Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லியில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்ட பயனாளிகளிடையே பிரதமர் உரையாற்றினார்

தில்லியில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்ட பயனாளிகளிடையே பிரதமர் உரையாற்றினார்


தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்ற பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட நாடேங்கிலும் உள்ள ஒரு லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்களை வழங்கினார். ஐந்து பயனாளிகளுக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் காசோலைகளை அவர் வழங்கினார். தில்லி மெட்ரோவின் நான்காவது கட்டத்தின் கூடுதல் இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர், 100 நகரங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். பெருந்தொற்று காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வலிமையை நினைவுகூர்ந்த பிரதமர், அன்றாட வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் சாலையோர வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தில்லி மெட்ரோவின் லஜ்பத் நகர் – சாகேத்-ஜி பிளாக் மற்றும் இந்தர்லோக் – இந்திரபிரஸ்தா ஆகிய இரண்டு கூடுதல் வழித்தடங்களும் இன்று தொடங்கி வைக்கப்பட்டன என்று பிரதமர் தெரிவித்தார்.

கடின உழைப்பு மற்றும் சுயமரியாதை மூலம் தங்கள் குடும்பங்களின் தேவைகளை கவனித்துக் கொள்ளும் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகளை பிரதமர் பாராட்டினார். அவர்களின் விற்பனை வண்டிகள் மற்றும் கடைகள் சிறியதாக இருந்தாலும், அவர்களின் கனவுகள் மிகப்பெரியவை என்பதாக பிரதமர் திரு மோடி தெரிவித்தார். கடந்த கால அரசுகள் சாலையோர வியாபாரிகளின் நலனில் எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும், இது அவர்கள் அவமரியாதையையும், சிரமங்களையும் எதிர்கொள்ள வழிவகுத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். அதிக வட்டி கடன்களால் அவர்களின் நிதி தேவை பூர்த்தி செய்யப்பட்டதாகவும், சரியான நேரத்தில் செலுத்தப்படாதது மேலும் அவமரியாதையையும், அதிக வட்டிச் சுமைகளையும் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். வங்கிகள் எந்தவொரு கடன் உத்தரவாதத்தையும் வைத்திருக்காததால் அவர்களால் அணுக இயலவில்லை என்று அவர் கூறினார். இதுபோன்ற தருணங்களில், வங்கிக் கணக்குகள் இல்லாததாலும், ஆவணங்கள் இல்லாததாலும் வங்கிக் கடன்களைப் பெறுவது சாத்தியமற்றதாகிவிட்டது. “முந்தைய அரசுகள் சாலையோர விற்பனையாளர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்தவில்லை, அவர்களின் பிரச்சினைகளைச் சமாளிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை” என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

“உங்கள் வேலைக்காரன் ஒருவன் வறுமையிலிருந்து மீண்டு வந்திருக்கிறான். நான் வறுமையில் வாடியுள்ளேன். அதனால்தான் யாராலும் கவனிக்கப்படாதவர்கள், அவர்கள் மீது அக்கறை காட்டியது மட்டுமின்றி, மோடியால் வணங்கப்படவும் செய்தனர்” என்று பிரதமர் கூறினார். பிணையமாக உத்தரவாதம் அளிக்க எதுவும் இல்லாதவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் உறுதியளிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். சாலையோர வியாபாரிகளின் நேர்மையையும் அவர் பாராட்டினார். சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் கணக்குப் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாட்டைப் பொறுத்து 10,20 மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். இதுவரை 62 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.11,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோயின் போது பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், சாலையோர வியாபாரிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், கொள்முதல் குறித்த டிஜிட்டல் பதிவுகளும் வங்கியிலிருந்து பலன்களைப் பெற உதவுகின்றன என்றும் கூறும் சமீபத்திய ஆய்வை சுட்டிக் காட்டினார். ஆண்டுதோறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1200-ஐ திரும்பப் பெறுதல் முறை மூலம் மீண்டும் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகள் தங்களது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிரமங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்களில் பலர் வாழ்வாதாரத்திற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர் என்று குறிப்பிட்டார். “பிரதமரின் சாலையோர  வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம் பயனாளிகளை வங்கிகளுடன் இணைப்பது மட்டுமல்லாமல், பிற அரசு சலுகைகளுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் திரு மோடி கூறினார். இலவச ரேஷன், இலவச சிகிச்சை மற்றும் இலவச எரிவாயு இணைப்புகள் ஆகியவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் அணுகுமுறை நாடு முழுவதும் எங்கிருந்தும் இலவச ரேஷன் பெற அனுமதிப்பதாக அவர் எடுத்துரைத்தார்.

அனைத்து வசதிகளுடன் கூடிய 4 கோடி வீடுகளில், ஒரு கோடி வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். குடிசைகளுக்கு பதிலாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதற்கான மாபெரும் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தில்லியில் ஏற்கனவே 3,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும், 3500 வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன என்றும் கூறினார். அங்கீகரிக்கப்படாத காலனிகளை விரைவாக முறைப்படுத்துதல் மற்றும் ரூ.75,000 ஒதுக்கீட்டுடன் பிரதமரின் சூரிய ஒளி இலவச மின்சார திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு இரவும் பகலும் உழைத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். நடுத்தர வர்க்கம் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதை உதாரணமாக கூறிய அவர், வீடுகள் கட்டுவதற்கு ரூ.50,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை சமாளிக்க பல நகரங்களில் மெட்ரோ சேவைகள் மற்றும் மின்சார பேருந்துகளை இயக்குவதில் துரிதமான பணிகள் மேற்கொள்ளப்படுவதை அவர் குறிப்பிட்டார். “கடந்த 10 ஆண்டுகளில் தில்லி மெட்ரோ கட்டமைப்பு இரண்டு மடங்கு விரிவடைந்துள்ளது” என்று கூறிய பிரதமர், உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் தில்லியின் மெட்ரோவின் விரிவான கட்டமைப்பும் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதிக்கான நமோ பாரத் விரைவு ரயில் இணைப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார். தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 1000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது என்று பிரதமர் திரு மோடி கூறினார். மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தில்லியைச் சுற்றி ஏராளமான அதிவேக நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  இவ்வார தொடக்கத்தில் துவாரகா அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சி பற்றி பேசிய பிரதமர், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை கோலோ இந்தியா திட்டம் அளித்துள்ளது என்றும், எளிதில் அணுகக்கூடிய வசதிகள் கிடைப்பதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு தரமான பயிற்சிக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மோடி அயராது உழைத்து வருகிறார். ‘பொதுமக்களின் நலனை நாட்டின் நலன்’, ஊழல் மற்றும் சலுகையை அடியோடு அகற்றி, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதே மோடியின் சிந்தனை” என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

“சாமானிய குடிமக்களின் கனவுகள் மற்றும் மோடியின் உறுதிப்பாடு ஆகியவை பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன” என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2014687)

SM/IR/RS/KRS