Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு


புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர், பொங்கல் திருநாளை முன்னிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பண்டிகை உற்சாகத்தைக் காண முடியும் என்றார். அனைத்துக் குடிமக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவின் நீரோடை தொடர்ந்து செல்ல  வேண்டும் என்று திரு. மோடி வாழ்த்தினார். நேற்று நடந்த லோஹ்ரி கொண்டாட்டங்கள், இன்று மகர உத்தராயண் பண்டிகை, நாளை கொண்டாடப்பட உள்ள மகர சங்கராந்தி மற்றும் விரைவில் மாக் பிஹுவின் தொடக்கம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நடைபெற்று வரும் பண்டிகை காலத்திற்காக  அனைத்து மக்களுக்கும் திரு மோடி  வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முகங்களை அடையாளம் கண்டு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர்களை சந்தித்ததை நினைவுகூர்ந்தார். இன்றைய நிகழ்ச்சிக்கான அழைப்பிற்காக மத்திய அமைச்சர் திரு எல்.முருகனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த உணர்வு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போன்றது என்று கூறினார்.  

மகான் திருவள்ளுவரை மேற்கோள் காட்டிய பிரதமர், தேசத்தைக் கட்டமைப்பதில் படித்த மக்கள், நேர்மையான வணிகர்கள் மற்றும் நல்ல பயிர் ஆகியவற்றின் பங்கை எடுத்துரைத்தார். பொங்கலின் போது, கடவுளுக்குப் புதிய பயிர் படைக்கப்படுகிறது.  இது ‘அன்னதாதா விவசாயிகளை’  பண்டிகைப்  பாரம்பரியத்தின் மையத்தில் வைக்கிறது என்று அவர் கூறினார். இந்தியாவின்  ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள கிராமப்புற, பயிர் மற்றும் விவசாயிகளின் தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், கடந்த முறை சிறுதானியங்களுக்கும் தமிழ் மரபுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசியதை நினைவுகூர்ந்தார். மேன்மையானஉணவான ஸ்ரீ அன்னா பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதற்கும், பல இளைஞர்கள் சிறுதானியங்களில் ஸ்டார்ட்அப் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஸ்ரீ அன்னா, சிறுதானிய விவசாயம் செய்யும் 3 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் சிறுதானிய வளர்ச்சியின்  மூலம் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர்.

பொங்கல் கொண்டாட்டங்களின் போது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் வீடுகளுக்கு வெளியே கோலம் வரையும் பாரம்பரியத்தைக் கவனித்த பிரதமர், மாவைப் பயன்படுத்தி தரையில் பல புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் இந்த வடிவமைப்பு உருவாகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, ஆனால் இந்தப் புள்ளிகள் அனைத்தையும் இணைத்து வண்ணங்களால் நிரப்பி ஒரு பெரிய கலைப்படைப்பை உருவாக்கும்போது கோலத்தின் உண்மையான தோற்றம் மிகவும் அற்புதமாக மாறும் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கோலத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு மூலையும் ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக இணையும் போது, நாட்டின் வலிமை ஒரு புதிய வடிவத்தில் தோன்றுகிறது என்றார். “ஒரே பாரதம் உன்னத  பாரதம்” என்ற  தேசிய உணர்வைப் பொங்கல் பண்டிகை பிரதிபலிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். காசி-தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட பாரம்பரியத்திலும் இதே உணர்வைக் காணலாம், இது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்பதைப் பதிவு செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்கான மிகப்பெரிய சக்தி இந்த ஒற்றுமை உணர்வுதான். செங்கோட்டையில் இருந்து நான் அறிவித்த ஐந்து உறுதிமொழிகளில் முக்கிய அம்சம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகும். பொங்கல் திருநாளில் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் தீர்மானத்திற்கு நம்மை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற அறைகூவலுடன் பிரதமர்  தமது உரையை நிறைவு செய்தார்.

*****

ANU/PKV/SMB/DL