Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை இந்தியா தினம் – 2019 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


குஜராத் ஆளுநர் ஆச்சாரிய தேவ் விரத்ஜி, முதலைமைச்சர் விஜய் ரூபானிஜி, மத்திய-மாநில அரசுகளின் சகாக்களே, நைஜிரியா, இந்தோனேஷியா, மாலே ஆகிய அரசுகளின் பிரதிநிதிகளே, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்கத்தின் தலைவர்களே, நாடு முழுவதும் உள்ள தூய்மை இந்தியா பணியாளர்களே, உள்ளாட்சித் துறை நண்பர்களே, சகோதர, சகோதரிகளே,

 

எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, சபர்மதி நதிக்கரையில் கூடியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் நாட்டில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளை நிர்வகிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் அனைவரும் இடையறாது மேற்கொண்ட முயற்சிகள், அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பால் மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க பாடுபட்டுள்ளீர்கள்.

 

இந்த புனிதமான சபர்மதி கரையில், தேசப்பிதா மகாத்மா காந்திக்கும், எளிமையின் சின்னமான முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம், தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கிய நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகை ஆகியவை சேர்ந்து வருவது ஒரு தனித்துவமான தற்செயல் நிகழ்வாகும்.

 

உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. சபை இதனையொட்டி அஞ்சல் தலைகளை வெளியிட்டது. இன்று கூட அஞ்சல் தலைகளும், நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

 

சகோதர, சகோதரிகளே,

இங்கு வருவதற்கு முன்பு நான் சபர்மதி ஆசிரமம் சென்றேன். என்னுடைய வாழ்நாளில் நான் பலமுறை அங்கு செல்வதற்கு வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு முறையும் காந்தியே அங்கு இருப்பதாக நான் உணர்வேன். ஆனால் இந்த ஆண்டு அங்கு ஒரு புதிய சக்தி இருப்பதாக உணர்ந்தேன். சபர்மதி ஆசிரமத்தில் இருந்துதான் அவர் தூய்மையையும், சத்தியாகிரகத்தையும் அளித்தார். சபர்மதி நதிக்கரையில் மகாத்மா காந்தி சத்திய சோதனையை மேற்கொண்டார்.

 

சகோதர, சகோதரிகளே,

ஊக்கமளிக்கும் இடமான சபர்மதி இன்று தூய்மை இயக்கத்தின் மிகப் பெரிய வெற்றியைக் காண்கிறது. இந்த நேரம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியை சபர்மதி நதியின் முன்பாக ஏற்பாடு செய்திருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

நண்பர்களே,

இந்திய கிராமங்கள் இன்று திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இது அதிகாரத்தின் மூலம் நடக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தில், தானாக பொதுமக்கள் பங்கேற்று இந்த வெற்றியை அளித்துள்ளனர். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும், குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள், ஊராட்சித் தலைவர்கள், தூய்மை இந்தியா பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். தூய்மை இந்தியா விருதுகளைப் பெற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

 

தற்போது வரலாறு திரும்புவதாக நான் உணர்கிறேன். மகாத்மாவின் அழைப்பை ஏற்று நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் சத்தியாகிரக வழியைப் பின்பற்றியதை போல, தூய்மைக்கு கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அவர்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

 

5 ஆண்டுகளுக்கு முன்பு, செங்கோட்டையின் கொத்தளத்தில் நாட்டு மக்களுக்கு தூய்மையான இந்தியாவைப் பராமரிக்குமாறு அழைப்பு விடுத்தேன். அப்போது எனக்கு பொதுமக்கள் மீது நம்பிக்கை இருந்தது. உலகில் நாம் விரும்பும் மாற்றத்தை நமக்குள்ளிருந்து முதலில் கொண்டு வர வேண்டும் என்று மகாத்மா கூறுவார்.

 

இந்த மந்திரத்தைப் பின்பற்றி நாம் அனைவரும் கையில் துடைப்பங்களை ஏந்தினோம். வயது வித்தியாசம், சமூக பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் இந்த தூய்மையான, கண்ணியமான, மதிப்புமிக்க யாகத்தில் அனைவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

 

இன்று நமது வெற்றியைக் கண்டு உலகமே வியக்கிறது. உலகம் முழுவதும் இதற்காக நமக்கு மரியாதை அளிக்கிறது. கடந்த 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுத்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை 11 கோடிக்கும் மேல் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இது எனக்கு மிகப் பெரிய திருப்தியை அளித்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் எந்தவிதக் கவலையுமின்றி பள்ளிக்கு செல்வதைக் காண முடிகிறது. இருள் வருவதை எதிர்நோக்கி நமது கோடிக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் அடைந்து வந்த பொறுக்க முடியாத வேதனைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது கண்டு நான் திருப்தி அடைகிறேன். கொடிய நோய்களிலிருந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் கிராமப் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

