பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் 8,800 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ‘திறன் இந்தியா திட்டத்தை (SIP)’ 2026ம் ஆண்டு வரை தொடரவும், மறுசீரமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தேவைக்கான உந்துதல், தொழில்நுட்பம் பயிற்சி, தொழில்துறையுடன் இணைந்த பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் திறமையான, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள தொழிலாளர் சக்தியை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த ஒப்புதல் எடுத்துக் காட்டுகிறது.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 4.0, பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டம், மக்கள் கல்வி நிலைய திட்டம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் இப்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த திட்டமான “திறன் இந்தியா திட்டத்தின்” கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாடு, வேலையில் பயிற்சி, சமூக அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பின்தங்கிய சமூகங்கள் உட்பட நகர்ப்புற, கிராமப்புற மக்கள் உயர்தர தொழிற்கல்வியை எளிதில் அணுகுவதை இவை உறுதி செய்கின்றன. திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் மூன்று முன்னோடி திட்டங்களின் கீழ், இன்று வரை 2.27 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.
திறன் இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியின் மூலம், இன்றைய வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்பு சூழலில் தொடர்ச்சியான திறன் மேம்பாடு, மறுதிறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்த அரசு முயல்கிறது. இந்த முன்முயற்சி அவ்வப்போது தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளுக்கு நேரடியாக பங்களிக்கும். இது தொழிலாளர் மேம்பாட்டுக் கொள்கைகள் பொருளாதார, தொழில்துறை போக்குகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்யும்.
திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் தொழிற்கல்வியை வலுப்படுத்துதல், தொழில் பழகுநர் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், வாழ்நாள் கற்றலை ஊக்குவித்தல் ஆகியவற்றில் உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் தொழிலாளர் சக்தி, எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதையும், திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்பில் உலகளாவிய தலைவராக நாடு நிலைநிறுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.skillindiadigital.gov.in/home
*****
PLM/KV