தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் ரூ.9,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக, பிரதமர் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலையை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று தொடங்கப்பட்ட திட்டங்களும், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களும் விவசாயத்தையும், , விவசாயத்துறையையும் மேம்படுத்தும் என்றார். ஒருபறும் கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில் உலகம் முழுவதும் போராடி வந்த நிலையில், மறுபுறம் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது எல்லாவற்றுக்கும் மத்தியில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருவதாக நிபுணர்கள் கணித்து வருகின்றனர் என பிரதமர் கூறினார். 30 ஆண்டுகளுக்கு முன்பாக, 90 களில் இருந்ததைப்போன்ற வளர்ச்சிக்கு இணையாக வரும் ஆண்டுகளில் வளர்ச்சி இருக்கும் என்று நிபுணர்கள் கூறிவதாக பிரதமர் தெரிவித்தார். ‘’ இந்தக்கணிப்புக்கு முக்கிய காரணம் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றமாகும். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா தனது செயல்முறை அணுகுமுறையை மாற்றியுள்ளது. இந்த 8 ஆண்டுகளில் அரசின் சிந்தனை மற்றும் அணுகுமுறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது’’ என்று அவர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு, அரசு நடைமுறைகள், எளிதாக தொழில் புரிதல் ஆகியவற்றில் இதனை கண்கூடாக பார்க்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான அபிலாஷைகளுடன் ஒரு புதிய இந்தியா உலகிற்கு தன்னை முன்னிலைப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். வளர்ச்சி என்பது வருடத்தில் 365 நாட்களும் நாட்டில் இயங்கும் தொடர்ச்சியான பணியாகும் என்று பிரதமர் கூறினார். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ராமகுண்டம் திட்டம் இதற்கு தெளிவான உதாரணம் என்றும் பிரதமர் கூறினார். ராமகுண்டம் திட்டத்திற்கான அடிக்கல் 2016 ஆகஸ்ட் 7 அன்று பிரதமரால் நாட்டப்பட்டது.
லட்சிய இலக்குகளை அடைவதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் இந்தியா முன்னேற முடியும் என்று கூறிய பிரதமர், “லட்சிய நோக்கத்துடன் நாம் புதிய வழிமுறைகளைக் கொண்டு வருவதுடன், புதிய வசதிகளை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மத்திய அரசின் நேர்மையான முயற்சிகளுக்கு உரத் துறை சான்றாகும் என்று மோடி கூறினார். உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்த காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், ராமகுண்டம் ஆலை உள்ளிட்ட காலாவதியான தொழில்நுட்பங்களால் முன்பு அமைக்கப்பட்ட பல உர ஆலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா, விவசாயிகளுக்குச் சென்றடையாமல் வேறு நோக்கங்களுக்காக கறுப்புச் சந்தைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உரம் கிடைப்பதை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
• யூரியாவின் மீது 100% வேம்பு பூச்சு.
• மூடப்பட்டு கிடக்கும் 5 பெரிய ஆலைகள் திறக்கப்பட்டு, 60 லட்சம் டன்களுக்கும் அதிகமான யூரியா உற்பத்தி செய்யப்படும்.
• நானோ யூரியாவை பயன்படுத்துவதற்கு ஊக்கமளித்தல்
• இந்தியா முழுவதற்குமான ஒரே அடையாளம் ‘பாரத் பிராண்ட்’
• உரங்களின் விலையை மலிவாக வைத்திருக்க கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ. 9.5 லட்சம் கோடி செலவிடப்பட்டது
• இந்த ஆண்டு செலவு ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாகும்.
• யூரியா மூட்டையின் சர்வதேச விலை ரூ. 2000; விவசாயிகளுக்கு ரூ. 270க்குக் கிடைக்கிறது.
• ஒவ்வொரு டிஏபி உர மூட்டைக்கும் ரூ. 2500 மானியம் வழங்கப்படுகிறது.