 

தூய்மை இந்தியா இயக்கம் உயிர் காக்கும் வகையிலும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு இந்த இயக்கம் நேர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தியிருப்பதாக யுனிசெப் மதிப்பீடு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 75 லட்சக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. கிராமப்புற மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

 

மகாத்மா காந்தி, ஏழைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் விரும்பிய சுயராஜ்யம் கிராமங்களையும், ஏழை மக்களையும் தன்னிறவு பெற்றதாகவும், அதிகாரமிக்கதாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான். அது தற்போது நனவாகி உள்ளது.

 

தற்போது நாம் கழிவறைகளை கட்டி அவற்றை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியிருக்கிறோம். இதனை நாட்டில் பெரும்பகுதியினரின் நிரந்தர பழக்கவழக்கமாக மாற்ற வேண்டும். கழிவறைகள், முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். இதில் சேராதவர்களை அதற்குள் கொண்டு வர வேண்டும்.

 

அரசு அண்மையில் தொடங்கியுள்ள ஜல் ஜீவன் இயக்கம் இதற்கு உதவக் கூடியதாகும். தண்ணீரை நமது வீடுகளிலும், கிராமங்களிலும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் தண்ணீரை கழிவறைகளுக்கு பயன்படுத்தலாம். ஜல்ஜீவன் இயக்கத்திற்கு அரசு 3.5 லட்சம் கோடி ரூபாயைச் செலவிட தீர்மானித்துள்ளது. ஆனால், மக்களின் பங்களிப்பு இல்லாமல் இதைச் செயல்படுத்த முடியாது.

 

ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய 3 முக்கிய விஷயங்கள் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தவையாகும். இந்த 3-க்கும் பெரும் அபாயமாக பிளாஸ்டிக் உள்ளது. அதனால் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் குறிக்கோளை நாம் எட்ட வேண்டும். கடந்த 3 வாரங்களில் நாடு முழுவதும் இந்த இயக்கம் உத்வேகம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் திரட்டப்பட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது. பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

 

நாடு முழுவதும் தற்போது கோடிக்கணக்கான மக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது என உறுதிபூண்டுள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பயன் கிடைப்பதுடன் மிகப் பெரிய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு குறையும்.

 

மக்களின் பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதும் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரிடமிருந்து நாம் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாடு மிகப் பெரிய உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டபோது சாஸ்திரி, நாட்டு மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதை அவருடைய குடும்பத்திலிருந்தே அவர் தொடங்கினார்.

 

மகாத்மா காந்தி நாட்டுக்கு வாய்மை, அகிம்சை, சத்தியாகிரகம், தன்னிறைவு ஆகியவற்றை காட்டினார். தற்போது நாம் அதே பாதையை பின்பற்றி தூய்மையான, ஆரோக்கியமான முன்னேற்றமான, வலுவான புதிய இந்தியாவை கட்டமைப்பதில் முனைந்திருக்கிறோம். ஆரோக்கியமே மிக முக்கியமானது என காந்தி கூறினார். அதை பின்பற்றி கிராமப்புறங்களில் தற்போது தூய்மை இந்தியா பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு மனிதரும் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். அதற்காக யோகா தினம், ஆயுஷ்மான் பாரத், கட்டுடல் இந்தியா திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

உஜ்வாலா, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஜன்தன் யோஜனா, சௌபாக்யா யோஜனா, தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்கள் வாயிலாக காந்தியின் கனவை நனவாக்கி வருகிறோம்.

மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை எளிமைப்படுத்தி உள்ளோம்.

 

மகாத்மா காந்தியின் அனைத்து கனவுகளும் நனவாகி வருகின்றன. எந்த திட்டத்தின் வெற்றியும் பிரதமர், முதலமைச்சரின் வெற்றி அல்ல. 130 கோடி மக்களின் முயற்சியால் மட்டுமே இந்த வெற்றி கிட்டியுள்ளது. சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் வழிகாட்டுதலால் இது சாத்தியமாகி உள்ளது. 5 ஆண்டுகளாக அனைத்து ஊடகங்களும் இந்த முன்னேற்றத்திற்கு உதவி உள்ளன. நாட்டில் தற்போது நிலவும் சூழலை உருவாக்கியதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.