Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தும்கூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

தும்கூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்


தும்கூரில் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இதேபோல், தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பிரதமர், இலகு ரக ஹெலிகாப்டரையும் திறந்துவைத்தார்.

     பின்னர், அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, துறவிகள் மற்றும் முனிவர்களின் பிறப்பிடமாகத் திகழும் கர்நாடகா, ஆன்மீகம், அறிவாற்றல் மற்றும் அறிவியல் விழுமியங்களைக் கொண்ட இந்திய பாரம்பரியத்தை எப்போதும் பலப்படுத்தி வருகிறது என்றார்.  குறிப்பாக சிறப்பு வாய்ந்த தும்கூர் சித்தகங்கா மடம் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களையும் பிரதமர் எடுத்துரைத்தார்.  உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றின் பாரம்பரியங்களை பாதுகாத்த புஜ்ய சிவக்குமார் சுவாமி, ஸ்ரீ சித்தலிங்க சுவாமியை முன்னெடுத்துச் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களின் எளிதான வாழ்க்கை முறை, ஆயுதப்படையினரை வலுப்படுத்துதல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கோடிகளுக்கும் மேற்பட்ட  மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

கர்நாடக இளைஞர்களின் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் திறமையைப் பாராட்டிய பிரதமர் ட்ரோன்கள் முதல் தேஜஸ் ரக போர் விமானங்கள் தயாரிப்பு வரை உற்பத்தித்துறை வலுவடைவதாக அவர் தெரிவித்தார். மத்தியிலும் கர்நாடகாவிலும் ஒரே ஆட்சி நடைபெறுவதால் முதலீட்டாளர்களின் முதல் வாய்ப்பாக இம்மாநிலம் உள்ளது என்றும் அவர் கூறினார்.  பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் பொருட்களின் தேவையில், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது குறைய வேண்டும் என்ற உறுதிமொழியுடன் 2016-ஆம் ஆண்டு தாம் அடிக்கல் நாட்டியதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் திட்டம் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டதை எடுத்துரைத்தார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தளவாட உபகரணங்களை ஆயுதப்படையினர் இன்று பயன்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். துப்பாக்கிகள் முதல் பீரங்கிகள், விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், சரக்குப் போக்குவரத்து விமானங்கள் ஆகியவற்றை இந்தியா தயாரிப்பது குறித்து பிரதமர் குறிப்பிட்டார். விமானப் போக்குவரத்துத்துறை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கடந்த 2014 மற்றும் 15 ஆண்டுகளுக்கு முன்பு  இருந்ததைவிட 5 மடங்கு அதிகமாக கடைசி 8 முதல் 9 ஆண்டுகளில் இத்துறையில் முதலீடு செய்யப்பட்டதாக  தெரிவித்தார். இந்தியாவின் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள், நமது படையினருக்கும் மட்டும் அனுப்பப்படாமல் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், 2014-ஆம் ஆண்டிற்கு முன்பாக ஒப்பிடும் போது பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில், இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், அதன் வர்த்தக மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறினார். இது போன்ற உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் போது, ஆயுதப்படையினரை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்குவதாக திரு மோடி கூறினார். தும்கூரில் உள்ள  ஹெலிகாப்டர்  உற்பத்தி  தொழிற்சாலைக்கு அருகே உள்ள சிறிய  வர்த்தகமும், அதிகாரம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டிற்கே முன்னுரிமை என்ற உத்வேகத்துடன் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக பிரதமர் கூறினார். பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தப் பணிகள் மற்றும் தனியார் துறையில் ஏற்பட்ட வாய்ப்புகள் ஆகியவை குறித்து அவர் பேசினார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறித்து அண்மையில் பரப்பப்பட்ட வதந்திகளை குறிப்பிட்ட பிரதமர், எவ்வளவு பெரிய வதந்திகளாக இருந்தாலும் அதை உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கிணங்க அந்த நிறுவனத்தின் வெற்றியை  சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிறுவனம் வெற்றிகரமாக அந்த வதந்தியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்தார். உண்மையே இதற்குச் சான்று என்றும் அவர் கூறினார். அதே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்திய ஆயுதப்படையினருக்கு நவீன தேஜஸ் விமானங்களை தயாரிப்பதாகவும், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பாதுகாப்புத்துறையில்,  இந்தியாவின் தற்சார்பை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவுப் பூங்காவிற்கு பிறகு தொழிற்சாலை நகரம் என்பது தும்கூருக்கு மிகப் பெரிய வெகுமதி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், தும்கூரை நாட்டின் மிகப் பெரிய தொழில் மையமாக வளர்ச்சி அடைய உதவும் என்று பிரதமர் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் தொழில்நகரம் உருவாக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் மும்பை-சென்னை நெடுஞ்சாலை, பெங்களூரு விமான நிலையம் தும்கூர் ரயில் நிலையம், மங்களூரு துறைமுகம் ஆகியவற்றை இணைப்பதாகும் என்று கூறினார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் ஒரே அரசு சமூக உள்கட்டமைப்பு மற்றும் தரமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.  இந்த ஆண்டின் பட்ஜெட் குறித்து குறிப்பிட்ட பிரதமர், நீர்வள இயக்கத்திற்காக கடந்த ஆண்டைவிட ரூ.20,000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் தாய்மார்களும், சகோதரிகளும் தங்கள் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்க நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பிரதமர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் பயன் 3 கோடி கிராமப்புற குடும்பங்களிலிருந்து 11 கோடி கிராமப்புற குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வது குறித்து குறிப்பிட்ட பிரதமர், அப்பர் பத்ரா திட்டத்திற்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தும்கூரு, சிக்மங்களூரு, சித்ரதுர்கா, தேவன்கரே மற்றும் மத்திய கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயனடையும் என்றும் தெரிவித்தார். மழைநீரைச் சார்ந்துள்ள விவசாயிகள், பெறும் இந்தப் பயன்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மேம்பட்ட இந்தியாவிற்காக  அனைவரது வளர்ச்சியையும் முறைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு நடுத்தர மக்களுக்கு உகந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும் கூறினார். இந்த பட்ஜெட் சமர்த் பாரத், சம்பன் பாரத், ஸ்வயம்பூர்ணா பாரத், சக்திமான் பாரத், கதிவான் பாரத் என்ற திசையில், மிகப் பெரிய நடவடிக்கை என்று தெரிவித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான பட்ஜெட் இது என்றும் பிரதமர் கூறினார்.  ஏழை, இளையோர் மற்றும் வேளாண் துறையில் மகளிர் ஆகியோருக்கான பட்ஜெட்டின் பயன்கள் குறித்து அவர் விளக்கினார். 3 தரப்பினர்களையும் மனதில் வைத்து உங்களுடைய தேவைகள், உங்களுக்கான உதவிகள், உங்களுடைய வருவாய் ஆகிய 3 அம்சங்களை நாங்கள் மனதில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு வரை அரசு உதவிகளை பெறுவது இந்த சமூகத்தினருக்கு சிரமமாக இருந்த நிலையில், தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். அரசின் திட்டங்கள், அவர்களுக்கு கிடைக்காமல் இருப்பது அல்லது இடைத்தரகர்களால் சுரண்டப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், அனைத்து பிரிவினருக்கும் தமது அரசு அளிக்கும் விரிவான உதவிகள் குறித்து கூறினார். முதன் முறையாக ஊழியர் – தொழிலாளர் பிரிவினர் ஓய்வூதியம் மற்றும் காப்பீடு வசதி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது சிறிய விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகத் தெரிவித்தார். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அளிக்கப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார். இதை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் வெளியிடப்பட்டதாக கூறிய பிரதமர், வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பரா, கம்பரா, அக்கசலிகா, சில்பி, கேர்கேலஸ்தேவா, பாட்கி உள்ளிட்ட கைவினைஞர்கள், தங்களுடைய கைவினைப் பொருட்கள் செய்யும் திறனை மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களுக்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து பிரதமர் பட்டியலிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் ஏனைய மக்களுக்காக இலவச ரேஷனுக்கு ரூ.4 லட்சம் கோடியை அரசு செலவிட்டதாகக் கூறினார். ஏழை மக்களுக்கு வீடுகளை ஒதுக்க ரூ.70,000 கோடியை ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டின் அம்சங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், நடுத்தர வகுப்பினர் இதனால் பயனடைவார்கள் என்றும் கூறினார். வருமான வரியில் வரிப்பயன்களையும் அவர் விளக்கினார். ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு வரி இல்லை என்பதால் நடுத்தர வகுப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார் குறிப்பாக 30 வயதுக்கும் கீழே உள்ள இளையோர், புதியதாக வேலையில் சேர்ந்தோர், புதிய தொழிலைத் தொடங்கியவர் ஆகியோருக்கு ஒவ்வொரு மாதமும் அதிக அளவு பணம் அவர்களுடைய வருவாய் கணக்கில் வந்தடையும் என்றார். அதே போல், வைப்புத் தொகை வரையறையை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ..30 லட்சமாக உயர்த்தியதன் மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். முன்னதாக, விடுமுறை பணப்பலன்களுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம் ரூ.3 லட்சத்திலிருந்து தற்போது ரூ.25 லட்சத்துக்கு உயர்த்தப்பட்டிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை உள்ளடக்கிய நிதி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், பெண்களை நிதி சார்ந்த அதிகாரம் மூலம், வீடுகளில் அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் வீடுகளில் எடுக்கப்படும் முடிவுகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். இந்தப் பட்ஜெட்டில், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகள், அதிக அளவு வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு நாங்கள் மிகப் பெரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் கூறினார். மகளிர் சேமிப்பு சான்றிதழ்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் கூறிய பிரதமர், பெண்களுக்கு பொருளாதார அதிகாரத்தை அளிக்கும் மிகப் பெரிய முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார்.

கர்நாடகாவின் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பிரதமர்,  ‘ஸ்ரீ அன்னா’ என்ற அடையாளத்தை அளிக்கக் கூரும் என்ற நம்பிக்கையில் நாடு முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். சிறு தானியங்களின் உற்பத்திக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறித்து  தெரிவித்த அவர், இதன் மூலம் கர்நாடகாவின் சிறிய விவசாயிகள், சிறந்த பலனை அடைவார்கள் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு நாராயணசாமி, கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

பாதுகாப்புத்துறையில், தற்சார்பை அடையும் மற்றொரு நடவடிக்கையாக தும்கூருவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெல்காப்டர் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2016-ஆம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பசுமை ஹெலிகாப்டர் தொழிற்சாலை மூலம்  ஹெலிகாப்டர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படையும். இது ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையாகும். அடுத்த 20 ஆண்டுகளில், தும்கூருவில், 3 முதல் 15 டன் தரம் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் அப்பகுதியில் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது தும்கூருவில், திப்தூர் மற்றும்  சிக்கனயாகனஹல்லியில் 2 நீர்வளத்திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். திப்தூர் பல்வேறு கிராமங்கள் குடிநீர் விநியோகத்திட்டம் ரூ. 430 கோடி செலவில் அமைக்கப்படும். சிக்கனயாகனகஹல்லி தாலுக்காவில் 147 குடியிருப்புகளுக்கு ரூ.115 கோடி செலவில் பல்வேறு  கிராமங்கள் குடிநீர் விநியோகத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க வகை செய்யப்படும்.

*****

AP/ES/IR/UM/KPG/RJ