பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதில், இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகத்தில், விரைவான – வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விபரம்:
இந்த ஒப்பந்தம் கீழ்கண்ட அம்சங்களுக்கு வழிவகுக்கிறது-
துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதற்கான முன்அனுமதி மற்றும் ஏற்றுமதி அளவுக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும். இந்த நடைமுறை மூலம், இறக்குமதி ஒப்பந்தங்களின் உண்மைத் தன்மை எளிதில் உறுதி செய்யப்பட்டு, இறக்குமதியில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.
இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையில் கசகசா தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், கசகசா பயன்படுத்தும் இந்திய நுகர்வோருக்கு பலன் அளிப்பதையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.
பின்னணி:
ஒரு வழக்கு காரணமாக, துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வது தடைபட்டதால், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையில் கசாகசா விலை கடுமையாக உயர்ந்ததுடன், இறக்குமதியாளர்கள் பதுக்கலில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்தது. நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு தடை உத்தரவுகள் மற்றும் வழக்கு அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் கசகசா கிடைப்பது குறைந்து, நுகர்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சட்ட சிக்கல்கள், விலையேற்றம் மற்றும் பதுக்கலை தவிர்ப்பதற்கான மாற்று நடைமுறைகளை கடைபிடிக்க இந்தியா, துருக்கி அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உண்மையான புள்ளிவிபரங்களை பரிமாறிக் கொள்ளவும், துருக்கியில் சட்டரீதியாக, நேர்மையாக உற்பத்தி செய்யப்பட்ட கசகசாவை போதிய அளவிற்கு இறக்குமதி செய்யவும் வழிவகை செய்கிறது.