவதும், மிதிவண்டி ஓட்டுதல், நடத்தல் ஆகியவற்றுக்கான பாதைகளை அமைத்தலும், நதிப்படுகை பகுதியில் அதிகபட்ச சுற்றுலா வளத்தை உருவாக்க உதவும். கங்கைநதி சமய நோக்கத்திற்காகவும், அதே சமயம் சாகச சுற்றுலாவுக்காகவும் பயன்படும். சூழல் சுற்றுலாவை ஊக்கப்படுத்துதல், கங்கை உயிரினங்கள் பாதுகாப்பு, சாகச சுற்றுலா ஆகியவற்றால் கிடைக்கும் வருவாய் கங்கை தூய்மை திட்டத்திற்கு நீடித்த வருவாயை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
நமாமி கங்கா, அர்த் கங்கா ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் செயல்பாடுகளை, பணி முன்னேற்றங்களைக் கண்காணிக்க கிராம மற்றும் நகர அமைப்புகளிலிருந்து வரும் தகவல்களை நித்தி ஆயோக் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் தினந்தோறும் காணும் வகையில் டிஜிட்டல் டேஷ்போர்ட் அமைக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். முன்னேற விரும்பும் மாவட்டங்கள் போல கங்கை நதியோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நமாமி கங்கா திட்டத்திற்கான முயற்சிகளைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்பாக விடுதலைப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாதுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர், சந்திரசேகர் ஆஸாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நமாமி கங்கா, தலையீடுகள் மற்றும் திட்டங்கள் பற்றிய கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், அடல் காட்டுக்குப் பயணம் செய்த பிரதமர், சிசமாவ் நலாவில் தூய்மைப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் பார்வையிட்டார்.
Today’s meeting of the National Ganga Council was an extremely fruitful one.
— Narendra Modi (@narendramodi) December 14, 2019
CMs, Ministers, top officials from various states attended and enriched proceedings with their insights. Our ‘Ganga-centric’ approach is ensuring positive results.https://t.co/WWCqatBPSg pic.twitter.com/yxnSQQbaBe