Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு சுக்பீர்சிங் பாதல் இல்லத்தில் நடைபெற்ற குருநானக் ஜெயந்தி விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


குருநானக் ஜெயந்திக்காக உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இத்தகைய நல்ல தயாளமான பணியைச் செய்வதற்கு என்னைப் போன்ற சாதாரண நபருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு மகத்தான குருபரம்பராவும், மற்றும் குருநானக் தேவ் அவர்களின் வாழ்த்துக்களும்தான் காரணம் ஆகும். எனவே, இன்றைக்கு நாம் செய்யும் எந்த ஒரு நல்லப் பணியும் நமது முன்னோர்களின், மகான்களின் வாழத்துக்களால்தான். நாம் மிகவும் சாதாரண முக்கியத்துவம் உள்ளவர்கள்தான். எனவே, இவ்வளவு பெரிய கவுரவத்திற்கு நான் உரியவன் அல்ல. பல நூற்றாண்டுகளாக நாம் பெற்றிருக்கின்ற இத்தகைய மகத்தான ஆளுமைகளும், முன்னோர்களும் தங்களின் தியாகத்தாலும், தவத்தாலும் இந்த தேசத்தை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறார்கள். அனைத்து கவுரவமும் அவர்களுக்கே உரித்தானது.

குஜராத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின்போது, கட்ச் பகுதியின் லாக்பாட் கூட பாதிக்கப்பட்டது. இங்கு குருநானக் தேவ் அவர்களோடு தொடர்புடைய குருத்வாரா இன்று அப்படியே உள்ளது. அவரது பாதரட்சைகள் இன்னமும் அங்கே இருக்கின்றன. நிலநடுக்கத்தால் குருதுவாரா முன்பு அழிந்துவிட்டது. குஜராத் முதலமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கட்ச் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுகட்டுமானம் செய்வதை முதல் பணியாக எடுத்துக் கொண்டேன். மோசமாக சேதமடைந்த குருதுவாராவையும் நான் பார்வையிட்டேன். குருதேவின் ஆசிகளுடன் சில பணிகள் செய்வது எனது பொறுப்பாக அமைந்தது. குருத்வாராவை மறுகட்டுமானம் செய்ய நான் முடிவு எடுத்தேன். இருப்பினும், ஒரு கவலை இருந்தது. இதனைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வகையான பொருள்களும், சரியான நபர்களும், நமக்குக் கிடைக்க வேண்டுமே; மிகச் சரியான பாதையில் அது பயன்படுத்தப்பட வேண்டுமே என்பதுதான் அந்தக் கவலை. இன்று அந்த இடம் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

விமானப் பயணத்தை மலிவானதாக்கும், உதான் திட்டத்தை நாங்கள் தொடங்கியபின், முதல் இரண்டு இடங்களில் ஒன்றாக நான்டெட் சாகிப் இருந்தது. நான்டெட் சாகிபின் ஆசிகள் இன்னமும் என்னுடன் இருப்பதாக நான் நம்புகிறேன். பல ஆண்டுகள் பஞ்சாபில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இருந்தது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் உங்களுடனான வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களை நான் அறிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும். பாதல் அவர்களின் குடும்பத்தோடும் நான் நெருக்கமானவன். குஜராத்திலேயே நான் தங்கியிருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. குஜராத்துக்கும் பஞ்சாபுக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதாக நான் எப்போதுமே நம்புகிறேன். ஏனெனில் ‘பாஞ்ஜ்-ப்யாரே’-ல் ஒன்று குஜராத்தின் துவாரிகாவில் உள்ளது. எனவே, துவாரிகா இடம் பெற்றுள்ள ஜாம்நகர் மாவட்டத்தில் குரு கோவிந்த் சிங் அவர்களின் பெயரில் ஒரு மருத்துவமனையை நாங்கள் கட்டியிருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மகத்தான ஆளுமைகள், நாட்டுக்கான ஒற்றுமை மந்திரத்தைக் வழங்கியிருக்கிறார்கள். குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களின் சாரமாகும். குர்பானியில் நாம் இதனை உணர முடியும். அனைவரும் சமம் என்பதை உணர முடியும். ஒவ்வொரு வார்த்தையும், பிரகாசமான வழியில் அனைத்தையும் விளக்கி நமக்கு வழிகாட்டுகிறது. சமூகத்தீமைகள் மற்றும் வகுப்பு வேறுபாடுகள் போன்ற அந்தக் காலக் கட்டத்தின் பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக அது காட்டியது. வகுப்பு மற்றும் சாதி வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர, ஒற்றுமையை மேம்படுத்த, இறைவனுக்கு அர்ப்பணிப்புடன் அனைத்தும் செய்யப்படுவதை உறுதிப்படுத்த அது முயற்சித்தது. இத்தகைய மகத்தான பாரம்பரியங்கள் ஒவ்வொருவரையும் ஈர்ப்பதாக இருக்கட்டும்! குர்பானியைவிட, குருநானக் அவர்களின் வழிகாட்டுதல்களைவிட, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு செய்தியைவிட மகத்தானது எதுவுமில்லை. நாட்டின் ஒற்றுமைக்கும். ஒருமைப்பாட்டுக்கும், நாம் இத்தகைய வலுவான செய்திகளைக் கொண்டிருக்கிறோம்.

