Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் 2-ஆம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


2024-25-ஆம் ஆண்டு வரையிலான தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் 2-ஆம் கட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இயக்கம் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அது நீடிப்பதற்கும் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்.

எவர் ஒருவரும் விடுபடாமல், அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும். முந்தைய இயக்கம் போலவே செயல்படுத்தப்படவுள்ள 2-ஆம் கட்ட இயக்கத்துக்கு 2020-21 முதல் 2024-25 வரையிலான காலத்தில் மத்திய – மாநில அரசுகளின் பங்குகளையும் சேர்த்து மொத்த நிதித்தேவை ரூ.52,497 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 15-வது நிதிக்குழு முன்மொழிந்துள்ள ரூ.30,375 கோடி ஒதுக்கீட்டிலான ஊரக குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவுத் திட்டம் வரும் நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமலாக்கப்படும். திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாததோடு பிறவற்றையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தோடு, நிலத்தடி நீர் நிர்வாகமும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் இயக்கமும் இணைக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படும் வீடுகளில் கழிப்பறை கட்ட ஊக்கத்தொகை வழங்குவதற்கான தொகை ரூ.12,000 கோடியாக இருக்கும். இதற்கு தற்போதுள்ள விதிமுறைகளே தொடரும். திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கு நிதி அளிக்கும் விதிமுறைகள் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும். மேலும், கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கிராம அளவில் சமூக நிர்வாக துப்புரவு வளாகம் கட்டுவதற்கான நிதியுதவி ஒவ்வொரு வளாகத்திற்கும் ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிக்கப்படவுள்ள செயல்பாட்டு விதிமுறைகளின்படி, மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையேயான நிதிப்பகிர்வு வடகிழக்கு மாநிலங்களுக்கும், இமயமலை மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் 90:10 என்ற விகிதத்திலும், மற்ற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும், மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு 100:0 என்ற விகிதத்திலும் இருக்கும்.

02.10.2014 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ஊரகப் பகுதிகளில் துப்புரவு நிலை 38.7 சதவீதமாக இருந்தது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன்பயனாக 2019 அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மாநிலங்களும் ஊரகப்பகுதிகளைத் திறந்தவெளி கழிப்பிடம் அற்றவையாக அறிவித்தன.

******