Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தை 2017-18 முதல் 2019-2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தை (Rastriya Yuva Sashaktikaran Karyakram Scheme), 2017-18 முதல் 2019-2020 வரையான காலகட்டத்துக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது செலவினங்களுக்கான நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ரூ.1,160 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தின்கீழ், துணைத் திட்டங்களாக 8 திட்டங்கள் சேர்க்கப்பட்டன. இது திட்டங்களுக்கு இடையே சிறந்த இணைப்பை ஏற்படுத்த உதவியது. இதன்மூலம், அதன் செயல்பாடுகள் வலுப்பெற்று, ஏற்கனவே உள்ள வளங்களின் மூலம், சிறந்த பலன்களைப் பெற முடிந்தது. 2014-ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் கொள்கையில், இளைஞர் என்ற வார்த்தைக்கு வரையறுத்தபடி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக 15 முதல் 29 வயது வரையான இளைஞர்கள் உள்ளனர். வளர்இளம் பருவத்தினருக்காக திட்டங்கள் வகுக்கப்படும்போது, அதன் வயது வரம்பு 10 முதல் 19 வயது வரை உள்ளது.

தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டத்தின் துணை திட்டங்களாக, கீழ்க்காணும் 8 திட்டங்கள் உள்ளன:

  1. நேரு இளைஞர் மைய அமைப்பு (Nehru Yuva Kendra Sangathan -NYKS);
  2. தேசிய இளையோர் படை (National Youth Corps – NYC);
  3. இளையோர் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (National Programme for Youth & Adolescent Development  – NPYAD);
  4. சர்வதேச ஒத்துழைப்பு;
  5. இளையோர் விடுதிகள்;
  6. சாரணர் மற்றும் வழிகாட்டு அமைப்புகளுக்கான நிதியுதவி;
  7. தேசிய ஒழுங்குமுறை திட்டம் (National Discipline Scheme – NDS); மற்றும்
  8. தேசிய இளம் தலைவர்கள் திட்டம்.

பின்னணி:

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் திட்டமான தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டமானது, 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. இளைஞர்களின் தனிஆளுமை மற்றும் தலைமைப்பண்புகளை வளர்ப்பது மற்றும் அவர்களை தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையில், இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

****