1947-ல் கர்த்தார்பூருக்கு என்ன நடந்ததோ அது நடந்ததாகவே நான் நம்புகிறேன். இத்தகைய சில நிகழ்வுகள், அரசுகளுக்கும், ராணுவங்களுக்கும் இடையே, நடந்துள்ளன. அது அப்படியே இருக்கட்டும். இதிலிருந்து விடுபட வழியிருக்கும் என்றால் அதனைக் காலம்தான் சொல்லவேண்டும். இருப்பினும், மக்களோடு மக்களுக்கான தொடர்பு மிகப் பெரும் பலமாகும். பெர்லின் சுவர் விழும் என்று யார் நினைத்திருக்க முடியும்? குருநானக் அவர்களின் ஆசியுடன் கர்த்தார்பூர் சாலை வெறும் சாலையல்ல, மக்களை இணைப்பதற்கான கருவிஎன நிரூபிக்க முடியும் என்பதை யார் அறிவார்! குர்பானியின் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு பலம் அளிக்கிறது ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற சிந்தனையால் வளர்த்தெடுக்கப்பட்ட மக்களாக நாம் இருக்கிறோம். மற்றவர்களுக்கு எந்தத் தீங்கையும் ஒருபோதும் நினைக்காதவர்கள் நாம். 550 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து சாதனங்கள் முறையாக இல்லாத காலத்தில் குருநானக் தேவ் அவர்கள், அசாமிலிருந்து கட்ச் வரை ஒட்டுமொத்த தேசத்தையும் நடந்தே பயணம் செய்திருக்கிறார். பாதயாத்திரையின் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் உள்வாங்கியிருக்கிறார். அவருடைய தியானமும், தவமும் எத்தகையது! இன்று குருதேவின் பிறந்தநாள் நமக்குப் புதிய ஊக்கத்தையும், ஆர்வத்தையும், ஈர்ப்பையும் கொண்டுவந்து நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பராமரிப்பதற்கான பலத்தை அனைவருக்கும் வழங்கும். ஒற்றுமையே பலமாகும். லங்கார் எனப்படும் மகத்தான மரபு உணவு வழங்கும் ஒரு முறை மட்டுமல்ல, இதுவே நமது மாண்பும், நமது பாரம்பரியமும். இதிலே பாகுபாடு இல்லை. இத்தகைய மகத்தான பங்களிப்பு மிக எளிய வழியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய புனிதமான நிகழ்ச்சியில், குரு கிரந்த் சாகிபின் முன்னிலையில், இந்த மகத்தான பாரம்பரியத்திற்குப் பணிந்து குருக்களின் மிகப்பெரும் தியாகங்களையும், அவர்களின் தவங்களையும் வணங்கி நீங்கள் எனக்கு அளித்திருக்கும் கவுரவம் எனக்குரியது அல்ல. இது இந்த மகத்தான பாரம்பரியத்திற்கு உரியதாகும். எவ்வளவு நாம் செய்திருந்தாலும் அது போதாது. மேலும் சிறந்த பணியாற்றும் பலத்தை நாம் பெறுவோமாக! உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

எஸ்எம்பி – கீதா