Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


தெலுங்கானா மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள்!

மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நிதின் ‌கட்கரி அவர்களே, திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, திரு சஞ்சய் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே! தெலுங்கானாவின் 9-வது நிறுவன தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. தெலுங்கு மக்களின் திறன், இந்தியாவின் வலிமையை எப்போதுமே மேம்படுத்தி வந்துள்ளது. அதனால்தான் உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ச்சி பெறுவதில் தெலுங்கானா மாநிலம் முக்கிய பங்காற்றியுள்ளது. இங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

நண்பர்களே,

இன்றைய புதிய இந்தியா, இளைமையான இந்தியாவாகவும், முழு ஆற்றல் படைத்த இந்தியாவாகவும் திகழ்கிறது. 21-வது நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின்போது வெற்றிகரமாக இந்த பொற்காலத்தில் நாம் நுழைந்துள்ளோம். வேகமான வளர்ச்சியின் வாய்ப்புகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும். இத்தகைய வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் இணைப்பில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் இணைப்பு மற்றும் உற்பத்தி சம்பந்தமான ரூ. 6000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே,

பழைய உள்கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வேகமான வளர்ச்சி சாத்தியமாகாது. எனவே அனைத்து வகையான உள்கட்டமைப்பு பணிகளும் மிகப்பெரிய அளவில் இதுவரை இல்லாத வேகத்தில் நடைபெறுகின்றன. தெலுங்கானாவில் இன்று ஏற்படுத்தப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், மாநிலத்தின் தொழில்துறை மற்றும் சுற்றுலாவிற்கு பேருதவியாக இருக்கும். தெலுங்கானாவில் ஏராளமான பாரம்பரிய மையங்களும், ஆன்மீக தலங்களும் உள்ளன. இத்தகைய திட்டங்களால் இது போன்ற இடங்களுக்கு பயணிப்பது மேலும் வசதியாக இருக்கும். இங்கு செயல்படும் வேளாண் சம்பந்தமான தொழில்துறைகளும், கரீம்நகரின் கிரானைட் தொழில்துறையும் மத்திய அரசின் முயற்சிகளால் பெருமளவு பயனடையும். இது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, சுய வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

உற்பத்தி துறை நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் மற்றொரு முக்கிய ஊடகமாக செயல்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டம் மற்றொரு சிறந்த ஊடகம். நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உற்பத்தியில், இந்திய ரயில்வே புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அனைவரின் முயற்சியோடு அனைவரின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு தெலுங்கானாவை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

AD/RB/DL