Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் அவர்களே, ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் தளபதிகளே, பாதுகாப்பு துறை செயலர், என்சிசி தலைமை இயக்குநர், நாடு முழுவதும் இருந்து வந்துள்ள தேசப்பற்று சக்தி நிறைந்த என்சிசி மாணவர்களே,  இளைஞர்கள் நிரம்பிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாகும். எனக்கு மட்டுமல்லாமல், தொலைக்காட்சியில் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது சிறந்த அனுபவம்தான். உங்களது அணி வகுப்பு, சில மாணவர்களின் வானில் பறக்கும் சாகசங்கள், கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் நிச்சயமாக கவரும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, ஜனவரி 26-ம்தேதி நடந்த அணிவகுப்பில் சிறந்த முறையில் பங்கேற்றுள்ளீர்கள். உங்களது திறமைகளை உலகம் முழுவதும் பார்த்தது. சமூக வாழ்க்கையில் எந்த நாடுகளில் ஒழுக்கம் உள்ளதோ, அந்த நாடுகள்  அனைத்து துறைகளிலும்  சிறந்து விளங்கும்.  இந்திய சமுதாய வாழ்வில் ஒழுக்க உணர்வை ஊக்குவிப்பதில் என்சிசிக்கு  பெரும் பங்கு உள்ளது.  உங்களது இந்த ஒழுக்கம் மக்களை ஈர்க்குமானால், சமுதாயம் வலுவடையும், அதன் மூலம் நாடும் வலுப்பெறும்.

நண்பர்களே,  உலகின் பெரும் சீருடை இளைஞர் அமைப்பான என்சிசியின் பெருமை  நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. எங்கெல்லாம் இந்தியப் பாரம்பரியமத்தின் மிக்க துணிச்சலான சேவைகள் தேவையோ, அரசியல் சாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமோ, அங்கெல்லாம் என்சிசி மாணவர்கள் இருப்பார்கள். இதேபோல, சுற்றுச்சூழல், தண்ணீர் சேமிப்பை உள்ளடக்கிய எந்தத் திட்டமாக இருந்தாலும் அங்கு என்சிசியின் பங்கு  இருக்கும்.  வெள்ளம், இயற்கைப் பேரிடர்களிலும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் என்சிசி மாணவர்களின் பங்கு அளப்பரியது.

நமது அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள கடமைகளைப் பூர்த்தி செய்வது அனைத்து மக்களுக்கும் பொருந்தும். நக்சலிசம், மாவோயிசம் போன்றவை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக ஒரு காலத்தில் இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.  நாட்டின் நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் இந்தப் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். எப்போதெல்லாம், இதை மக்களும், சிவில் சமுதாயமும் பின்பற்றுகின்றனவோ,  அப்போது, ஏராளமான சவால்களை வெற்றியுடன் சமாளிக்கிறோம். நம் நாட்டின் பல பகுதிகளைப் பாதித்து வந்த நக்சலிசம், மாவோயிசத்தின் முதுகை ஒடிக்க மக்களின் இத்தகைய கடமை உணர்ச்சியும், பாதுகாப்பு படையினரின் துணிச்சலும் காரணமாக இருந்தன.  தற்போது, நக்சலிசம் என்னும் தீமை நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுருங்கி விட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வன்முறை பாதையைக் கைவிட்டு, வளர்ச்சி என்னும் பொது நீரோட்டத்தில் கலந்துள்ளனர். அதேபோல, கொரோனா காலத்திலும் மக்கள் சேர்ந்து தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் ஆற்றியதால், நம்மால் கொரோனாவை வெற்றி கொள்ள முடிந்துள்ளது.

நண்பர்களே, கொரோனா காலம் மிகவும் சவாலானது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  ஆனால், அது நாட்டுக்காக உழைக்கும் அசாதாரண வாய்ப்புகளைக்  கொண்டு வந்தது.  இதனால், நாட்டின் திறமைகளை மேம்படுத்தவும், தற்சார்பு இந்தியாவாக அதை மாற்றவும், சாதாரண நிலையிலிருந்து சிறந்த நிலைக்கு செல்லவும் முடிந்துள்ளது. இதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் என்சிசியை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின்  175 மாவட்டங்களில் என்சிசிக்கு புதிய கடமை உள்ளதாக ஆகஸ்ட் 15-ல் நான் அறிவித்தேன்.  இதற்காக, ராணுவம், விமானப்படை, கடற்படையினரால், சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.  என்சிசிக்கான பயிற்சி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் இருந்த நிலை மாறி, தற்போது,  98 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறு விமான பயன்பாட்டு இடங்கள் ஐந்தில் இருந்து 44 ஆக அதிகரித்துள்ளன. இதேபோல, துடுப்பு இடங்களும் 11-ல் இருந்து 60 ஆக அதிகரித்துள்ளன.

