Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை இந்தியா தினம் – 2019-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


 

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அஞ்சல் தலை மற்றும் வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, அகமதாபாத்தில் இன்று (02.10.2019) தூய்மை இந்தியா தினம் – 2019 கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், அஞ்சல் தலை மற்றும் வெள்ளி நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.  மேலும், தூய்மை இந்தியா விருதுகளையும் அவர் வழங்கினார்.  முன்னதாக, சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.   அங்குள்ள நூல்நூற்பு மையத்தை பார்வையிட்ட அவர், குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.

 

‘தூய்மை இந்தியா தின’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊராட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும், சில தினங்களுக்கு முன் ஐநா சபையின் சார்பில், காந்திஜி பற்றிய அஞ்சல் தலை வெளியிட்ட பிறகு, இந்த நிகழ்ச்சி மேலும் பிரபலமடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.  தமது வாழ்நாளில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் வாய்ப்பு பலமுறை கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு முறை இங்கு வந்து செல்லும் போதும், புதிய சக்தி கிடைப்பதாகக் கூறினார்.

 

பல்வேறு கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்கள், குறிப்பாக இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கும், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் தமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.  வயது, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அப்பாற்பட்டு, தூய்மை, கண்ணியம் மற்றும் மரியாதையை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  நமது இந்த வெற்றியைக் கண்டு உலகமே வியப்பதாக கூறிய பிரதமர், இதற்காக நம்மை கவுரவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  நாடுமுழுவதும் 11 கோடி நவீனக் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்ததன் மூலம், 60 மாதங்களில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்த இந்தியாவைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பொதுமக்கள் பங்கேற்பும், தன்னார்வலர்களின் உழைப்பும், தூய்மை இந்தியா இயக்கத்தின் முத்திரையாகி இருப்பதுடன், இந்த இயக்கத்தின் வெற்றிக்கும் காரணமாகி இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த இயக்கத்திற்காக தங்களது இதயப்பூர்வ ஒத்துழைப்பை நல்கியதற்காக ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  பொதுமக்கள் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்கை 2022 க்குள் ஒழிப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார். 

 

தமது தலைமையிலான அரசு, மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.  அந்த வகையில், தற்சார்பு அடைதல், வாழ்க்கையை எளிமைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிப் பணிகளை கடைக்கோடிப் பகுதிக்கும் கொண்டு செல்வதை உறுதி செய்ய, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.   நாட்டின் மேம்பாட்டிற்காகவும், நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியடையச் செய்யவும் உறுதி ஏற்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.    இதுபோன்று 130 கோடி மக்களும் உறுதியேற்பதன் மூலம், நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.