தூய்மைக்கான மிக முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான ரூ.9600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். அம்ருத் 2.0-ன் கீழ் நகர்ப்புற நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.6,800 கோடிக்கும் அதிகமான திட்டங்கள், தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், கங்கை படுகை பகுதிகளில் நீரின் தரம் மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட ரூ.1550 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 10 திட்டங்கள் மற்றும் கோபர்தன் திட்டத்தின் கீழ், ரூ.1332 கோடிக்கு மேல் மதிப்புள்ள 15 சுருக்கப்பட்ட உயிர்வாயு (சிபிஜி) ஆலை திட்டங்கள் இதில் அடங்கும்.
தூய்மை இந்தியா தினத் திட்டம், இந்தியாவின் பத்தாண்டு கால துப்புரவு சாதனைகளையும், சமீபத்தில் முடிவடைந்த தூய்மையே சேவை இயக்கத்தில் இருந்தவர்களையும் வெளிப்படுத்தும். இந்த தேசிய முயற்சியின் அடுத்த கட்டத்திற்கும் இது களம் அமைக்கும். உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் குழுக்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களின் நாடு தழுவிய பங்கேற்பும் இதில் அடங்கும், இது முழுமையான தூய்மையின் உணர்வு இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்யும்.
தூய்மையே சேவை 2024-ன் கருப்பொருள், ‘பழக்க வழக்கத் தூய்மை– கலாச்சாரத் தூய்மை, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டில் தேசத்தை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. தூய்மையே சேவை 2024-ன் கீழ், 17 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்களிப்புடன் 19.70 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சுமார் 6.5 லட்சம் தூய்மை இலக்கு அலகுகளில் மாற்றம் எட்டப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட துப்புரவு சேவகர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நாம் இயக்கத்தின் கீழ் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.
—-
MM/KPG/KV