 

நண்பர்களே, இந்த மைதானத்துக்கு பீல்டு மார்ஷல் கரியப்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையும் உங்களை நிச்சயம் ஊக்குவிக்கும்.  கரியப்பாவின் வாழ்க்கை முழுவதும் தீரச்செயல்களால்  நிறைந்தது.  இன்று பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவின் பிறந்தநாளாகும்.  எனது நாட்டு மக்கள் அனைவரது சார்பாகவும், என்சிசி மாணவர்கள் சார்பாகவும், அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

பாதுகாப்பு படைகளில் சேருவது உங்களில் பலரது விருப்பமாக இருக்கக்கூடும். உங்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய அரசு பல்வேறு வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது. ஆயுதப் படைகளில், மாணவிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.  அண்மைக் காலங்களில், என்சிசியில் மாணவிகளின் எண்ணிக்கை 35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. உங்களில் பலர் எதிர்கால அதிகாரிகளாக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நண்பர்களே, லோங்கோவாலா நிலைக்கு வரலாற்றில் முக்கிய இடம் உள்ளது. 1971 போரில் நமது வீரர்கள் லோங்கோவாலாவில் உறுதியான வெற்றியைப் பெற்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போரில், நமது வீரர்கள் எதிரி நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்துக்கு  முன்னேறிச் சென்றனர். நமது வீரர்களிடம் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். இந்த வெற்றி கிடைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1971-ல் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த  வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தீரத்துக்கு நாட்டு மக்களாகிய நாம் தலை வணங்குவோம்.

நண்பர்களே, நீங்கள் தில்லிக்கு வரும்போதெல்லாம், மறக்காமல்  தேசிய போர் நினைவு சின்னத்துக்குச் சென்று, நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த  வேண்டும். குடியரசு தினத்தன்று மாறுதல்களுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள www.gallantryawards.gov.in என்ற வீர, தீரச் செயல்கள் விருது இணைய தளத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். என்சிசி டிஜிடல் தளத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது. மாணவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இது விரைவாக உருவெடுக்கும்.

 

நண்பர்களே, இந்த ஆண்டு இந்தியா, சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நுழைகிறது. இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125 வது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. நேதாஜியை பெருமைமிகு எடுத்துக்காட்டின் அடையாளமாக மாணவர்கள் கருத வேண்டும்.  சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை இந்தியா நிறைவு செய்யும் அடுத்த 25-26 ஆண்டுகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

நண்பர்களே, தொற்றுக்கு எதிரான சவால்களையும், நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட சவால்களையும் இந்தியா திறமையுடன் எதிர் கொண்டது. உலகின் மிகச்சிறந்த போர் எந்திரத்தை நாடு கொண்டிருக்கிறது. அதேபோல, நவீன ஏவுகணைகளையும் நாம் கொண்டிருக்கிறோம்.  ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கிரீஸ் ஆகிய நாடுகளின் உதவியால் ரபேல் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்ப முடிந்தது.  வளைகுடா நாடுகளுடனான உறவு வலுப்பட்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது.  அதேபோல, பாதுகாப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட உபகரணங்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுவும், 80 தேஜாஸ் விமானங்களுக்கான விமானப்படை ஆர்டரும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான போர் தளவாடங்கள் குறித்த கவனத்தை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு தளவாட சந்தை என்ற நிலையிலிருந்து மாறி, பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுப்பதை உறுதி செய்யும் .

நண்பர்களே, உள்ளூர் பொருட்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்க வேண்டும்.  கதர் ஆடையை நவநாகரிக உடையாக இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று கூறிய அவர், திருமணங்கள், திருவிழாக்கள், இதர விழாக்களில் இதனை அணிய வேண்டும்.  தன்னம்பிக்கையுள்ள இளைஞர்களே தற்சார்பு இந்தியாவுக்கு தேவை.  இதற்காக, உடற்தகுதி, கல்வி, திறமை ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்,  நவீன கல்வி நிறுவனங்கள், திறன் இந்தியா, முத்ரா திட்டங்கள் ஆகியவற்றில் இதற்கான புதிய உத்வேகத்தைக் காண முடிகிறது. கட்டுடல் இந்தியா, கேலோ இந்தியா இயக்கங்கள் மூலம், உடற்தகுதி, விளையாட்டுக்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இவற்றில் என்சிசி சிறப்பு திட்டங்களும் அடங்கும். 

புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தியாவின் கல்வி முறை  மழலையர் பள்ளிகளுக்கு முன்பிலிருந்து, பிஎச்டி வரை,  முற்றிலும் மாணவர்களை மையப்படுத்தியதாக மாற்றப்பட்டு வருகிறது.  தேவையற்ற அழுத்தத்தில் இருந்து நமது குழந்தைகளையும், இளம் தோழர்களையும் விடுவிக்கும் வகையில் ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், தங்கள் ஆர்வத்துக்கும், தேவைக்கும் ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கொள்ள அதில் வகை செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திலிருந்து விண்வெளி வரை, சீர்திருத்தங்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டால், நாடு முன்னேறும். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்னும் மந்திரங்களை துணையாகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

இந்த மந்திரங்களை நம் வாழ்வில் நாம் கடைப்பிடித்தால், தற்சார்பு இந்தியா தீர்மானத்தை அடைய அதிக காலம் ஆகாது. மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வருங்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது.