Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான மின்சாரம், ரயில் மற்றும் சாலைத் துறைகள் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், அடிலாபாத் தெலங்கானாவுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு சாட்சியாக மாறி வருகிறது, ஏனெனில்  ரூ.56,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன அல்லது இன்று அடிக்கல் நாட்டப்படுகின்றன என்றார். எரிசக்தி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சாலை இணைப்பு தொடர்பான பல திட்டங்கள் இதில் அடங்கும்.

மத்திய அரசும், தெலங்கானா மாநிலமும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், தனது மக்களின் கனவுகளை நனவாக்க மாநிலத்திற்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருவதாகக் கூறினார். இன்றும் கூட, 800 மெகாவாட் திறன் கொண்ட என்டிபிசி யூனிட் 2 இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இது தெலங்கானாவின் மின்சார உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். அம்பாரி அடிலாபாத் பிம்பல்குதி ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததையும், அடிலாபாத், பேலா, முலுகு ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இன்றைய நவீன ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தெலுங்கானா மாநிலம் மற்றும் இந்த முழுமையானப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும், பயண நேரத்தைக் குறைக்கும் என்றும், சுற்றுலாவை ஊக்குவித்து எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். சிறந்த பொருளாதாரத்துடன், நாட்டின் மீதான நம்பிக்கை வளர்கிறது என்றும், முதலீடுகள் கிடைப்பதால் மாநிலங்களும் இதன் மூலம் பயனடைகின்றன என்றும் அவர் கூறினார். கடந்த காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள ஒரே பெரிய பொருளாதாரம் இந்தியா என்பதால் இந்தியப் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சி விகிதத்தைச் சுற்றியுள்ள உலகளாவிய எதிர்பார்ப்பை அவர் குறிப்பிட்டார். “இந்த வேகத்துடன், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்” என்று பிரதமர் கூறினார், இது தெலங்கானாவின் பொருளாதாரத்திற்கும் அதிக வளர்ச்சியைக்  கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெலங்கானா போன்ற மாநிலங்கள் முன்பு புறக்கணிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் ஆளுகையின் புதிய வழிகளை எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், “எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது பரமஏழைகளின் வளர்ச்சி, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பின்தங்கியவர்களின் மேம்பாடு” என்று அவர் கூறினார். 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று கூறிய பிரதமர், ஏழைகளுக்கான அரசின் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சாரங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

பின்னணி

நாடு முழுவதும் மின்சாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் என்டிபிசியின் 800 மெகாவாட் (யூனிட்-2) தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்தத் திட்டம் தெலங்கானாவுக்கு 85% மின்சாரத்தை வழங்கும், மேலும் இந்தியாவில் உள்ள என்டிபிசியின் அனைத்து மின் நிலையங்களிலும் சுமார் 42% மிக உயர்ந்த மின் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும். இதற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ராவில் 660 மெகாவாட் (யூனிட்-2) வடக்கு கரண்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். வழக்கமான நீர்-குளிரூட்டப்பட்ட மின்தேக்கிகளுடன் ஒப்பிடும்போது நீர் பயன்பாட்டை இது 1/3 பங்காகக் குறைக்கும். இவ்வளவு பெரிய அளவிலான காற்று குளிரூட்டப்பட்ட மின்தேக்கி (ஏ.சி.சி) மூலம் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் திட்டம் இதுவாகும். இந்தத் திட்டத்திற்கான பணிகளைப் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சிபாட் என்ற இடத்தில் சாம்பல் அடிப்படையிலான குறைந்த எடைக்கான மொத்த ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் சிங்க்ரௌலி சூப்பர் அனல் மின் திட்டம்-3-க்கு   (2×800 மெகாவாட்) அடிக்கல் நாட்டினார்; சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள லாராவில் ஃப்ளூ கேஸ் CO2 முதல் 4ஜி எத்தனால் ஆலை; ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரியில் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை; மற்றும்  சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவில் சாம்பல் அடிப்படையிலான FALG மொத்த ஆலை ஆகியவையும் இதில் அடங்கும்.

ஏழு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், இந்திய மின் தொகுப்பு கழகத்தின் ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தேசிய நீர்மின் கழகத்தின் 380 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 792 மில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுனில் புந்தேல்கண்ட் சவுர் உர்ஜா நிறுவனத்தின் 1200 மெகாவாட் ஜலாவுன் அதி மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் பூங்காவிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பூங்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2400 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 2500 மெகாவாட் மின்சாரத்தை வெளிக்கொணரும் கொப்பல்-நரேந்திர மின் பகிர்மானத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டம் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் மற்றும் இண்டி கிரிட் ஆகியவற்றின் மின்துறை தொடர்பான பிற திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மின்சாரத் துறையைத் தவிர, சாலை மற்றும் ரயில் துறையிலும் திட்டங்கள் இந்த பயணத்தின் போது எடுத்துக் கொள்ளப்பட்டன. புதிதாக மின்மயமாக்கப்பட்ட அம்பரி அடிலாபாத் பிம்பல்குதி ரயில் பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 353பி மற்றும் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் தெலங்கானாவை மகாராஷ்டிராவுடனும், தெலங்கானாவை சத்தீஸ்கருடனும் இணைக்கும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

***

ANU/PKV/AG/KV