• உரப் பயன்பாடு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள மண் ஆரோக்கிய அட்டை
• பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் ரூ. 2.25 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது
2014-க்குப் பிறகு, மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்று, யூரியாவில் 100% வேப்பம்பூச்சை பூசுவதை உறுதிசெய்து, கருப்புச் சந்தையை நிறுத்தியதாகும். மண் சுகாதார அட்டை பிரச்சாரம் விவசாயிகளுக்கு அவர்களது வயல்களின் அதிகபட்ச தேவைகள் பற்றிய அறிவை உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஐந்து பெரிய உர ஆலைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ராமகுண்டம் ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆலைகளும் முழுமையாக செயல்படும்போது, நாட்டிற்கு 60 லட்சம் டன் யூரியா கூடுதலாகக் கிடைக்கும். இதனால் இறக்குமதியில் பெரும் சேமிப்பும், யூரியா கிடைப்பது எளிதாகவும் இருக்கும். ராமகுண்டம் உர ஆலை தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு சேவை செய்யும். இந்த ஆலையை சுற்றியுள்ள பகுதிகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். அப்பகுதியில் உள்ள பொருட்களை இடம்மாற்றி எடுத்துச் செல்வது தொடர்பான வணிகங்களுக்கு உந்துதலை வழங்கும். “மத்திய அரசு முதலீடு செய்யும் ரூ. 6000 கோடி மூலம் தெலுங்கானா இளைஞர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் அளவில் பலன் கிடைக்கும்” என்றார். உரத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் பேசிய பிரதமர், நானோ யூரியா இந்தத் துறையில் ஆழமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றார். தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக உரத்தின் உலகளாவிய விலை உயர்வு விவசாயிகளின் மீது எவ்வகையிலும் சுமத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார். ரூ. 2000 ரூபாய் மதிப்பிலான யூரியா மூட்டை ரூ. 270க்கு விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. அதேபோல், சர்வதேச சந்தையில் ரூ. 4000 விலையுள்ள டிஏபி மூட்டை ஒவ்வொன்றுக்கும் ரூ. 2500 மானியம் வழங்கப்படுகிறது.
“கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகள் மீது உரங்களுக்கான சுமை விழாத வகையில் மத்திய அரசு ஏற்கனவே சுமார் ரூ. 10 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். இந்திய விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் கிடைக்க, மத்திய அரசு, இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ரூ. 2.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு சுமார் ரூ. 2.25 லட்சம் கோடியை மாற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பல தசாப்தங்களாக விவசாயிகளுக்கு கவலை அளிக்கும் வகையில் சந்தையில் கிடைக்கும் ஏராளமான உரங்களின் அடையாளங்கள் குறித்தும் பிரதமர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். “யூரியா இப்போது இந்தியாவில் ஒரே ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும்; அது பாரத் பிராண்ட் என்று அழைக்கப்படுகிறது. அதன் தரம் மற்றும் விலை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக, குறிப்பாக சிறு விவசாயிகளுக்காக, இத்துறையை அரசு எப்படி சீர்திருத்துகிறது என்பதற்கு இது தெளிவான உதாரணம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணைப்பு உள்கட்டமைப்பின் சவாலையும் பிரதமர் இந்த நேரத்தில் சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் நவீன நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், ரயில்வே மற்றும் இணைய நெடுஞ்சாலைகளை வழங்குவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தில் இருந்து இது புதிய ஆற்றலைப் பெறுகிறது. ஒருங்கிணைப்பு மற்றும் தகவலறிந்து செயல்படும் பாணி திட்டங்கள் நீண்ட காலமாக நீடித்துக் கொண்டேயிருக்கும் சாத்தியத்தை இது நீக்குகிறது என்றார். பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தையும், கம்மம் நகரையும் இணைக்கும் ரயில் பாதை 4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு உள்ளூர் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார். அதேபோல், இன்று தொடங்கப்பட்ட மூன்று நெடுஞ்சாலைகள், தொழிற்சாலைப் பகுதிகள், கரும்பு மற்றும் மஞ்சள் விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும்.
நாட்டில் வளர்ச்சிப் பணிகள் வேகமெடுக்கும்போது எழும் வதந்திகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், அரசியல் ஆதாயங்களுக்காக சில சக்திகள் தடைகளை ஏற்படுத்துகின்றன என்றார். தற்போது தெலுங்கானாவில் ‘சிங்கரேணி சுரங்கங்கள் கம்பெனி லிமிடெட் – எஸ்சிசிஎல்’ மற்றும் பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். “எஸ்சிசிஎல்லில் தெலுங்கானா அரசு 51% பங்குகளையும், மத்திய அரசு 49% பங்குகளையும் வைத்திருக்கிறது. எஸ்சிசிஎல்- ஐ தனியார் மயமாக்குவது தொடர்பான எந்த முடிவையும் மத்திய அரசு தானாகவே எடுக்க முடியாது.” எஸ்சிசிஎல்- ஐ தனியார் மயமாக்குவதற்கான எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். நாடு மட்டுமின்றி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இந்த சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகள் இதனால் பெரும் இழப்பை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். நாட்டில் நிலக்கரி தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நிலக்கரி சுரங்கங்கள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் ஏலம் விடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். “கனிமங்கள் பிரித்தெடுக்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காக மாவட்ட கனிம நிதியத்தையும் எங்கள் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த நிதியின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
உரையை நிறைவு செய்த பிரதமர், “அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் நம்பிக்கையோடு, அனைவரின் முயற்சியோடு என்ற மந்திரத்தை பின்பற்றி தெலுங்கானாவை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 70 தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னணி
2016 ஆகஸ்ட் 7 அன்று பிரதமரால் ராமகுண்டம் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்ட ராமகுண்டத்தில் உள்ள உர ஆலையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். உர ஆலையின் மறுமலர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். ராமகுண்டம் ஆலை ஆண்டுக்கு 12.7 எல்எம்டி வேம்பு பூசப்பட்ட உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கும்.
தேசிய உரங்கள் லிமிடெட் (என்எப்எல்), இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (ஈஐஎல்) மற்றும் ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஃப்சிஐஎல்) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ராமகுண்டம் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (ஆர்எஃப்சிஎல்) ஆகியவற்றின் கீழ் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 6300 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் புதிய அம்மோனியா-யூரியா ஆலையை அமைக்கும் பொறுப்பு ஆர்எஃப்சிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்எஃப்சிஎல் ஆலைக்குத் தேவையான எரிவாயு ஜகதீஷ்பூர் – புல்பூர் – ஹால்டியா குழாய்வழிப் பாதை மூலம் வழங்கப்படும்.
தெலுங்கானா மாநிலம் மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், போதுமான அளவில் யூரியா உரம் வழங்குவதை இந்த ஆலை உறுதி செய்யும். உரம் கிடைப்பதை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாலைகள், ரயில்வே, துணைத் தொழில் போன்ற உள்கட்டமைப்புகளின் மேம்பாடு உட்பட பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் இந்த ஆலை அதிகரிக்கும். இது தவிர, தொழிற்சாலைக்கான பல்வேறு பொருட்களை வழங்குவதற்காக உருவாகும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியால் இப்பகுதி மேலும் பயனடையும். ஆர்எஃப்சிஎல் இன் ‘பாரத் யூரியா’, இறக்குமதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், உரங்கள் மற்றும் விரிவாக்கச் சேவைகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலமும், உள்ளூர் விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும்.
சுமார் ரூ. 1000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பத்ராசலம் சாலை – சத்துப்பள்ளி ரயில் பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 765DG இன் மேடக்-சித்திப்பேட்டை-எல்கதுர்த்தி பிரிவு; தேசிய நெடுஞ்சாலை 161BB இன் போதன்-பாசார்-பைன்சா பிரிவு; தேசிய நெடுஞ்சாலை 353C இன் சிரோஞ்சா முதல் மகாதேவ்பூர் பிரிவு என ரூ. 2200 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்;
******
MSV/PKV/VBG/DL
Happy to be in Ramagundam. Addressing a programme at launch of various development works. https://t.co/f86T8uVT1Z
— Narendra Modi (@narendramodi) November 12, 2022
Experts around the world are upbeat about the growth trajectory of Indian economy. pic.twitter.com/Q3nZbR4L4C
— PMO India (@PMOIndia) November 12, 2022
आज विकसित होने की आकांक्षा लिए, आत्मविश्वास से भरा हुआ नया भारत दुनिया के सामने है। pic.twitter.com/k9mXNlTfGa
— PMO India (@PMOIndia) November 12, 2022
For us, development is an ongoing process. pic.twitter.com/cQvtAbrTYu
— PMO India (@PMOIndia) November 12, 2022
Neem coating of urea and Soil Health Cards are initiatives which have greatly benefitted our hardworking farmers. pic.twitter.com/1wONSVZKar
— PMO India (@PMOIndia) November 12, 2022
One Nation, One Fertilizer. pic.twitter.com/05ooWPqtSw
— PMO India (@PMOIndia) November 12, 2022